Search This Blog

Wednesday, December 5, 2018

மறைக்கபட்ட இந்தியா

பொதுவாக மேடைப் பேச்சை,  தகவல் தெரிவித்தல், மகிழ்வூட்டல், கதை  சொல்லுதல் என்றெல்லாம் வகைப்படுத்தலாம்.  இதில் தகவல் தெரிவித்தல் என்பது கேட்கப்  பயனுள்ளதாகவும், பல அரியத்  தகவலைக்  கொண்டுள்ளதாகவும்  இருக்க வேண்டும்.  அதைச்சுவை  குன்றாமலும் சொல்லுதல் அவசியம்.  இந்தக் கருத்து, எழுத்துக்கும் அவசியம் என்று சமீபத்தில் படித்த "மறைக்கபட்ட இந்தியா" புத்தகம் நிலைநாட்டியது. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்நூலை நமக்கு எழுதியவர் நாடறிந்த நல்ல எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணன். 

சுமார் 350 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் உள்ள 52 கட்டுரையிலும்  தகவல்  தகவல் தகவல் என்று இருக்கிறது.  ஆனால்  எங்கேயுமே தகவல் சொல்லும்  சுவை குறையவில்லை. நடையில் தெளிவு, சொல்ல வந்த செய்தியின் உண்மைத் தன்மை  அதற்கான ஆதாரங்கள் என்று பக்கத்திற்கு பக்கம் வியக்க வைத்திருக்கிறார் ஆசிரியர். நாமும்தான் அப்பப்போஊர் ஊராப்   போகிறோம் ஆனால் இவரளவுக்கு ஈடுபாட்டோடு போகிற இடத்தைப் பற்றித்  தெரிந்து வைத்திருக்கிறோமா  என்பது கேள்விக்குறிதான்.  



இந்திய தேசியக் கொடியின் வடிவமைப்பு எத்தனை முறை மாற்றப்பட்டது ? இதில்   வே சா பங்கு என்ன ? டாக்கா மஸ்லின் துணி நெய்தலின் வளர்ச்சி எப்படி தடுக்கப்பட்டது? இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கண மண என்று நாம் மனப்பாடம்   செய்துப் பாடும் பாடல் உண்மையில்  கூறுவது என்ன? ஆங்கிலேயர் தான் நமக்கு ரயில்பாதை போட்டுக்கொடுத்தார்கள் என்று பெருமைக்  கொள்கிறோம். போட்டது என்னவோ அவர்கள் தான். ஆனால்  அதை அவர்கள் சுயநலத்திற்காக போட்டார்கள் என்ற கண்ணோட்டம் யோசிக்கவைத்த  இடத்தில்  ஒன்று.  வெறும் வணிகத்திற்காக வந்த மேற்கிந்திய மக்கள் தாவர வளர்ச்சியையும் தனது லாபத்திற்கு பயன்படுத்திக்கொண்டார்கள்  என்று நினைக்கும் போது "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏத்த வேண்டும் வெளிநாட்டில்" என்ற மருதகாசியின் வைர வரிகள்ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது . ஆனால் அப்படி இருந்த ஆங்கிலேயர்களுக்குள் நல்லவர்களும் இருந்தார்கள் அவர்கள் எவ்விதம் உதவினார்கள் என்று சொன்ன இடங்கள் சபாஷ் போட வைக்கிறது ஆசிரியருக்கும் சேர்த்து.  

சுதந்திர போராட்ட காலத்தில் ரகசிய ரேடியோ (ஆசாத் இந்தியா ரேடியோ) மூலம் சுதந்திரத்  தாகம் ஊட்டிய திருவாட்டி உஷா மேத்தா, நேதாஜி அவர்களின் உழைப்பு, அகில உலகில் அவருக்கு இருந்த மரியாதை, காந்தியும் தாகூரும் கருத்து வேற்றுமையோடு இருந்தாலும் நல்ல நண்பர்களாக ஒருங்கே நாட்டிற்கு உழைத்தது, இண்டிகோ புரட்சி (இண்டிகோ விமானத்திற்கு இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை), திருடர்கள் ஜாக்கிரதை என்று ஏன் / எப்படி வந்தது; அதற்கு காரணம் யார், பங்களாதேஷ் வளர்ந்த / வீழ்ந்த கதை என இவர் பட்டியலிட்டு இருக்கும் கட்டுரைகளில் நெஞ்சைத் தொட்டவை. இது போன்ற கட்டுரைகள், எந்த விதமான புரட்சி வளர்ச்சிக்கு பாதை வகுக்கும் எந்த விதமான புரட்சி அழிவுக்கு பாதை வகுக்கும் என்று எதிர்காலத்திற்கு படம் பிடித்து காட்டும் காலக்கண்ணாடி என்றே தோன்றுகிறது.  யவனர்கள் மற்றும்  ரஷியர்களோடு வெவ்வேறு  காலக்கட்டத்தில் இந்தியாவுடன் கொண்ட பல்வேறு விதமான உறவுப் பாலங்களின்  கதைகள்  மிகவும் சுவாரஸ்யம். 

மொகலாய ஓவியங்கள் மற்றும் நுண்ணோவியங்கள் பற்றிய இரு கட்டுரைகளில்,  இவரின் வார்த்தைகள் மூலம் அந்த ஓவியத்திற்கு வேறு வகையான  வண்ணம் தீட்டி இருக்கிறார். ஒரு புத்தகம் படிக்கும் போது அது சம்பந்தமான இன்னொரு புத்தகத்தை வாசிக்கவோ அல்லது அதைப் பற்றிய தகவலை இன்னும் தேடவோத் தூண்டவேண்டும். அந்த வேலையைச்  சிறப்பாக செய்கிறது இந்தப் புத்தகம்.  

இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது. ஏற்கனவே சமூகத் தளங்களில் பலராலும் பார்க்கப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளையம், தகவலையும், செய்தியையும் கூச்சமே இல்லாமல்  திரும்ப ஒன்று அல்லது இரண்டு  மணி நேரம் பேசிவிட்டு போகின்றப்  பேச்சாளர்கள் இது போன்ற புத்தகத்தைப் படித்து வந்து புதிய தகவலை  அரங்கில் உள்ள மக்களுக்கு சொல்லலாம். சொன்னால் பேச்சாளர்களும் மதிக்கப்படுவார்கள். பார்வையாளர்களும் பயன்படுவார்கள். 

மறைக்கப்பட்ட இந்தியா என்னும் இந்த  நூல் பல அறியத் தகவலை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. "சஞ்சாரம்" என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு எஸ் ரா விற்கு வாழ்த்துக்கள்.