Search This Blog

Thursday, May 3, 2012

ஆராய்ச்சி .....!

கரூரில் நடந்த ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது என்ன நிகழ்ச்சியில் பார்த்தேன். யோசிக்க வேண்டிய ஒரு விஷயம் என்று தோன்றியது. தொழில்நுட்பமாக ஆராய வேண்டிய விஷயமாக காண்பிக்கப் பட்டாலும் ஒரு நெருடல் இருந்தது எனக்கு.. ஒரு தேடல் இருந்தது.. ஒரு வருத்தம் இருந்தது..

சம்பவம்: ஒரு கல்யாண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் - அதில் ஒரு கோவில் கர்பக்ரிஹத்தில் இருந்து வானத்தை நோக்கி ஒரு ஒளிகீற்று போவது தெரிந்தது. மக்கள் இதை ஒரு கடவுளே விடுத்த எச்சரிக்கை என்று எண்ணி கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்ய நினைக்கிறார்கள்.

பல வருஷமா தன்னோட சக்தியை இழந்து செல்வாக்கு இல்லாமல் தான் இருந்து வந்த இந்த கோவில் பக்கம் திடீரென்று அந்த கிராமமே தன் பார்வையை திருப்பி இருக்கிறது.  ஒரே ராத்திரியில் அந்த கிராமமே பரபரப்பில் மூழ்கி போனது. இவ்ளோ பெரிய சக்தி நம்ம ஊருக்குள இருக்குன்னு வெளிகாட்டிருக்கிறது. இப்போ இந்த கோவிலில் திருவிழா நடத்தி 11  வருஷம் ஆனதால் இப்போது அதற்கு  ஏற்பாடு பண்ணப்பட்டு வருகிறது. அந்த ஊரில் சாமி இன்னும் இருக்குனு கடவுள் நினைவூட்டுகிறார் என்று தான் மக்கள் நம்புகிறார்கள். ஒழுங்காக பூஜை நடக்காததால் சாமி இரவு நேரம் கோவிலை விட்டு பொய் விடுகிறார் என்ற நம்பிக்கையும் உலா வரத்தான் செய்கிறது கிராம மக்களிடையே. அதனால் தான் மக்களுக்கு சமீப காலத்தில் பல நோய்கள் வந்ததாகவும் திருவிழா ஏற்பாடு ஆரம்பித்தவுடன் நோய்கள் மறைய தொடங்கியதாகவும் நம்பப் படுகிறது.
அந்த கிராமத்தில் ஒவ்வொரு பிரிவினரும் தன்னிச்சையாக பிரிந்து ஒவ்வொரு கோவிலை வணங்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இப்போது இந்த புகைப்படம் ஏற்படுத்திய திருப்பமாக எல்லோரும் ஒன்று சேர்ந்து தன் பகையை மறந்து ஒட்டு மொத்த கிராமமும் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருகிறார்கள் என்று நினைக்கும் பொது அவர்கள் நம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்த புகைப்படம் எவ்வளவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கு என்பதை ஆய்வாளர்களும் மீடியாக்களும் மக்களும் இப்படி பார்கிறார்கள் என்று பார்த்தால்  தலை சுற்றுகிறது.  விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் மக்கள் மனதை உரசிப்பார்க்க பேர் போனதென்றாலும் இது போன்ற நம்பிக்கை சார்ந்த விஷயத்தை கூட ஒரு ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு அணுக தயங்கவில்லை.. சில புகைப்பட நிபுணர்களை அணுகி இந்த புகைப்படத்தில் இருக்கும் ஒளிக்கீற்று உண்மைதானா என்று கேட்டிருக்கிறார்கள். ஏற்க்கனவே இப்படி பல புகைப்படங்கள் இணைய தளங்களில் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதில் ஆச்சரியம் அதிசயம் எதுவும் இல்லை... அது கேமராவில் இருக்கும் சாதாரண கொலருபடியால் வருவது என்று சொல்கிறார்கள். இது போன்ற விஷயம் கற்பனையான விஷயங்கள் தான் என்றும் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். சில போடோக்ராபர்கள் எடுக்கத்தெரியாமல் எடுப்பதினால் வருகிற விஷயம் இது என்று கூட பேசும் நிபுணர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் லோ ஷட்டர் போடோக்ராப். என்று அதற்கு விளக்கம்  தரப்படுகிறது.

எது எப்படியோ. மக்களின் நம்பிக்கையை இப்படி கூறு போட்டுப் பார்ப்பது ஆரோக்யமாக தெரியவில்லை.. கால காலமாக நம் வளர்ப்பு முறையில் நம்பிக்கை சார்ந்த பல விஷயங்கள் இருக்கிறது. நிலாவில் பாட்டி வடை சுடுவதில் ஆரம்பித்து இது தான் அப்பா என்று அம்மா அறிமுகம் செய்து வைக்கும் வரை நம்பிக்கை தான் வாழ்கை என்று ஆகி விட்டது. எதோ ஒரு இலக்கை நோக்கி ஓடும் போது எதையோ ஆதாரமாக நம்பிப் போவது இயல்பானது. நம் அன்றாட வாழ்வின் ஆதாரமே நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையை நாம் அடிக்கடி சோதிப்பது தவறில்லை.. ஓஷோவின் கருத்தும் அது தான்..

ஒரு விஷயத்தின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையை அடிக்கடி சோதித்து பார்க்கும் போது தான் அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது. ஆனால் சோதனை/ஆராய்ச்சி மட்டுமே தான் நடைபெறுகிறது என்றால் மக்களுக்கு நம்பிக்கை மீதே நம்பிக்கை போயி விட்டதை தான் காட்டுகிறது.. எதர்க்கெடுத்தாலும் சந்தேகம்; ஆராய்ச்சி என்று இருப்பது ஆபத்தானது. நாம் நம்பும் ஆதாரம் மேல் நம்பிக்கை போவது ஒரு விஷயம். அனால் நம்பிக்கை மீதே நம்பிக்கை போயி விட்டால் அதற்கு மாற்று வழியே இருக்க முடியாது.. எல்லாவற்றையும் ஆராயாமல் அனுபவிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்வில் சங்கடங்கள் குறைவு..! நிம்மதி அதிகம்..!!!