Search This Blog

Wednesday, June 26, 2013

திருநீறு

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
...
அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.


இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

Friday, June 21, 2013

பஞ்சாங்கம்



உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த, ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்.


பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்! உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை! இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்!

Wednesday, June 5, 2013

நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..!


தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை பதிவு செய்வதில் மகிழ்ச்சி..






 

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

இன்னொரு சம்பவம் Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்குToy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?