Search This Blog

Wednesday, January 18, 2012

அன்புள்ள அப்பா....!

உறவை அறிமுகப் படுத்துவது தாய் என்றால் உலகத்தை அறிமுகப் படுத்துவது தந்தை தான். நாம் சொல்லி  கொடுப்பதை வைத்து வளர்கிறார்கள் நம் பிள்ளைகள் என்று எண்ணாமல்  நம்மைப் பார்த்தே நம் குழந்தைகள் வளர்கிறார்கள் என்ற  உண்மை  புரிந்த அப்பாக்கள் பலருக்கு நன்றி சொல்லும் எண்ணத்தின் வடிவம் - இந்த எழுத்துக்கள்.

ஒரு மகளுக்கு முதல் நாயகன் அவள் அப்பா தான்..தன் தாயை தன் அப்பா பார்த்து கொள்வதின் அடிப்படையில் தான் தன் கணவன் பற்றிய எதிர்பார்ப்பே வருகிறது / வளர்கிறது. தன் தந்தை ஊர் போற்றும் உத்தமராக இருந்தால் தன் கணவன் நாடு போற்றும் நல்லவராக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயம் தான்.  தன் வாழ்கையை  ஒப்படைக்க ஒருத்தனை தேடும் பெண்களின் எண்ணத்தில்,  எதிர்பார்ப்பு விதையை விதைக்கும் தந்தையின் பெருமையை என்ன சொல்லுவது ?  ஒரு மகனுக்கு முதல் ஆசான் அவன் அப்பா தான். மகன் தன்னுடைய  வாழ்வின்  பிற்பாதியில் எப்படி வாழ  வேண்டும் என்ற எண்ணம், முற்பாதியில் பார்த்த தந்தையின் நடத்தை தான் என்றால் அது மிகையாகாது. கல்லுக்கு வலிக்கும் என்று தெரிந்து தான் சிற்பி சிலை செதுக்குகிறான்.. அது போல் நம்மில் இருக்கும் வேண்டாத குணத்தை களைந்து நம்மை இந்த உலகத்துக்கு பரிசளிக்க விரும்பும் சிற்பி, தந்தை தான் என்றால், மறுக்க மனம் பலருக்கும் யோசிக்கும்.

எப்போதோ கேள்விப்பட்ட நிகழ்ச்சி ஒன்று. உடல் ஊனமுற்ற  குழந்தையை ஒரு தந்தை எங்கு போனாலும் கூட்டி கொண்டு போவார். அப்படி போகும் போது ஒருவர் கேட்டார்.. ஏம்பா இப்படி இவனை எங்கே போனாலும் தூக்கிட்டு அலையறியே ? கஷ்டமா இல்லையானு (ஊருக்கு ஒருத்தர் இப்படியும் இருப்பாங்கல) . அதுக்கு அந்த அன்புள்ள அப்பா  சொன்ன பதில் - "இந்த குழந்தையை என்னால் மட்டுமே பாத்துக்க முடியும்னு தான் கடவுள் என்கிட்டே குடுத்ருக்காறு. எப்படிங்க விட முடியும்."

தான் பார்க்காத உலகத்தை, உயரத்தை நம் மகனோ மகளோ பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தையை தோள் மீது உட்கார  வைத்து அழகு பார்க்கும் மனம் அப்பாமார்களுக்கு மட்டும் தான் வரும். தான் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ தன் பிள்ளைகளை பாதிக்கும் என்று தெரிந்து தன் வாழ்க்கைப் பாதையை மாற்றி கொள்ளும் அளவுக்கு பக்குவப்பட்டவர்கள் தான் அப்பாக்கள். தன் மகனோ மகளோ தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக தலை வணங்கத் தயாராக இருக்கும் தைரியசாலிகள் அப்பாக்கள். தன் மகனின் கம்பீரத்தை பார்க்க, யார் முன்னிலும் கூனி குறுகி கை கட்டி நிற்கத் தயங்காதவர்கள் அப்பாக்கள். பெற்ற கடமைக்காக ஒரு நிலை வரை, பட்ட கடனை தானே அடைக்க நினைக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள். நாடு விட்டு நாடு போய், உச்சி வெயில்லில் வியர்வை சிந்தி உழைத்து, தன் வாரிசின் மழலைச்  சொல்லை தொலை பேசியில் மட்டுமே கேட்கும் திடம் படைத்த தியாகிகள் அப்பாக்கள்.

ப்,ப என்ற இரண்டு வல்லின எழுத்துக்கள் இருந்தாலும் பிள்ளைகளின் வளர்ச்சியை மறைந்து நின்று ரசிக்கும் மென்மையானவர்கள் அப்பாக்கள் தான். 10 மாதம் சுமந்து பெற்றத் தாய்க்கு பாசம் இருப்பது நியாயம். அனால் அப்படி ஒரு தொப்புள் கொடி உறவு இல்லாமலே தாய்க்கு சமமாக அடுத்த தலைமுறையை வளர்க்க தயாராக இருக்கும் - வாழும் வழிகாட்டிகள் அப்பாக்கள்.  தந்தைக்கும்  தாய்  அமுதம்  சுரந்ததம்மா;  தங்கத்தை  மார்போடு  அனைக்கையிலே என்ற நா. முத்துகுமார் வரிகள் உண்மை உணர்வு.

இப்படித்தான் இருக்க வேண்டும் வாழ்வில் என்ற வாழ்வாதாரத்தை தன் வாழ்க்கையின் மூலம் சொல்லிக் கொடுக்கும் தந்தையின் அருமையை சொல்ல 30 40 வரிகள் போதாது....!