Search This Blog

Friday, October 18, 2019

சிம்ம சொப்பனம்

அல்லது சரித்திர சம்பவத்தை எழுதும்போது வெறும் சம்பவங்களின் கோர்ப்பாக எழுதலாம். இல்லை அதையே ஒரு கதை வடிவில் கோர்வையாக சுவைபட எழுதலாம். முதல் வகை பெரும்பாலும் (என்னை போன்றோருக்கு) சலிப்பு தட்டிவிடும். இரண்டாம் வகை  பெரும்பாலானோருக்கு ஆர்வத்தைக் கூட்டிடும் . சரித்திர நாயகர்களைப் பற்றிய புத்தகத்தை படிக்கும்போது பெரும்பாலும் நூலாசிரியரின் கண்கள் மூலம் தான் அந்த நாயகர்களைப் பார்க்க முடியும். ஆனால் சில நேரம் அந்த நூலாசிரியரைத் தாண்டி நம்மால் அந்த நாயகனை நம் கண்களால்  கண்  முன்னே  பார்க்க முடிகிறது என்றால் அது அந்த நூலாசிரியரின் திறமை என்று சொல்லலாம். அப்படி நான் பார்த்த ஒருவர் தான் பிடல் காஸ்ட்ரோ... "சிம்ம சொப்பனம்" என்ற நூலின் மூலம் தான் இவரைப் பார்க்கிறேன். நூலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் நூலாசிரியர் மருதன். 


ஆயிரம் குறைகளைச் சொன்னாலும்  கியூபாவை கியூபர்களுக்கு கொடுத்த மாவீரன் தான் இந்த பிடல் காஸ்ட்ரோ. இவர் எப்படியெல்லாம் போராடினார், எழுச்சித்தரும் வார்த்தைகள் என்னென்ன பேசினார், தன்னுடைய கல்லூரிக் காலங்களில் என்னென்ன போராட்டங்களை நிகழ்த்தினார்.. அமெரிக்கர்களை தைரியமாக எதிர்க்க எப்படியெல்லாம் தன் வாழ்க்கையைத் தொலைத்தார்  என்பதெல்லாம் புத்தகம் முழுவதும்  வருகிறது.. ஆனால் அவருடைய இளம்பருவத்தில் நடந்த சில நிகழ்வுகள் சுவாரஸ்யமானவை. 

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப காஸ்ட்ரோ அவருடைய தந்தையாரிடம் ஏறக்குறைய 10 11 வயதில் கேட்ட சில கேள்விகள் 
ஏழைகள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள்? 
பணக்காரர்கள் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள் ? 
ஏழைகளின் அன்றாட வாழ்வில் ஏன் முதலாளிகளைச் சார்ந்து இருக்கிறார்கள் ? 
என்பது போன்றவைதான். இதற்கு பெரும்பாலும் அவரின் பணக்கார அப்பா தந்த பதில் போய் படிக்கற வேலையைப் பாரு... 

கல்லூரி தேர்தலில் முதல் அரசியல் படியை எடுத்துவைத்து பிறகு நாட்டு அரசியலில் ஈடுபடும்போது பத்திரிகை நடத்துகிறார். தொடர்ந்து கட்டுரைகள் எழுதி மக்களை சிந்திக்கவைக்கிறார். பொதுக்கூட்டங்களில் பேசுவது வீட்டிற்கு வந்து அடுத்தப் பேச்சுக்கு எழுதுவது என்று மட்டுமே தன் வாழ்க்கையை கழிக்கிறார். இதெல்லாம் மிர்தா என்ற அழகிய பெண்ணை திருமணம் செய்தபின்பும் தொடர்கிறது. 

தேனிலவுக்கு அமெரிக்கா செல்கிறார்கள் இந்தப் புதுமண தம்பதியினர். மிர்தாவை அறையில் தங்கவைத்துவிட்டு வெளியில் சென்று இருக்கிற காசுக்கு மார்க்சியம் மற்றும் பல கம்யூனிச சிந்தனைகள் தருகிற புத்தகங்களை வாங்கி வந்து படிக்கலாம் என்று மனைவியையும் கூட்டு சேர்த்துக்கொள்கிறார். அமெரிக்கா போகப்போகிறோம் என்று தெரிந்த உடனேயே இதெல்லாம் எங்கு கிடைக்கும் என்று பார்த்துவைத்துவிட்டேன் என்று பெருமை வேறு பீத்திக்கொள்கிறார் புதுப் பொண்டாட்டியிடம். இதெல்லாம் தான் நம்ம நாட்டைக் காப்பாற்றப்போகும் சிந்தனைகள் என்று வேறு பிரச்சாரம் செய்கிறார் ஹோட்டல் அறையில். 

வீட்டில் எந்த வசதியும் இல்லை. பால்காரன் கடன், மளிகை  பாக்கி வீடு வாடகை என்று அத்தனையும் இருக்கிறது. எந்த வசதியும் இல்லாத வாழ்க்கையில் அவருக்கு இருந்ததெல்லாம் வசதியான நண்பர்கள். உயிரைக்கொடுக்கும் நண்பர்கள். வீட்டில் இருக்கவேண்டிய கட்டில் பீரோ எல்லாவற்றையும்  தவணை முறையில் வாங்கிக்கொடுக்கிறார்கள். கடன்காரர்கள் வந்து எல்லாவற்றையும் கொண்டுபோய்விடுகிறார்கள். இதைப்பற்றி காஸ்ட்ரோவிடம் நண்பர்கள் கேட்கும்போது இதெல்லாம் எங்க வீட்டோடதுதான் என்று தெரியாமல் போய்விட்டதே என்று மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் பத்திரிக்கையில் கட்டுரை எழுதப்போய்விடுகிறார். 

வழக்கறிஞர் ஆகிவிட்ட பின்  பணம் வரும் என்று எதிர்பார்க்கும் மனைவி  மிர்தாவுக்கு ஏமாற்றம் வருகிறது. குடும்பத்தை சரிவர நடத்த வேண்டிய பணத்தை தான் எதிர்பார்த்தார் என்றாலும் அதற்கும் வழி இல்லாமல் போகிறது. நியாயத்திற்காக போராடியதற்காக எதற்கு காசு வாங்கனும் .. அது கடமை என்று பேசும் கணவன் இருந்தால் அவளும் தான் என்ன செய்வாள். 

ஒரே ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் 200 பக்க புத்தகத்தில் 120 பக்கம் வரை அவரை யாரும் அவர் குடும்பத்திற்குள்ளேயே ஒதுக்கிவைக்க வில்லை. நண்பர்கள் யாரும் ஒதுங்கவில்லை. அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வழக்குகளில் தானே வக்கீலாக ஆஜராகிறார். நீதிமன்றத்தில் அவ்வாறு குற்றவாளி கூண்டைவிட்டு இறங்கி வழக்கறிஞராக மாறும் தருணத்தில் அந்த அங்கியைக் கூட பக்கத்தில் இருக்கும் நண்பர்கள்தான் தருகிறார்கள். 

ஒன்றே ஒன்று சொல்ல முடிகிறது.. இப்படியெல்லாம் யாரும் ஆதரவு தரவில்லை என்றாலும் 
 "எமக்குத் தொழில் கவிதை (கஸ்ட்ரோவிற்கு எழுத்து), நாட்டுக் குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என்ற பாரதியின் போக்கில்தான் வாழ்ந்திருப்பார் பிடல் காஸ்ட்ரோ... 

மீதமிருக்கும் பக்கங்களில்  இன்னும் இது போன்ற விஷயங்கள்  நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு வசிப்பினைத் தொடர்கிறேன்... 

Saturday, October 5, 2019

மனைவியின் கடிதம்

இந்தப் புத்தகத்தை பார்த்த போது ரவீந்திரநாத் தாகூரின் மனைவி அவருக்கு எழுதிய கடிதமாக இருக்குமோ என்று நினைத்தது உண்மைதான். Letters from a Father to his daughter என்கிற புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டதால் அது போல ஒரு புத்தகம் என்று நினைத்துவிட்டேன். ஆனால் உண்மையிலே அது அப்படி இல்லை. இரண்டு தேசத்திற்கு தேசியகீதம் எழுதிய ஒரே கவிஞர் என்ற பெருமை கொண்ட தாகூர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். வங்கமொழியில் இருந்து திரு தா நா குமாரசுவாமி மொழிபெயர்ப்பு செய்த இந்தப் புத்தகத்தில் மொத்தம் 7 கதைகள்.. 7 ம் வெவ்வேறு தளத்தில் பயணிக்கும் கதை என்றாலும் எல்லாவற்றிலும் மனித உணர்வுகளும் உறவுகளும் போட்டி போட்டுக்கொண்டு கண்முன்னே வந்துவிட்டு போகிறது. நான் வெவ்வேறு வேலைகளில் இருந்தபோதும் , சில கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், என்னுடன் வருவதை போலவே ஒரு 10 நாளாக உணர்ந்து வருகிறேன். கச்சிதமான பாத்திரப்படைப்பு கனமான காட்சியமைப்பு... 



முதல் கதை போஸ்ட்மாஸ்டர்:
கதை முழுக்க போஸ்ட்மாஸ்டர் என்ற பெயர்கொண்டே வரும் கதாபாத்திரம். ஊரில் தனியாக வசிக்கும் இவருக்கும் அந்த ஊரில் ஆதரவற்று இருக்கும் சிறு பெண் ரதன் என்பவளுக்கும் இடையே மலர்ந்து கருகும் உறவினைப் பற்றிய கதை. போஸ்ட்மாஸ்டரின் அன்பிலேயே கரையும் ஒரு ஜீவனாக ரதன். அந்தப் பெண்ணிற்காகவே தன் அன்பை வேறு எங்கும் காண்பிக்காமல் சேர்த்து வைத்து அவளிடம் காண்பிக்கும் போஸ்ட்மாஸ்டர். அவளுக்கு ஆங்கிலம் படிக்க கற்றுத் தருகிறார். யாரும் இல்லை என்கிற எண்ணத்தை வளரவிடாமல் நம்பிக்கையை மட்டுமே அவள் மனதில் வளர்க்கும் போஸ்ட்மாஸ்டர். போஸ்ட்மாஸ்டருக்கு திடீரென்று காய்ச்சல் வர சிறு பெண் ரதன் என்ன செய்துவிடப் போகிறாள் என்று எண்ணும்போது கதையில் வரும் ஒற்றை வாசகம் திருப்பி போடுகிறது. "அந்தக்கணமே அன்னையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள் ரதன்" என்ற ஒற்றை வரி எந்த வயதானாலும் பெண்ணிடம் தாயுள்ளம் இருக்கும் என்று நிரூபிக்கும் வரி. பிறகு உடம்பு சுகமில்லாமல் போகவே ஊரை விட்டு கிளம்புகிறேன் என்று சொன்ன தருணத்தில் இருந்து கதைமுடியும் வரை ரதன் வெளியில் பேசுவதை நிறுத்தி உள்ளுக்குள் அழ ஆரமிக்கிறாள். கொஞ்சம் காசு குடுத்துவிட்டு போகிறேன் என்று சொல்லும்போதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு படகில் செல்லும் போஸ்ட்மாஸ்டரை திரும்பிக்கூட பார்க்காமல் ஊருக்குள் இருக்கும் போஸ்ட் ஆபீசுக்கு போய் அழுதுகொண்டே இருக்கிறாள். 
அந்தத் தெருக்களில் திரியும் ரதனுக்கு கண்ணதாசனின் வரிகளான
ஆயிரம் வாசல் இதயம், அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார், யாரோ இருப்பார், வருவதும் போவதும் தெரியாது
சொல்ல முயற்சிக்கிறேன்...ஆனால் அவள் பேசுவதாகத் தெரியவில்லை. அன்பு வலியது....
இரண்டாம் கதை: காபூல்காரன்
இதிலும் சுட்டிப் பெண் ஒருவள் காபூல்காரன் மீது அன்பு வைக்க்கிறாள். அவர்களிடையே வரும் அன்பை விட அந்த அன்பை விவரிக்கும் வார்த்தைகள் இந்தக் கதையில் ஈர்க்கின்றன. ரோட்டில் போகும் ஒரு காபூலிவாலாவின் மீது இனம்புரியாத அன்பு ஏற்படுகிறது சுட்டிப் பெண் மினிக்கு. இவர்களின் அன்பு நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது. குழந்தையின் அன்பு காபூல்காரன் மனதிலும் காபூல்காரனின் அக்கறை மினியின் மனதிலும் நீக்கமற நிறைந்துவிடுகிறது. இதனிடையே காபூலிவாலா ஜெயிலுக்கு போய்விட்டு வருகிறான். வரும் நாளன்று மினிக்கு திருமணம். மினியைப் பார்க்க முடிகிறதா. அதன்பின் இவர்கள் சந்திக்கிறார்களா. என்ன ஆகிறது என்று கதை போகிறது. இந்தக் கதையின் காட்சியமைப்பு, குழந்தை மினியின் சுட்டித்தனத்தையும் வளர்ந்த (11 வயது) மினியின் கல்யாண கோலத்தையும் விவரிக்கும் வார்த்தைகள் மூலம் மினியை வாசகனின் இல்லத்தில் ஒரு குழந்தையாக உலவ விட்டிருக்கிறார் தாகூர் என்றே சொல்ல வேண்டும். 
மூன்றாம் கதை: படித்துறையின் கதை
பொதுவாக நம்மைச் சுற்றி இருக்கும் உயிரற்ற பொருள்கள் கதைசொல்லும் படி அமைந்த கதைகள் நிறைய படித்ததாலோ என்னவோ இது மனதில் ரொம்ப ஒட்டவில்லை. ஆனால் இதிலும் அந்த படித்துறை அதில் கடந்து போனவர்களை அன்போடு பார்ப்பதும் விவரிப்பதும் நன்றாக இருந்தது. 
நான்காம் கதை: காரும் கதிரும்
ஒரு நாள் இடைவெளி விட்டு படித்ததாலோ என்னவோ கதை மனதில் ஒட்டவில்லை. 
ஐந்தாம் கதை: மனைவியின் கடிதம்
இந்தக் கதையின் தலைப்புதான் புத்தகத்தின் தலைப்பு. வீட்டில் நடந்த சில அநீதிகளை கணவரிடம் சொல்லும் விதமாக இந்தக் கதை அமைகிறது. கதையில் மூன்று பெண்கள். அதில் மிருனாள் என்ற பெண்ணிற்கு திருமணம் ஆகி 15 வருடாமாகிறது. அந்த 15 ஆண்டில் அவளைச் சுற்றி நடந்த விஷயங்கள் அதில் வந்த பிரச்சனைகள் என்ன அதை அவள் எப்படி சமாளித்தாள், மாமியார் வீட்டில் அதை யார் யார் எப்படிப் பார்த்தார்கள் என்பதை எல்லாம் பொலம்பலாக இல்லாமல் யதார்த்த வரிகளால் நடந்ததைச் சொல்லும் ஒரு கடிதம். இறுதியில் அவள் அந்த வீட்டைவிட்டு வெளியேறுவதற்கான காரணங்களாக அது மாறுகின்றன என்பதைப் பதிவிட்டு வீட்டை விட்டுச் செல்லும் மிருனாள் வாசகனின் மனதைவிட்டு செல்ல மறுக்கிறாள். 
நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இந்தக் கதையில் நான் பார்க்கிறேன். நம்மைச் சுற்றி எது நடந்தாலும் அதற்கு வெவ்வேறு கோணங்கள் இருக்கிறது. நாம் பார்க்கும் கோணமே சரி என்று சொல்ல முடியாது என்பதை வெகு அழகான சம்பவங்களால் பின்னப்பட்ட கதைதான் தான் மனைவியின் கடிதம். 
ஆறாம் கதை: கல்லின் வேட்கை
திரும்பப் படித்தால் மனதில் ஓட்டுகிறதா என்று பார்க்க வேண்டிய கதை இது. 
ஏழாம் கதை: அதிதி
இரண்டு சிறுமிகளுக்கும் ஒரு சிறுவனுக்கும் இடையில் இருக்கும் முக்கோணக் காதல் கதை. பதட்டப்படவேண்டாம். கதை எழுதப்பட்ட காலத்தை வைத்து பார்க்க வேண்டும். கதையில் வரும் ஸோனாமணி 5 வயதில் விதவையாக்கப்பட்ட சிறுமி. இப்போது சுமார் 8 வயது. அவளின் தோழி சாருவிற்கு ஒத்த வயது. கதையின் நாயகன் தாராபதன் சுமார் 13 வயது. சாருவின் பெற்றோர்கள் நாயகனை எடுத்து வளர்க்க நினைக்கிறார்கள்.. அப்படி வளர்த்து வருகிறார்கள் என்று வாசகனுக்கு தெரிந்தாலும் ஸோனாமணிக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறார் ஆசிரியர். இதனால் சாரு மீதே அவளுக்கு பொறாமை வருகிறது. தாராபதனின் கவனத்தை ஈர்க்க இவர்கள் முயற்சிக்கும் இடங்கள், அவனின் பெருமை பேசும் இடங்கள் என்று இந்தச் சிறுமிகள் / குழந்தைகள் செய்யும் காரியம் கண் முன்னே நிற்கிறது. இறுதியில் சாருவின் பெற்றோர்கள் தாராபதனையே தன பெண்ணிற்கு (அவளின் 11 வயதில்) திருமணம் முடிக்கலாம் என்று நின்னைக்கும்போது கதையில் எதிர்பாரா முடிவினைத் தருகிறார் ஆசிரியர். 
நல்ல சில கதைகளைப் படித்த திருப்தி ஏற்படுத்தும் ஒரு புத்தகம். கருவிகளில் மூழ்கியே இருக்கும் நமக்கு நம்மைச் சுற்றி சில கதாபாத்திரங்கள் வாழுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதில் இதுபோன்ற புத்தகமும் வாசிப்பும் பெரிய பங்கு வகிக்கிறது.