நீயும் நானும் எனும் வாழும் கலை மறந்து, நீயா நானா என்று வாழும் நிலை வந்த இந்த சமுதாயத்தில் வருவது... விஜய் டிவியில் வரும் "நீயா நானா" நிகழ்ச்சி. தாய் தந்தை, கணவன் மனைவி, அண்ணன் தங்கை, மாமியார் மருமகள் என ஆரம்பித்து, இயல்.. இலக்கியம்.. சமூகம்.. என்று பல்வேறு தலைப்புகளில் வாரம் தோறும் வார்த்தைகள் வாள் வீச்சு நடத்தும். இது ஆரோக்யமான யுத்தமாக இருந்தாலும், சமீபத்தில் பார்த்த ஒரு தலைப்பு சிந்திக்க வைத்தது என்று சொல்வதுடன் குழப்பத்துக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது.
இப்போது இருக்கும் அம்மாக்கள் பற்றிய பிள்ளைகளின் எண்ணம் அம்மாக்கள் தோற்றத்தில் (?), அழகியலில், எப்படி எல்லாம் மாறவேண்டும், பிள்ளைகள், அம்மாக்கள் பற்றி மனதில் வைத்திருக்கும் உருவகம் என்ன ? பேசுவோம் என்று இந்த நிகழ்ச்சியை நல்லபடியாய் கைதட்டி கோபிநாத் ஆரமிக்க, இதோ பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் / எண்ணங்கள்:
எங்கம்மா ரொம்ப simple -ஆ இருப்பாங்க - எனக்கு அது சுத்தமா புடிக்காது, நான் ரொம்ப modern (?)-ஆன பொண்ணு. அழகின் அடிபடையில் இவளா உங்க மகள்னு கேக்கும் போது ரொம்ப bad-ஆ feel பன்றேன். நான் rich-ஆ modern-ஆ இருக்கும் போது அம்மா ரொம்ப சிம்பிள்-ஆ பழைய ஆளா இருக்கறது uncomfortable-ஆ இருக்கு. எங்கம்மா designer saree கட்டிக்க மாட்டேன்றாங்க, பழைய style-அ கட்டிபாங்க. எங்கம்மா ஒல்லி ஆகனும். எங்கம்மாக்கு saree -க்கு பின் போட தெரியாது. எங்கம்மா hair cut பண்ண மாட்டாங்க. எங்கம்மா பூ வெச்சிப்பாங்க. என்னையும் வேற வெச்சிக்க சொல்லுவாங்க. அது எனக்கு சுத்தமா புடிக்காது. எங்கம்மாவை shopping mall-க்கு கூட்டிட்டு போக அசிங்கமா இருக்கு. மத்த அம்மாக்களை பாக்கும் போது எங்க அம்மா இப்படி குண்டா கொஞ்சம் பாக்க ரொம்ப simple-ஆ இருக்காங்களேன்னு வருத்தமா தான் இருக்கு.
எங்கே போய் கொண்டிருக்கிறது இளைஞர் சமுதாயம் ? அம்மா என்ற சொல்லில் ம் ம என்று 2 மெல்லின எழுத்து வைத்ததே அவள் இரண்டு மடங்கு மென்மையானவள் என்று உணரத்தானே ? என் அம்மா இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும், என்று சொன்ன பிள்ளைகள் கடவுள் கொடுத்த என் அம்மா (கடவுள் போல்) குறை இல்லாதவள் என்று சொல்ல தயக்கம் காட்டியது வருத்தப்பட வேண்டிய விஷயம். நம்மை சுற்றி இருக்கும் எல்லாவற்றிலும் (மனைவி நண்பர்கள் உள்பட), பணம் அழகு பதவி என்று பார்க்கும் மன நிலைக்கு நம்மை நாமே மாற்றி கொண்டுவிட்ட போதிலும், நாம் வளர்ந்த பின் இப்படி இருக்க வேண்டும் என்று நாம் பிறப்பதற்கு முன்னே கனவு கண்ட நம் அம்மாவிடமும் இப்படிபட்ட எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்று சொன்னால், இது ஆபத்தான வளர்ச்சி.
நம் தாய் இந்த வாழ்கை கடலின் கலங்கரை விளக்கம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அன்பால் மட்டுமே சரி செய்து விடும் பலம் கொண்டவள். தாய்மை வேண்டும் என்று விரும்பி பெற்று; விரும்பியதை அடைந்து விட்டோம் என்று கர்வம் கொள்ளாதவள்; மெழுகைப்போல் நம் வளர்ச்சியை, ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டுபவள்.....
உலகில் எல்லா அப்பாக்களும் ஒரே மாதிரி இருந்தாலும், ஒவ்வொரு அம்மாவும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் பெற்ற காவல் தெய்வம்.. குலதெய்வம் தான் என்று அறியும் இளைஞர் சமுதாயம் - அம்மாவை போல் அழகு.......