பொதுவாகப் புனைக்கதைகளைப் புனைக்கதைகளாகவே கருதுவதுதான் எக்காலத்திற்கும் ஏற்றது. இந்தப் புனைகதைகளில் உள்ள அரைநிஜங்கள்தான் அந்தக் கதைக்கு உயிரூட்டுகிறது என்று சொல்லலாம். அப்படி நிஜங்களும் உண்மைகளும் கற்பனையும் பின்னப்பட்ட ஒரு 18 கதைகளின் தொகுப்புதான் இந்த இரண்டு விரல் தட்டச்சு. ஒவ்வொரு கதையும் ஒரு ரகம் அத்தனையும் தனி ரகம்.
பெரும்பாலான கதைகள் 2014 ஆண்டிற்கு முன் எழுதப்பட்ட கதைகள். பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை. 40 வயதினர் இந்தப் புத்தகத்தில் வரும் இடங்களையும், பொருட்களைப் பார்த்திருக்க வாய்ப்புண்டு. இல்லையெனில், கேள்வியாவதுபட்டிருப்பார்கள். நாம் மறந்து போன அல்லது மறக்கமுடியாத பல இடங்களுக்குத் தனது வார்த்தைகள் மூலம் வர்ணம் சேர்த்திருக்கிறார் ஆசிரியர்.
வளர்ந்த கிராமம், மாடு வளர்ப்பு, சோதிடம், சகுனம், இடுகாடு போன்ற வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் கதைகள். பெரும்பாலான கதைகளில் வரும் வரிகள் நாம் வீட்டில், அக்கம்பக்கத்தில் கேட்ட வரிகளாகத்தான் இருக்கும். கதாபாத்திரங்களும் வேறு பெயர்களில் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருக்க வாய்ப்புண்டு. அப்படி இருந்தாலும் இந்தப் புத்தகம் புதுசாக எதோ ஒன்றை ஒவ்வொரு கதையிலும் கொண்டுள்ளதுதான் இதன் சிறப்பு.
இதில் பல கதைகள் என்னை ஏதோ ஒரு வகையில் வியக்க வைத்தாலும் இரண்டு கதைகள் மட்டும் மனத்தைத் தைத்தன. அம்மாவின் சாவுச் செய்தியைத் தந்தி அனுப்பவேண்டும். அதை அனுப்பும்போது ஒருவரின் மனநிலைமை எப்படி இருக்கும் என்று மிகக் குறைந்த வரிகளில் கண்ணுக்கு முன்னால் கொண்டு வரமுடியும் என்று நிரூபித்தக் கதை இது. அந்த அலுவலகத்தில் வேலைப் பார்ப்பவர்கள் தந்திகொடுக்க வருபவரை எப்படி நடத்துகின்றனர்? அங்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதைத் இயல்பாகக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். அம்மாவின் சாவுக்குத் தம்பி வந்துவிடுவானா என்ற எதிர்பார்ப்பையும் அதற்கான விடையையும் இரண்டரை பக்கக் கதை கட்டிப்போட்டுக் கண்ணில் நீரை வரவைக்கிறது.
இன்னொரு கதை இரண்டு விரல் தட்டச்சு. எதற்காக இந்தக் கதை தலைப்பை புத்தகத் தலைப்பாய் வைத்தார் ஆசிரியர் என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கதையில் வரும் ரெமிங்டன் டைப்பரைட்டர் என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. 17 வயதில் என்னுடைய முதல் சம்பளம் 100 ருபாய். அது இந்த டைப்ரைட்டர் கொடுத்ததுதான். கல்லூரிக் காலங்களில் (பகுதிநேர) வேலை பார்த்துச் சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என்று சொல்லிக்கொடுத்ததும் இந்த ரெமிங்டன் டைப்ரைட்டர் தான்.. அதனாலேயே என்னவோ இந்தக் கதை எனக்கு ரொம்ப நெருக்கமாகிப் போனது. ஆனால் , அது மட்டும் காரணம் அல்ல என்பது என் மனதிற்கு மட்டுமே தெரிந்தால் போதும் என்பதால், ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நிறைய தந்தைமார்கள் அவர்கள் பட்ட துன்பத்தையும் வாழ்ந்த வாழ்க்கையையும் தன் மகனுக்கோ மகளுக்கோ சொல்வதேயில்லை என்பது தெளிவாகிறது. இதற்கான காரணத்தை அவர்களால் மட்டுமே சொல்ல முடியும்.
எது எப்படியோ திரு அசோகமித்திரன் எழுதிய இந்த "இரண்டு விரல் தட்டச்சு" புத்தகத்தைப் படித்தபோது நான் வாழ்ந்த பல பக்கங்களை அது புரட்டியது என்றுதான் சொல்லவேண்டும். நாளை என் வாழ்வில் நடக்கவிருக்கும் சில நிகழ்வுகளையும் (அது நடக்காமலும் போகலாம்) படம்பிடித்துக் காண்பித்தது போலவே இருந்தது...