புடிக்காத விஷயத்தைக் கூட பிடித்த விஷயமாக மாற்றும் வல்லமை சிலரின் எழுத்துக்களுக்கு உண்டு. அந்த விதத்தில் வரலாற்றுப் பாடத்தில் வெகுவாக அக்கறை இல்லாத ஒருவனை இன்று வரலாற்றுப் புத்தக வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வைத்திருக்கிறது ஒரு புத்தகம். அப்படி சமீபத்தில் வாசித்த புத்தகம் 'தனிச்சிறப்புமிக்க புகழ்மிகு தொல்லியலாளர்' என்ற பட்டம் பெற்ற பேராசிரியர் முனைவர் கே.வி இராமன் எழுதிய தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை). நூலாசிரியர் பணிபுரிந்த காலத்தில் சிறப்புமிக்க நகரங்களில் அகழ்வாய்வு செய்த அனுபவத்தை கட்டுரை வடிவமாக்கி அந்த காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார்.
கிமு 300 முதல் கிபி 300 வரை தமிழ்நாட்டில் நிகழ்ந்த சில முக்கியமான கைத்தொழில்கள் அல்லது கிராமப்புறத் தொழில்கள் பற்றிச் சொல்லித் துவங்கும் கட்டுரையிலேயே மட்பாண்டத் தொழில், வண்ணப்புனைவு, சுடுமண் பொருட்கள், நெசவு மற்றும் உலோகம் சம்பந்தப்பட்ட தொழில்கள் இருந்திருக்கின்றன என்றும் அதனை எவ்வளவு சிறப்பாகச் செய்தார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே என்று பாரதி சொன்னதை அன்றே செய்திருக்கிறான் மனிதன்.
வரலாற்றில் நாம் கரிகால் சோழனுடைய ஆட்சியையைப் பற்றியும் அவனுடைய தலைநகரமான காவிரிப்பூம்பட்டினத்தையும் பல்வேறு முறை படித்திருப்போம் ஆனால் அப்படிப்பட்ட நகரின் வரலாற்றை பின்னணியைப் படம்பிடித்து காட்டியிருக்கிறார் இந்த தொகுப்பில். சமயங்களும் சமய சிந்தனைகள் வளர்ந்த விதத்தையும் , அந்த ஊரில் நடந்த பல அழகிய விஷயங்களை அருமையாக படம் பிடித்திருக்கிறார். வெறும் அனுபவப் பதிவுகளாக இல்லாமல், எழுதிய எழுத்தின் மூலம் நம்மை அந்த காலகட்டத்திற்கு கூட்டி செல்லும் திறன் அபாரம். தான் எழுதிய எழுத்திற்கு தகுந்த காட்சியமைப்பை வாசகனின் கண்முன்னே கொண்டுவந்துள்ளார். நாம் எப்படி ஓர் இடத்தின் வரலாற்றை வகைப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் விவரித்திருப்பது என்னைப் போன்ற வாசகனுக்கு பயனுள்ளத் தகவலாக இருக்கிறது.
பழைய மனிதர்கள் என்று நாம் ஒதுக்குபவர்கள் தான் நிறைய கண்டுபிடிப்புகளுக்கு விதை போட்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. கற்கருவிகளை பயன்படுத்தியது தொடங்கி விலங்குகளைப் பழக்குவதிலும் பெரும் திறமை கொண்டிருந்தனர் என்று படிக்கும்போது அவர்களின் திறமையையும் அவர்களின் அறிவுக்கூர்மையையும் வியக்காமல் இருக்கமுடியவில்லை.
தொல்லியல் ஆய்வுகள் இல்லையெனில் மனிதனின் கடந்துவந்த பாதையும் அவனுடைய வரலாற்றையும் அறிய இயலாது. நாம் செய்ய வேண்டிய நீண்ட வாசிப்புக்கு இந்நூல் ஒரு சிறந்த துவக்கமாக இருக்கும். கொஞ்ச காலம் வேலை பார்க்க போகும் அலுவலகம் பற்றியே நிறைய தெரிந்து வைத்திருக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம் அப்படி இருக்கையில் வாழும் காலம் வரை இருக்க போகும் இந்த மண்ணின் வரலாறை தெரிந்துகொள்வது நம் கடமை என்றே தோன்றுகிறது.