Search This Blog

Saturday, November 29, 2014

அவள் வருவாளென ஆயிரம் கனவுகளுடன் காத்திருந்தான்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மாதாந்திர கதைக்களத்தில் இன்று என்னுடைய சிறுகதை முதல் பரிசு பெற்றது:
வாய்ப்பையும், பரிசையும் அளித்த கதைக்களத்திற்கு நன்றி.
"மறுபிறவி"
==============
அவள் வருவாளென ஆயிரம் கனவுகளுடன் காத்திருந்தான் குமார். அவனுக்கு இந்த நினைப்பு வருவதும், கண்களில் நீர் கசிவதும் முதல் முறையல்ல. சின்ன வயதில் கோபத்தில் கூட வீட்டைவிட்டு வெளியே போ என்று சொல்லாதவள் அவள். எண்ண ஓட்டங்கள் வேகமாக அசை போட்டன. அம்மா என்ற சொல்லில் ம் ம என்று 2 மெல்லின எழுத்து வைத்ததே அவள் இரண்டு மடங்கு மென்மையானவள் என்று உணரத்தான் என்று சொல்வேந்தர் பேச்சில் கூறியது நினைவுக்கு வந்தது. நாம் வளர்ந்த பின் இப்படி இருக்க வேண்டும் என்று நாம் பிறப்பதற்கு முன்னே கனவு கண்டவளைப் பற்றிய எண்ணம் அவனைக் கூறு போட்டுக்கொண்டிருந்தது. கண்களைத் திறக்காமல் தன் அம்மாவை இமைகளுக்குள் நிறுத்தி வைத்திருந்தான். நேரில் உன்னை வைத்து அழகு பார்க்க முடியவில்லை என்று நொந்துகொண்டது அவனுக்கு பழகிப்போன ஒரு உணர்வு. சுமார் 2 வருடத்திற்கு முன்,ஏறக்குறைய இந்த நாளில் தான் அம்மாவின் வற்புறுத்தலின் பெயரில் அவளை நாராயண மிஷன் முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்தபோது மட்டுமல்ல. அதன் பின் எப்போது போனாலும் அவள் பேசக்கூடிய ஒரே விஷயம் : எனக்கு ஒரு குறையும் இல்லை குமார். நீயும் உன் பொண்டாட்டியும் சந்தோஷமா இருக்கறதைப் பாக்க எனக்குக் கொடுத்துவெக்கலை. அவ்வளவுதான். நீங்க சீக்கிரமா ஒரு குழந்தைய பெத்துகோங்க. வயசாயிட்டே போகுது என்பது தான்.

கடவுள் ஆசியால் என்று சொல்வதை விட, அம்மாவின் ஆசியால் தான் மனைவி குழந்தைப்பேறு பெற்றாள் என்பதில் பெரும் நம்பிக்கை குமாருக்கு. அதை மனைவியிடம் மட்டும் சொல்ல இன்றுவரை தைரியம் வந்ததில்லை. எவ்வளவோ முயன்றும் அம்மாவை வீட்டிற்கு கூட்டி வர இயலவில்லை. அம்மா வந்திருக்கலாம் என்று அவன் மனம் நினைக்கும்போதெல்லாம் மனசாட்சி எதிர் கேள்வி கேட்கும். 2 மாதத்திற்கு முன்னர் போகும் போதும், மருமக எப்படி இருக்கா? ராபிள்ஸ் ஹாஸ்பிடல்ல என்ன சொன்னாங்கனு கேட்டாங்க. குழந்தை நல்லா இருக்காம். 2 மாசத்துல உங்க பேரனையோ பேத்தியையோ நீங்க பாப்பீங்கன்று சொல்லும்போது அம்மா சிரித்தது மறக்கமுடியாத காட்சி. அவள் சிரித்ததை பார்த்த கடைசி முறையும் அதுவே. கடைசி வரை அவளை வீட்டிற்கு கூட்டி வர வேண்டும் என்பது கனவாகவே போன சோகத்தில் மூழ்கி இருந்தவனைக் கூப்பிட்டு நர்ஸம்மா சொன்னாள் : உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு என்று. வேகமாக ஓடினான் குமார் - தன் வீட்டில் வளரப் போகும் தாயை கையில் தூக்க...

Receiving first prize from Mr Supraja Sreedhar. along with Mr Pichinnikadu Ilango, Mr Suba Arunachalam and MK Kumar