Search This Blog

Showing posts with label திரைப்படப் பார்வை. Show all posts
Showing posts with label திரைப்படப் பார்வை. Show all posts

Friday, December 15, 2017

அருவி

முதல் திரைப்படம் என்று சொல்வதை விட முத்திரை பதித்த திரைப்படம் இவர்களுக்கு என்று இயக்குனர் திரு அருண் பிரபு புருஷோத்தமன் அவர்களுக்கும்,  படத்தின் நாயகி அதித்தி பாலனுக்கும் ஒரு சபாஷ் போட வேண்டிய படம் "அருவி"
Image result for aruvi movie poster



சர்வதேச பனோரமா பிரிவு விருது, ஷாங்காய் அனைத்துலக திரைப்பட விழாவின் விருது என்று  பல விருதுகளை, வெளியாவதற்கு முன்பே பெற்றுள்ள திரைப்படம்பிரதான கதாபாத்திரமான அருவிக்கு மட்டுமில்லாமல் திரைப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. (Rolling  Sir என்ற வசனத்தை கடைசி 1 மணி நேரத்தில் பார்வையாளர்களையும் ஒவ்வொரு இடத்திலும் கதாபாத்திரத்தோடு சேர்த்து சொல்ல வைத்தது இயக்குனரின் வெற்றி). கதாபாத்திரத்துக்கு பொருந்தும்  திருநங்கை உள்பட  எளிய மனிதர்களையே திரைப்படம் முழுக்க பார்க்க முடிகின்றது. 

கதையும் கதை சொல்லவந்த விதமும் ஒருவித எதிர்பார்ப்பை கண்டிப்பாக உண்டாக்குகிறது. அடுத்து என்ன நடக்கும் என்று ஓரிடத்திலும் சொல்ல முடியாத ஒரு விறுவிறுப்பு. அழவைத்துவிடுவார் என்று நினைக்கும் இடத்தில்  வயறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைத்து, சிரிப்பு வர வேண்டிய இடம் என்று நினைத்தால் அழவைத்துவிடுகிறார்கள் கதாப்பாத்திரங்கள்.  முக்கியமாக, அருவி, தன்னை படம் முழுவதும் மிகவும் வருத்திக்கொண்டு  வெகு இயல்பாக வெறும் முகபாவத்தை வைத்தே கடைசி வரை நம்மை மிரட்டுகிறார். இவரைப் போன்ற திறமைசாலிகளை, நமக்கு பார்க்க மட்டும் இல்லை  - பார்க்கப்  பார்க்கவும் பிடிக்கும். 

படத்தின் கதாநாயகி அருவி பேசக்கூடிய விஷயம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு வசனமும்  கைதட்டலை பெறுகிறது.  "போலீஸ் கிட்டே புடிச்சி குடுத்துடுவியா ? அங்கே கூட எய்ட்ஸ் பேஷண்ட்க்கு இடம் கிடையாது", "தப்பு செஞ்சவங்களை மன்னிப்பு கேக்க சொல்லாம, பாதிக்கப்பட்ட என்னை கேள்விகேட்டு உங்க TRP ரேட்டிங்க ஏத்திக்கறீங்களே", "இந்த நோய் வந்துட்டா கண்டிப்பா, தகாத உடலுறவு தான் காரணம்னு சொல்லி பெத்த அம்மா அப்பாவே வெறுத்துடுவாங்க" போன்ற வசனங்கள் மூலம் இயக்குனரின் சமுதாய அக்கறை தெரிகிறது.

இதில் வரும் பாடல்கள் கேட்கும்போது நன்றாக இருக்கிறது. பிறகு மனதில் ஏனோ நிற்கவில்லை. சமுதாயத்தை பழி வாங்குகிறாள் அருவி என்று தெரிந்தாலும் அதுதான் அவளின் நோக்கமா என்று இன்னும் ஆணித்தரமாக சொல்லியிருக்கலாம். சின்ன படத்தை நீட்டியிருக்கிறார்கள்  என்று ஆங்காங்கே (முக்கியமாக கடைசி காட்சிகளில்)  தோன்றினாலும் படத்தின் பல நல்ல விஷயங்கள் அதை சொல்ல விடாமல் செய்கிறது என்பதே நிதர்சனம்.  


புதிய முயற்சியை ஊக்குவிக்கவும், புதிய முகங்களை வரவேற்கவும் இந்தப் படம் திரையரங்கில் போய் பார்க்கவேண்டிய படம். 

Monday, September 24, 2012

தோனி

ரொம்ப நாள் ஆச்சு சிந்தனை குதிரையை ஓடவிட்டு... சமயத்துல இப்படி ஆயிடும்.. எதையும் எழுதத்  தோனாது.. எதையும்  செய்யத் தோனாது.

சமீபத்தில் பார்த்த பழைய திரைப்படம் ஒன்று தான் திரும்ப என்னை யோசிக்க வைத்தது. தமிழ் சினிமா எத்தனையோ படங்களை படைத்திருக்கிறது. இதில் குடும்ப உறவு பற்றி படங்கள் ஏராளம். அதில் அப்பா-பிள்ளை உறவு முறையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் சற்றே குறைவு தான் என்று சொல்ல வேண்டும்.



மேலோட்டமாக இது இந்திய பாடத் திட்டத்தில் மாறுதலை கொண்டு வர பாடுபடும் ஒரு அப்பாவின் குமுறல் என்று பார்க்க எண்ணினாலும் அதையும் தாண்டி ஒரு சமுதாய பிரச்சனையை இந்தப் படத்தில் நான் பார்க்கிறேன். என்றென்றும் தலைமுறை தலைமுறையாக இருக்கும் பிரச்னையை பிரதிபலிக்கும் படமாகத்தான் பார்க்க தோன்றுகிறது. அப்பா-மகனுக்கும் இடையே இருக்கும் ஒரு சிறிய (இல்லை இல்லை பெரிய இடைவெளியை முரண்பாட்டை) மையமாக எடுக்கப்பட்ட படம்; பார்க்க வேண்டிய படம் என்று தான் தோன்றுகிறது..


அப்பாவின் அனுபவம் - மகனின் ஆசைகள்; அப்பாவின் ஆதங்கம் - மகனின் தவிப்பு; அப்பாவின் விவேகம் - மகனின் வேகம்; இப்படி பல ஆண்டுகளாக பல தலைமுறையில் பார்த்தது தான் என்று இந்த படத்தை ஒதுக்கி வைக்கவும் என் மனம் இடம் கொடுக்கவில்லை... காரணம் - இத்தனை வருடங்களாக இத்தனை தலைமுறையாக  - இன்றும் முடியாத பிரச்சனையாக இது இருக்கிறது என்ற உண்மை..

மகனைத் தன் தோள் மீது அமர்த்தி கூட்டிக்கொண்டு போகும் போது தான் காணாத உலகத்தை மகன் காண வேண்டும் என்று அப்பா ஆசை படுகிறார் என்று சொல்லி வந்த சமூகம் அந்த பையனின் காலை கெட்டியாக தன் தோளில் புடித்து வைத்திருக்கிறார் அப்பா என்ற உண்மையை மறைத்தது.. ஏனோ மறந்தது... அதே போல் பிள்ளையும் பார்க்கின்ற விஷயத்தை எல்லாம் அப்பா விடம் சொல்லுவான் என்று சொன்ன சமூகம் அவன் பார்க்கின்ற விஷயங்கள் அவனுள் வேறு ஒரு பரிமாணத்தை வளர்க்கிறது என்ற உண்மையை மறைத்தது.. மறந்தது என்று தான் சொல்ல தோன்றுகிறது.

இந்த பிரச்சனை ஏன் எல்லா அப்பாவிடமும் பார்க்க முடிகிறது ? உளவியல் ரீதியாக யோசித்தால் ஒன்று புலப்படுகிறது. தான் பார்த்துக் கொண்ட குடும்பம் இன்று தன்  மகன் பார்த்துக்கொள்கிறான் என்ற பெருந்தன்மை ஒரு பக்கம் இருந்தாலும் கெட்டுப் போய்விடுமோ இந்த குடும்பம் என்ற அக்கறை.. தன்னை ஒதுக்கிவிடுவார்களோ என்ற ஒரு உள்பயம். நியாயமானது தான்... எப்படி அம்மா தன்  மகன் சான்றோன் என்று கேட்ட பின்பும் மருமகளிடம் தன்  மகனை விட்டுத்தர மறுக்கிறாளோ அப்படி இது அப்பாவின் உலகம்.. உள்பயம் என்று தான் சொல்ல தோன்றுகிறது,... இயல்பிலேயே  மனிதன் எதையும் இழப்பதற்குத் தயாராக இல்லை என்ற அடிப்படையில் இது உண்மையாகத் தான் இருக்க முடியும்.

மகனின் பார்வையில் இருந்து இதைப் பார்த்தால் வேறொரு கோணம். சாதிக்க வேண்டும் என்ற வெறி... அப்பாவின் அம்மாவின் கஷ்டத்தை துயரத்தை பார்த்து பார்த்து மனம் நொந்து நொந்து வளர்கிறான்.  (ஏகப்பட்ட பணம் இருக்கு - அதை அனுபவிக்க வேண்டும்.. வாழ்க்கை இன்றோடு முடிகிறது - வாழ்ந்துவிட வேண்டும் என்ற (அசட்டு) ஆசை இருக்கும் மகன்களை நான் என் சிந்தனை எல்லைக்குள் அனுமதிக்கவே இல்லை.)

தன் மீது யார் நம்பிக்கை வைப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகம் வளர்வது  இயற்க்கை. இளம்  பருவத்தில் தன் தோழர்கள், ஆசிரியர்கள், பக்கத்துவீட்டு காரர், தன்னை சுற்றி இருப்பவர்கள் என்று யாராவது நம்புவார்களா என்று ஏக்கம் துளிர் விடும் வாழ்க்கை களம். வாழ்க்கை காலம். இதில் யார் நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் பெற்ற தாய் தந்தை நம்புவார்கள் என்று நம்பிக்கை வைக்கும் வயது.  
ஆனால் என்ன காரணத்தினாலோ இந்த உறவில் மகன் மீது அம்மா வைக்கும் நம்பிக்கையை விட அப்பா வைக்கும் நம்பிக்கை சற்று குறைந்து தான் இருக்கிறது.... இதற்கு என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது என்று ஏகப்பட்ட சிந்தனை வாதிகள் பேசுகிறார்கள் ... எழுதுகிறார்கள்.. அனால் பேசுவதாலோ எழுதுவதாலோ இது முடியப்போவதில்லை.

மேலே கூறிய அப்பாவின் அனுபவம் - மகனின் ஆசைகள்; அப்பாவின் ஆதங்கம் - மகனின் தவிப்பு; அப்பாவின் விவேகம் - மகனின் வேகம்; இந்த இரு வேறு பண்புக்கூறுகளும் எந்த மையப்புள்ளியில் சந்திக்கிறதோ அங்கே பிரச்சனை வராது.. அங்கே அமைதி நிலவும்.. நல்ல குடும்பம் பலகலைக்கழகமாக  மாறும்..  அப்படி மாற, இரு சாராரும் இருவர் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்.. அதை விட முக்கியம் நம்பிக்கை வைக்கிறோம் என்று புரிய வைக்க வேண்டும்.  இதனால் பிரச்சனை முடிவுக்கு வருமோ இல்லையோ, நம்பிக்கை மீது நம்பிக்கை வரும் என்று நம்புவோம்...

மீண்டும் சிந்திப்போம் !!!!