Search This Blog

Tuesday, May 23, 2017

பேசாமல் இருக்கலாம்

எழுதி ஒரு வருடம் ஆகிவிட்டது என்று எனக்கு அடிக்கடி நினைவூட்டிய அத்தனை பேருக்கும் நன்றி.

என்னோடு நான் அதிக நேரம் செலவிடாமல் போனது காரணம் இல்லை. தனிமையில் நான் நினைத்தது, அனுபவித்தது, பேசியது, பேசாமல் போனது, எல்லாம் எனக்குள் பதிந்துவிட்டது. வெளியில் எங்கும் பதிய வைக்க எனக்கு உந்துதல் இல்லாமல் போனது கூட காரணமா இருக்கலாம். சரி சோம்பேறிதனத்திற்கு இவ்வளவு விளக்கம் தேவை இல்லை என்று சொல்வது எனக்கு கேட்கிறது.

சமீபத்திய அனுபவம் - பேச்சுக்களை பற்றியது.. நிறைய பேச்சினை கேட்டது; பேச்சினை பற்றி எழுதலாம் என்று முடிவெடுத்ததன் விளைவு தான் இந்தப்  பதிவு. நான் வளர்ந்த காலத்தில் எனக்கு சொல்லிக்கொடுத்தது நான் பார்த்தது எல்லாமே இரு வகை பேச்சு தான். உண்மை பேசுவது; பொய் பேசுவது; சில நேரம் இந்த இரண்டும் இல்லாமல் நல்லது பேசுவது (நேர்மறையாக பேசுவது) ; கெடுதல் பேசுவது (எதிர்மறையாக பேசுவது)  என்று ஆகியது. சில நேரம் பேச்சில் ஒருவரை பற்றி அவர் முன் பேசுவது; அவருக்கு பின்னால் பேசுவது என்று மருவியது; சில நேரம் பழமையை பேசுவது; புதுமையை பேசுவது; சில நேரம்  மேடைகளில் பேசும்போது தானே தயாரித்து பேசுதல் இல்லை ஒருவர் பேசியதை அப்படியே ஆச்சு பிசகாமல் பேசுவது; இப்படி எப்படி பார்த்தாலும் இரு வகை பேச்சிற்குள் அடங்கி விடும். இதை எல்லாம் பேசுவதற்கும் எந்த தடையும் இருக்காது.

உனக்கென்ன எல்லா இடத்திலும் பேசி விடுகிறாய் என்று சொல்பவர்களிடம் என்னுடைய பதில் வெறும் சிரிப்பு மட்டுமே. ஏன் என்றால் நினைத்ததை பேச முடிகிறதா என்றால் கேள்விக்குறி தான். நான் சந்தித்த சில சூழ்நிலைகள் 

1. நேரடியாக பேசுவது: மனதிற்கு பட்டதை எதையும் யோசிக்காமல் பேசுவது - இதில் சிக்கல் என்ன வென்றால் - எல்லோரிடமும் எல்லா இடங்களிலும் இதை பேச முடிவதில்லை  - பேசி விடுவேன் என்று சொல்பவர்கள் கூட ஏன் பேச வில்லை என்றால் " புரிந்து கொள்ள அவனுக்கு தகுதி இல்லை என்று ஒரு வழி வழிவார்கள்"

2. புகழைப்  பேசுவது: ஒரு விஷயத்தை பாராட்டினால் பாராட்டாக பார்க்காமல் எதோ காரியம் ஆவதற்காக பேசுவது போல் தோன்றுகிறது. ஆகவே உண்மையில் பாராட்ட வேண்டுமென்றாலும் பேச முடிவதில்லை.

3. குற்றத்தை சுட்டிக்காட்டுவது: நமக்கு நெருக்கமானவர்களை பற்றி அவர்களிடம் உள்ள குறையை சொல்லலாம் என்றால் உரிமையில் அடித்து மீறுகிறாய் என்று பெயர் தான் மிச்சம். ஆனால் அதே தவறை மற்றவர்கள் சுட்டி காட்டும்போது  அவர்கள் ஏற்றுக்கொள்வதை பார்க்கும் போது மௌனம்  கைகொடுக்கும்.

4. நடந்ததை பேசுவது: சமயத்தில் நம்மை யாராவது தவறாக நினைத்துக்கொண்டால் அவர்களுக்கு புரிய வைப்பது நம் இயல்பு தான் - ஆனால் அப்படி புரிய வைத்தால் நீ செய்வதை உண்மையான அன்பு உடையவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எவனோ சொன்னதாக ஒரு மேற்கோள் காட்டி சம்பந்தமே  இல்லாதவர்கள்  வந்து நம் வாயை அடைத்து விடுவார்கள்.

5. ஊடகம் :  மனசார உணரும் உணர்வுகளை சரியாக பிரதிபலிக்க தெரியாத facebook, whatsapp இதில் பேசி எதாவது தப்பு நடந்து விட்டால் உண்மையான உணர்வுகளை உணர்த்த நேராக சென்றால் அனுமதி மறுக்க படும்போது பேச முடியாமல் போகிறது.

6. சந்தேகம் வரும்போது: நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் யாரவது நம்மை பற்றி எங்கோ கேள்வி பட்ட செய்தியை வைத்து அதை நம்மிடமே கேட்டு தெரிந்து தெளிவு படுத்திக்கொண்டால்  பரவாயில்லை - ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்று நம்மிடமே புலன் விசாரணை செய்யும் போது நமக்கு பேச தோன்றாமல் போவதை தடுக்க முடியாது.

7. வயசானவர்களிடம் பேசுவது; சில வயசானவர்களிடம் பேசும்போது அவர்கள் செய்யாதது எதையும் இந்த தலைமுறையினர் செய்து விட வில்லை என்று சொல்லும்போது அவர்களின் வயதிற்கு(மட்டுமே) மதிப்பளித்தோ அல்லது பேச புடிக்காமலோ  பேச முடியாமல் போகலாம் 

8. அடுத்தவர்களை பற்றி நம்மிடம் பேசும்போது: சிலர்  தெரிந்து தான் பேசுகிறார்களா என்றே தெரியாது சில நேரம். நமக்கு நன்று தெரிந்தவர்களை பற்றி நம்மிடமே பேசும்போது இவர்களுக்கு தெரிந்தது இவ்வளவு தான் என்று பேசாமல் இருக்கலாம். இல்லை என்றால் நம்மிடம் அடுத்தவர்களை பற்றி சொன்னது போல் நம்மை பற்றி அடுத்தவர்களிடம் சொல்லுவார்களோ என்ற எண்ணத்தில் பேச்சினை தவிர்க்கலாம்.

யோசிக்க யோசிக்க நிறைய சந்தர்ப்பங்களில் பேசாமல் இருப்பது புத்திசாலித்தனம் என்று கூட தோன்றும். அப்படி தோன்றும்போது கூட தவறு நடக்கும் இடத்தில்  பேசாமல் இருப்பது தவறுக்கு துணை போவது போல் ஆகும் என்று எங்கேயோ எப்போதோ  எதற்கோ யாரோ சொன்னதை இங்கே சொல்லிவிட்டு அமைதியை போவதும் சிலரது பழக்கம். எது எப்படியோ நம்ம  தான் ஸூதனமா பாத்து நடந்துக்கனும்.

பேசி வரும் பிரச்னையை விட பேசாமல் வரும் பிரச்னையை சமாளிப்பது எளிது என் சிற்றறிவு அனுபவம்...