ஒரு வழியா கொலு வெச்சாச்சு..... 9 நாள் விசேஷம்... போன வருடம் தான் என்னிடம் என் நண்பர் கேட்டாரு... கொலு எதுக்கு ? ஏன் வெக்கனும் ? என்ன ஐதீகம் ? இப்படி கேட்ட உடனே கொஞ்சம் ஆடித்தான் போனேன்... இருந்தாலும் இந்த முறை கொலுக்கு படி வெக்கும் பொது தோன்றிய சில எண்ணங்கள்..
பொதுவா கொலு 3 அல்லது 5 அல்லது 7 படிகளில் பொம்மையை அடுக்கி வைப்பார்கள்... இந்த எண்களுக்கு பின் நிச்சயம் எதோ அர்த்தம் இருக்க வேண்டும்.. என்னவாக இருக்கும் ?
3 வள்ளி வடிவத்தில் இருக்கும் இச்சா ஷக்தி, தெய்வயானை வடிவத்தில் இருக்கும் கிரியா ஷக்தி, அழகன் முருகன் வடிவத்தில் இருக்கும் ஞான ஷக்தி யாக இருக்கலாம்; இல்லை சங்கீத மும்மூர்த்திகள் மூன்று பேரை அவர்கள் பக்தியை குறிப்பதாக இருக்கலாம்; நவராத்திரி பண்டிகை துர்கா, சரஸ்வதி, லக்ஷ்மி என்று மூன்று தேவதைகளை கொண்டாடுவதன் அடையாளமாக இருக்கலாம்.. படைத்தல், காத்தல், அழித்தல் என்பது இந்த உலகத்தில் தவிர்க்க முடியாது என்று உணர்த்தி கொண்டிருக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவனை குறிப்பதாக இருக்கலாம்...சொல்லி கொண்டே போகலாம்..
5 பஞ்ச பூதங்களை வணங்க வேண்டும் என்று குறிப்பதாக இருக்கலாம்.. ஐம்புலன்களையும் அடக்கி வாழ வேண்டும் என்று உணர்த்தும் விழாவாக இருக்கலாம்; விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் சேர்த்து 5 வேதங்களை குறிப்பதாக இருக்கலாம்... பஞ்சாங்கம் சொல்லும் திதி, வாரம், நக்ஷத்ரம், கரணம், யோகம் ஒருவரது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை குறிக்கலாம்; பஞ்ச பாண்டவர்களின் பக்தி, நேர்மையை குறிக்கலாம்... சொல்லி கொண்டே போகலாம்..
7 குண்டலினியின் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விஷுத்தி, ஆங்க்யா, சஹஸ்ரம் சக்கரங்களை குறிப்பதாக இருக்கலாம்; சப்தரிஷிகளை வணங்கும் விதமாகவும் இருக்கலாம்; நவக்ரஹங்களில் ராஹு கேது என்ற சாயா க்ரகங்கள் அல்லாத ஏழு க்ரகங்களை குறிக்கலாம்; வாரத்தின் ஏழு நாட்களையும் நாம் வணங்கி துவங்க வேண்டும் என்று குறிக்கலாம்; ஏழு ஸ்வரங்கள் அடிப்படையில் அமைந்த பாடலும் அதன் மூலம் உணரும் பக்தியையும் குறிக்கலாம்; சொல்லி கொண்டே போகலாம்..
சரி... ஒரு உதாரண கொலுவை எடுத்துப்போம்.. 3 படி என்று வைத்து கொள்வோம்.... கீழே இருக்கும் நிலை என்னவாக இருக்க முடியும் ? மர ஜடமாக நாம் இல்லாமல், இயற்கை அன்னை கொடுக்கும் பொருள்களில் இருந்து வாழ ஆரம்பித்து திருமண பந்தத்தில் இணைந்து இந்த உலக வாழ்க்கையில் ஈடு படுகிறோம்... நமக்கு விதித்த கடமைகளை ஒழுங்காக செய்து நம் வாழ்கையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும்..
அடுத்த நிலை என்றால் என்ன ? கடவுளை வணங்குவது.. மேலே சொன்ன பல விதமான பக்தி நிலைகளில் அல்லது வெளிப்பாடால் வணங்குவது... கோவிலுக்கு போவது; கடவுள் பெயரை உச்சரிப்பது; கடவுள் பூமியில் 10 அவதாரங்களில் தோன்றி மனிதன் எப்படி வாழ வேண்டும்.. எந்தெந்த நிலைமையில் எப்படி சமாளிக்க வேண்டும் என்று நமக்கு சொல்லி தந்ததை நினைந்து அதன் படி நடக்க வேண்டுவது.. என்று நம் வாழ்கையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
அடுத்த நிலை ?? அது நமக்குள் இருக்கும் கடவுளை அறியும் நிலையாக இருக்கலாம்.. 3 சக்திகளை உணர்ந்து, ஐம்புலன்களை அடக்கி வாழ்ந்து; பஞ்ச பூதங்களை வணங்கி; குண்டலியின் மூலம் நம்மை நாம் உணர்வது... கடவுளாகவே மாறுவது; எந்த ஒரு ஜீவனும் கடவுள் தான்.. அவனுக்குள் கடவுள் இருக்கிறான் என்று உணர்வது.. உணர்ந்து மற்றவரை மதித்து வாழ்ந்து முக்தி நிலையை அடைவதாக இருக்கலாம்..
இவ்வளவு தானா இருக்கும் ? இத்தனை யுகங்களாக கொண்டாடும் நவராத்திரி பண்டிகைக்கு பின் ? யோசிக்க வேண்டிய விஷயம் தான்....