Search This Blog

Showing posts with label நிகழ்ச்சிப்பதிவு. Show all posts
Showing posts with label நிகழ்ச்சிப்பதிவு. Show all posts

Sunday, March 11, 2018

சந்திப்புகள் பல விதம்

சுமார் 50 60  வயது இருக்கும்... MRT யில் ஏறியவுடன், என்னிடம் வந்தவர் கோவிலுக்கு தானே போறீங்க நானும் கூட வரவா என்று கேட்டார்.. எனக்கும் சரியாக வழி தெரியாது ஆனால் போகலாம் என்று சொல்லிவிட்டு சுஜாதாவின் எதையும் ஒரு முறையை முதன்முறையாகப்  படித்துக்கொண்டிருந்தேன். இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் அவரே என்னை அழைத்து போகலாமா என்று கேட்க நாங்கள் இருவரும் நடக்க ஆரம்பித்தோம். வயது தெரியாத உடை; அமைதியான பேச்சு; கைப்பேசியை அவ்வப்போது பார்த்துக்கொண்டு நடந்து வந்தார். வந்தவர் என்னிடம் எத்தனை ஆண்டுகளாக இங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் பதில் சொன்ன உடன் என் குடும்பத்தை பற்றியும் விசாரித்தார். என்னைப் பற்றி அறிமுகம் இல்லாத ஒருவர் ஏன் விசாரிக்க வேண்டும் என்றே தோன்றாத அளவிற்கு அக்கறையாகக்  கேட்டார்.

பிறகு எங்கே வந்தாலும் எங்கே போய் வேலை பாத்தாலும் கடைசி காலத்திற்குக்  கொஞ்சம் பணம் வேணும். சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.  குழந்தைகள் வளர்ந்தவுடன் நமக்கு  ஏதாச்சும் ஒன்னுன்னா தேவை படற  அளவுக்கு வச்சிருக்கணும். இல்லைனா வாழ்க்கையில யாரைப் போய் கேட்பது என்றே தெரியாது என்று அவர் கூறியபோது  ஏனோ அவரின் முகத்தைப்  பார்க்க எனக்கு தைரியம் வரவில்லை. Spending pattern இந்தக் காலத்து மக்களுக்கு தெரியவில்லை because of their needs என்று அவர் சொல்லும்போது பணத்தின் அருமை தெரிந்து வளர்க்கவும் வளரவும் தயாராக இருந்த தலைமுறையினர் அவர் என்பதை சொல்லாமல் எனக்கு சொன்னது போல் இருந்தது.  இந்தக்காலத்து இளைஞர்களுக்கு நாங்கள் சொல்லத் தயாராக இருக்கிறோம் - அவர்கள் கேட்கத் தயாராக இல்லை ... நாங்கள் கேட்கத் தயாராக இருந்தோம் சொல்ல ஆள் இல்லை என்ற உணர்வினை அவ்வப்போது கூறிவந்தார்.  ஆனால் எந்த இடத்திலும் யாரையும் விட்டுக்கொடுக்காமல் பேசியது அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு கலைதான்.


கோவில் அருகே வந்துகொண்டிருக்கும் போது கூட்டத்தை சமாளிக்க தொண்டூழியர்கள் எங்களை வரிசையில் இணையச் செய்தனர். எங்களின் உரையாடலில் மீண்டும் எங்களை நாங்களே இணைத்துக் கொண்டோம்.   புக்கிட் மேரா மற்றும் ஜலான்காயு போன்ற இடங்களில் இருந்தார்கள். வேறே வேறே இடத்தில இருந்தவர்களை ரதத்தில் கடத்திக் கொண்டு வந்தோம். அவர்களை ஒவ்வொரு இடத்திலும் பாத்திருக்கேன் நான். எங்கு எங்கு இருந்தோ நாங்கள் இந்த முருகரையும் மற்றவர்களையும் கொண்டு வந்து இப்போது இங்கே சேர்த்திருக்கிறோம் என்று ஸ்தல வரலாறை இவ்வளவு மரியாதையாக கச்சிதமாக கேட்டதே கிடையாது. "கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது" என்று  தன்னை கடவுள் மறுப்பாளர் என்று மய்யமாக சொல்லாமல் மேடைபோட்டு சொல்லும் ஆண்டவர் படத்தில் பார்த்த பாடல்வரிகள் நினைவிற்கு வந்தன.

வரிசை மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றியும் சொல்லத் துவங்கினார். . 48 ஆண்டுக்கால வேலை அனுபவம் அதுவும் ஒரே அலுவலகத்தில். பல்வேறு இடையூறுகள். அதெல்லாம் தாண்டித்தான் இப்போது இங்கு வந்திருக்கிறேன். வேலை நாட்களில் என்னோட boss "நீ ரொம்ப protective" என்று என்னைப் பார்த்து சொல்லுவார்.. நான் அதற்கு you can get the job done out of me and my team only if I take good care of them என்று சொல்லுவேன். இந்த வரிகளைச் சொல்லும்போது அவர் குரலில்  ஒரு கர்வத்திற்கு பதில் சோகம் ஒலித்தது. என் ஐயத்திற்கு அவரே விடையும் அளித்தார். 48 ஆண்டுக் காலம் என்பதால் பல தலைமுறைகள் என்னிடம் வேலை பார்த்திருக்கிறார்கள். வேலை வாங்குவதிலும் வேலை செய்வதிலும் சமுதாயத்தில் இப்போது நிறைய மாற்றங்கள் என்று திடீரென்று spiritual philosophy யில் இருந்து corporate philosophyக்கு மாறினார். 

அந்த ஒரு மணிநேரத்தில் எவ்வளவோ செய்திகளை அவர் பகிர்ந்துகொண்டாலும், பெருமையுடன் அவர் பகிர்ந்துகொண்ட ஒரு செய்தி- தன்னுடைய Pioneer Generation அட்டையை காண்பித்த போது என்று சொல்லலாம். இந்த அரசாங்கம் அவர் வயது ஒத்தவரை எப்படி எல்லாம்  பார்த்துக்கொள்கிறது என்று  நெகிழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் நாங்கள் எங்களுக்கு கொடுத்த சலுகையை எந்த விதத்திலும் துஷ்ப்ரயோகம் செய்ய மாட்டோம் என்று சிறிதும் கர்வம் கலக்காமல் சொல்லிக்கொண்டே,  தன் வயது ஒத்த முதியவர்களை தனக்கு முன்னே வரிசையில் அனுப்பிக்கொண்டே இருந்தார். இருந்த ஒரு சாப்பாடு பொட்டலத்தை அங்கே இருந்த ஒரு குழந்தைக்குக் கொடுத்துவிட்டு குழந்தைப் போல் சிரித்து  பார்வையில் இருந்து அவர்  மறைந்தபோது,  வந்த "இந்த  சந்திப்பு ஏன் இப்போது முடிவுக்கு வந்தது" என்ற கேள்வி  2 வாரம் கழித்தும் இன்னும் என் மனதில் இருக்கிறது.. ஆம் சந்திப்புகள் பல விதம்..  


Thursday, December 7, 2017

Alex Stand up comedy

கார்ப்பரேட் உலகத்துல பாக்காத மன அழுத்தமா? . இந்த காலத்துல எங்கே பாத்தாலும் நம்ம மனம் நோகும்படி நடக்கற விஷங்கள் மட்டுமே நமக்குத் தெரிகின்றன. நம்மைச்சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நம்மைக் காயப்படுத்தும் நோக்கோடு இருக்கிறார்கள் என்று எப்போதும் ஒரு எண்ணம். அந்த காலப் திரைப்படப் பாடலில் இருந்த பொருள் இந்தக் காலப் பாடலில் இல்லை. வீட்டில் , நண்பர்களுடன், அலுவலகம் என்று யாருடன் எங்கு இருந்தாலும் நாம் பார்ப்பது அனைத்தும் மனஅழுத்தம் தரும் செய்திகளாகப் பார்த்தால் நமக்கு மிஞ்சுவது எல்லாம் மன அழுத்தம் தான். இப்படி எதுவும் வருத்தம், எல்லாவற்றிலும் வருத்தம், என்று இருபவர்களாகி விட்டோம் நம்மில் சிலர். 

அப்படி மனவருத்தம் அதிகம் இருக்கும் நேரத்தில் நிறைய பேருக்கு மன ஆறுதலாக அமைவது திரையிசைப் பாடல்கள்தான். அதிலும் 70களில் , 80களில் வந்த பாடல் என்றால் யாருக்குத்தான் மன அமைதி கிடைக்காது. MS விஸ்வநாதன், இளையராஜா, AR ரஹ்மான், வித்யாசாகர் என்று அனைத்து இசையமைப்பாளர்களின் பாடல்கள் தொடங்கி, நாம் அன்றாடம் கேட்கும் பாடல்களில் கூட மனதிற்கு இதமான நகைச்சுவை கிடைக்கும் என சான்று காட்டிய நிகழ்ச்சி. மன அழுத்தம் இல்லாமல் மனதார சிரிச்சு ரசித்த நிகழ்ச்சி.



40 வயதில் இருப்பவர்க்ளில் 99 சதவீதம் பேர் சுமார் 1000 முறை கேட்டிருக்க கூடிய 30 , 40 திரைப்பட பாடல்களைப் பாடி, அதனுள் இவ்வளவு நகைச்சுவை இருக்கா என்று வியக்க வைத்த நிகழ்ச்சி. அந்த அளவிற்கு நகைச்சுவைகளை அள்ளித்தந்து, சுருதி விலகாமல் பாடி, இனி வாழ்வில் இந்த பாடல்களை, பாதி தூக்கத்தில் கேட்டாலும் இவர் அந்தப் பாடலைப் பற்றி சொன்ன நகைச்சுவை தான் நம் நினைவில் இருக்கும்.

கர்ணன் திரைப்படத்தில் வரக்கூடிய, உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற உணர்வுப்பூர்வமான பாடலை கூட இவ்வளவு நகைச்சுவையாக பார்க்க முடியுமா என்ற அளவிற்கு 10 நிமிடம் இடைவிடா நகைச்சுவை... இதில் முக்கியமான விஷயம் — நடித்த சிவாஜி, பாடிய சீர்காழி கோவிந்தராசன், அதில் மறைந்துள்ள இறைமை எதையுமே கிண்டல், நக்கல், நையாண்டி செய்யாமல் நகைச்சுவை கூறியது — இவர், தான் கற்றுக்கொண்ட இசையின் மீது வைத்திருந்த மரியாதையைத் தான் காட்டுகிறது.

இவரின் இந்த நகைச்சுவையைக் கேட்ட பிறகு இந்தப் பாடலைக் கேட்டால் பாட்டை ரசிப்பதா, இவரின் நகைச்சுவையை நினைத்து சிரிப்பதா என்ற பட்டிமன்றம் தான் இனி என் மனதில் ஓடும். பேச்சில் தரமுள்ள நகைச்சுவையின் தேவை, யார் மனமும் நோகாமல் ஒரு நகைச்சுவைப் பேச்சினை எப்படி தயார் செய்வது என்று இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து கற்றுகொள்ளலாம்.
இவரின் ஆரம்ப கால நகைச்சுவை சிலவற்றை கேட்டிருக்கிறேன். நேற்றைய நகைச்சுவையைக் கேட்ட பிறகு திறமை மட்டும் ஒருவரை முன்னேற்றிவிடாது. உழைப்பும் அவசியம் என்பது தெள்ளத் தெளிவு.  வெறும் stand-up comedy என்று 4-5 நகைச்சுவை துணுக்குகளைச் சொல்லாமல், சாலையில் தக்க பாதுகாப்போடு வண்டி ஓட்டுவதன் அவசியம், போட்டி மனப்பான்மை எவ்வாறு வாழ்வை புரட்டிப் போடுகிறது, உண்மை ஒன்றே - கடவுள் ஒன்றே என்ற சிந்தனையெல்லாம் அவ்வப்போது சொல்லி, 105 நிமிடம் பார்வையாளர்களை பாடி, ஆடி, பல்வேறு இசைக்கருவிகளை வாசித்து கட்டுப்படுத்தினார் பாட்டும், கருத்தும், நகைச்சுவையும் மாறி மாறி அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தது. எதுவும் வலிந்து திணிக்கப்படவில்லை.

இவர் சொன்ன நகைச்சுவை சிலவற்றை இங்கு நான் சொல்லாமல் போவதற்கு மூன்று காரணங்கள்.
1. எனக்கு அவரைப்போல் நகைச்சுவை சொல்ல வராது.
2. இது போன்ற நிகழ்ச்சிகளை அனைவரும் போய், பார்த்து, ரசித்து அனுபவித்தால்தான் கலை வளரும். கலைஞர்கள் வளருவார்கள்.
3. இதுபோல் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயத்தில் நகைச்சுவையைக் கண்டெடுத்து என் சொந்த நகைச்சுவையோடு எப்போதாவது சந்திப்போம்.





Wednesday, June 5, 2013

நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..!


தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை பதிவு செய்வதில் மகிழ்ச்சி..






 

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

இன்னொரு சம்பவம் Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்குToy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?

Friday, April 29, 2011

நீயா நானா

நீயும் நானும் எனும் வாழும் கலை மறந்து, நீயா நானா என்று வாழும் நிலை வந்த இந்த சமுதாயத்தில் வருவது... விஜய் டிவியில் வரும் "நீயா நானா" நிகழ்ச்சி. தாய் தந்தை, கணவன் மனைவி, அண்ணன் தங்கை, மாமியார் மருமகள் என ஆரம்பித்து, இயல்.. இலக்கியம்.. சமூகம்.. என்று பல்வேறு தலைப்புகளில் வாரம் தோறும் வார்த்தைகள் வாள் வீச்சு நடத்தும். இது ஆரோக்யமான யுத்தமாக இருந்தாலும், சமீபத்தில் பார்த்த ஒரு தலைப்பு சிந்திக்க வைத்தது என்று சொல்வதுடன் குழப்பத்துக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது.  

இப்போது இருக்கும் அம்மாக்கள் பற்றிய பிள்ளைகளின் எண்ணம்  அம்மாக்கள் தோற்றத்தில் (?), அழகியலில், எப்படி எல்லாம் மாறவேண்டும், பிள்ளைகள், அம்மாக்கள் பற்றி மனதில் வைத்திருக்கும் உருவகம் என்ன ? பேசுவோம் என்று இந்த நிகழ்ச்சியை நல்லபடியாய் கைதட்டி கோபிநாத் ஆரமிக்க, இதோ பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் / எண்ணங்கள்:

எங்கம்மா ரொம்ப simple -ஆ  இருப்பாங்க - எனக்கு அது சுத்தமா புடிக்காது, நான் ரொம்ப modern (?)-ஆன பொண்ணு. அழகின் அடிபடையில் இவளா உங்க மகள்னு கேக்கும் போது ரொம்ப bad-ஆ feel பன்றேன். நான் rich-ஆ modern-ஆ  இருக்கும் போது அம்மா ரொம்ப சிம்பிள்-ஆ பழைய ஆளா இருக்கறது uncomfortable-ஆ இருக்கு. எங்கம்மா designer saree கட்டிக்க மாட்டேன்றாங்க, பழைய style-அ கட்டிபாங்க. எங்கம்மா ஒல்லி ஆகனும். எங்கம்மாக்கு saree -க்கு பின் போட தெரியாது. எங்கம்மா hair cut பண்ண மாட்டாங்க. எங்கம்மா பூ வெச்சிப்பாங்க. என்னையும் வேற வெச்சிக்க சொல்லுவாங்க. அது எனக்கு சுத்தமா புடிக்காது.  எங்கம்மாவை shopping mall-க்கு கூட்டிட்டு போக அசிங்கமா இருக்கு. மத்த அம்மாக்களை பாக்கும் போது எங்க அம்மா இப்படி குண்டா கொஞ்சம் பாக்க ரொம்ப simple-ஆ இருக்காங்களேன்னு வருத்தமா தான் இருக்கு.

எங்கே போய் கொண்டிருக்கிறது இளைஞர் சமுதாயம் ? அம்மா என்ற சொல்லில் ம் ம என்று 2  மெல்லின எழுத்து வைத்ததே அவள் இரண்டு மடங்கு மென்மையானவள் என்று உணரத்தானே ? என் அம்மா இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும், என்று சொன்ன பிள்ளைகள் கடவுள் கொடுத்த என் அம்மா (கடவுள் போல்) குறை இல்லாதவள் என்று சொல்ல தயக்கம் காட்டியது வருத்தப்பட வேண்டிய விஷயம். நம்மை சுற்றி இருக்கும் எல்லாவற்றிலும் (மனைவி நண்பர்கள் உள்பட), பணம் அழகு பதவி என்று பார்க்கும் மன நிலைக்கு நம்மை நாமே மாற்றி கொண்டுவிட்ட போதிலும், நாம் வளர்ந்த பின் இப்படி இருக்க வேண்டும் என்று நாம் பிறப்பதற்கு முன்னே கனவு கண்ட நம் அம்மாவிடமும் இப்படிபட்ட எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்று சொன்னால், இது ஆபத்தான வளர்ச்சி.

நம் தாய் இந்த வாழ்கை கடலின் கலங்கரை விளக்கம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அன்பால் மட்டுமே சரி செய்து விடும் பலம் கொண்டவள். தாய்மை வேண்டும் என்று விரும்பி பெற்று; விரும்பியதை அடைந்து விட்டோம் என்று கர்வம் கொள்ளாதவள்; மெழுகைப்போல் நம் வளர்ச்சியை, ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டுபவள்.....

உலகில் எல்லா அப்பாக்களும் ஒரே மாதிரி இருந்தாலும், ஒவ்வொரு அம்மாவும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் பெற்ற காவல் தெய்வம்.. குலதெய்வம் தான் என்று அறியும் இளைஞர் சமுதாயம் - அம்மாவை போல் அழகு.......