பிறந்த மூன்றரை வருடம் பேச்சே வரவில்லை. பெற்றோர்கள் ஏறாத கோவில் இல்லை.. பார்க்காத டாக்டர் இல்லை.... பேச்சு மட்டும் வரவில்லை. சைகை தான் எல்லாமே.. தூர்தர்ஷனில் ஞாயிறன்று 1.15க்கு வரும் வாய் பேசாத / காது கேளாதவர்களுக்கு வரும் செய்தி வாசிப்பாளராகவே மாறியிருந்தனர் வீட்டினர். மற்ற குழந்தைகளைப் போல் ஓடியாட முடிந்தாலும் பேச்சு மட்டும் வரவில்லை. பள்ளியிலும் சேர்க்க முடியவில்லை. அக்கம் பக்கம் எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு போக ஆரம்பித்த போது தான் பேச்சு வர ஆரம்பிக்கிறது.
பிறகு பள்ளியில் சேர்த்து ஒரு சில ஆண்டுகள் நன்றாகவே படித்தாலும் ஓரளவுக்கு தெளிவாக பேசஆரம்பித்தது விவரம் தெரிந்த பின் தான். வகுப்பளவில் கூட பேசவே பயம் .. போதாதற்கு பேச்சு வந்ததும் தாமதம்.. அப்படியே பேசினாலும் தெளிவில்லை என்றெல்லாம் நிலையைத் தாண்டி - அப்போது வாய்த்த நல்ல ஆசிரியர்கள் குறிப்பாக தமிழாசிரியர்கள் அவர்களின் ஊக்குவிப்பால் கொஞ்சம் கொஞ்சமாக பயத்தைத் தவிர்த்து பேச ஆரம்பித்த பயணம்...
பள்ளி காலங்களில் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டிக்கு போனால் பரிசு வாங்கும் நிலை வந்தது... ஆறுதல் பரிசு அவ்வளவு ஆறுதலாக இருக்குமா என்ற அளவிற்கு ஆறுதல். பிறகு தமிழின் மீதும் தமிழ்ப் பேச்சின் காரணமே இல்லாமல் ஆர்வம் வந்தது. இது நல்லாயிருக்கே. இப்படியெல்லாம் கூட எழுதிருக்காங்க.. இப்படியெல்லாம் கூட பேசிருக்காங்க என்ற எண்ணத்தில் பதினோறாம் வகுப்பில் டாக்டர்க்கு இஞ்சினியரிங்க்கு எல்லாம் பாடம் எடுக்காமல் (கட் ஆப் இல்லை என்பது தனிக் கதை) மற்ற பாடங்களுடன், "பத்திரிக்கைத்துரையில் தமிழ்" படிப்பு... இணையம், youtube போன்ற வசதிகள் பெரிதும் இல்லாத காலத்தில் நல்ல ஆசிரியர்கள், பேச்சாளர்களின் பேச்சு இவற்றை கேட்டு பயணம் தொடர்ந்தது....
பின்பு கல்லூரியில் சமஸ்கிருத்த்தில் ஆர்வம் ஏற்பட இரண்டாம் மொழியாக சமஸ்கிருதம் படித்தது - படித்ததில் பிடித்தது. மேகதூதம், சாகுந்தலம் என்று படித்தாலும் வடமொழியில் பேச முடிந்தாலும் தமிழ்ப்போட்டிகள் என்று வந்தால் பேச முன் வராமல் இருந்ததில்லை. பேச்சே வராது என்ற நிலையிலிருந்து தமிழ் பேச்சுப் போட்டிகளில், கட்டுரைப் போட்டிகளில் பங்குபெற்றதோடு இல்லாமல் பரிசும் வெல்லும் அளவிற்கு உயர்த்தினார்கள் கூடியிருந்தவர்கள். இறுதியாண்டில் பொருளாதாரத்தில் தங்கப் பதக்கம் மேடையில் பெற்றாலும் மற்றப் போட்டிகளில் பங்கெடுத்து (பேசி) வென்ற பரிசு 13.. பெரும்பாலான நேரத்தில்அத்தப் பரிசுகள் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்குப் அன்பளிப்பாக போய்விடும் அப்போது இருந்த சூழ்நிலையில்.. இந்தப் பயணம் முடிவடையும் என்ற நிலைமையில் சிங்கைப் பயணம்...
முதல் இரண்டு வருடம் பெரும்பாலரைப் போல வேலை செய்வது .. சம்பளம் வாங்குவது.. என்று போய்க்கொண்டிருக்கும் போது இந்த நாள் இனிய நாள், சன் தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் தான் ஆறுதல்... ஒரு சிவராத்திரியன்று , மனதிற்கு ஒரு மந்திரச் சாவியாக பாயா லேபர் சிவன் கோவிலில் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் அறிமுகம் (தானாக போய் கை குலுக்கி "பேச" ஆரம்பித்தது தான்)....கொஞ்ச நாளில் அவர் மூலமாக தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் அவர்களின் அறிமுகம். அவரின் மூலம் தமிழ்ப் பேச்சாளர் மன்றங்கள், நல்ல பல நண்பர்கள், திருக்குறள் விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைமை, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் செயலவையில் தொண்டூழியம் செய்ய வாய்ப்பு, முக்கிய நிகழ்ச்சிகளின் நெறியாளர், பேச்சாளர் மன்ற ஆலோசகர், பேச்சாளர் மன்ற வட்டார மற்றும் மாவட்ட இயக்குனர் பொறுப்புகள், நல்ல ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்கள் பலரின் தொடர்பு, பல்வேறு அமைப்புகளின் தொடர்பு மற்றும் அவர்களின் தொடர் ஆதரவு (சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வெளியிட்ட 50 கட்டுரைகள் கொண்ட புத்தகத்தில் என்னுடைய கட்டுரை இடம்பெற்றது, இலக்கிய வட்டத்தின் பட்டிமன்றத்தில் திருமதி சாரதா நம்பி ஆரூரன் அவர்களின் தலைமையில் பட்டிமன்றத்தில் பேசியது) என்று பல்வேறு தளங்களில் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது....
வெகு நாட்கள் கழித்து மீண்டும் பரிசு வாங்கும் வாய்ப்பு நேற்று வந்தது. இந்த முறை ஆறுதலுக்காக வரவில்லை.
1. பேச்சாளர் மன்றத்தின் மிக உயரிய விருதான Distinguished Toastmaster விருது
2. ஒரே வருடத்தில் பேச்சாளர் மன்றத்தின் 3 படி நிலைகளை கடந்தது (Triple Crown Award)
3. 2014-2015 ஆண்டிற்கான வட்டார ஆளுனராக இருந்த போது அந்த வட்டாரம் சிறப்பாக செயல்பட்டு உயர்ந்த நிலை அடைந்தமைக்கு Presidents Distinguished Area Governor விருது
என 3 விருதுகள் ஒரே நாளில்....
அடைய வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கும் போது, என்னை விட இளையர்கள் பலர் (என்னால்) எட்ட முடியாத உயரத்தை அடைந்து விட்டு அமைதியாக இருக்கும் போது இந்த சுய விளம்பரம் / புராணம் தேவையில்லைதான். இருந்தாலும் வாழ்க்கைப் பயணத்தை அவ்வப்போது திருப்பிப் பார்ப்பதும் ஒரு வகையான ஆறுதல் (பரிசு) தான்...
நல்ல வழிகாட்டிகள்... திறமையான ஆசிரியர்கள்... உற்ற நண்பர்கள் பலர் இருக்கும் போது நமக்குள் ஆர்வம் + உழைப்பு மட்டும் இருந்தால் போதும். வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பது உறுதி..( சென்னை மாம்பலம் ரங்கநாதன் தெருவில் படி இறங்கி அன்பழகன் பழக்கடையில் கரும்புச்சாறு குடிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் மட்டும் போதும். கூட்டம் உங்களை நகர்த்தி கொண்டு வந்து சேர்த்து விடும். )
என்னுடைய இந்த பயணத்தில் தொடர்ந்து வெற்றி பெற உதவிய, உதவுகின்ற, உதவப் போகின்ற தமிழுக்கும் , அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.