Search This Blog

Saturday, April 16, 2011

வானமே எல்லை

கருவறையில் இருக்கும் குழந்தைக்கு தாயின் கர்பப்பை எல்லை. அதன் பிஞ்சு கால்கள் தரையில் பட்டவுடன் தாயின் நிழல் கலங்கரை விளக்கம்.  நடைபயிலும் போது தந்தையின் கைப்பிடியே ஆதாரம். சற்றே வளர்ந்தவுடன் ஆசிரியர் தான் எல்லை. பின் இந்த சமுதாயம் அவன் எல்லை. இதை படித்தவுடன் மனிதன் சுதந்திரம் அற்றவன். எப்பொழுதும் ஏதோ ஒரு எல்லைக்கு உட்பட்டவன் என்று நீங்கள் நினைத்தால் நான் சொல்ல வருவது வேறு, நீங்கள் புரிந்து கொண்டது வேறு என்று அடுத்து படித்தால் உங்களுக்கு நிச்சயம் புரியும்.

மனிதன் வளர வளர அவனது மனத்திறன், அறிவுத்திறனும் வளர்கிறது. மனத்தின் வளர்ச்சி மனிதனின் வளர்ச்சி. அதுதான் அவன் வாழ்கையின் எல்லையை நிர்ணயிக்கிறது. அப்படிப் பார்த்தால் மனதின் வளர்ச்சிக்கு, இதுவரை, யாரும் எதுவும் எல்லை விதிக்கவில்லை. அப்படி ஒன்று இருப்பதாகவும் சொல்லவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மனித வாழ்கையின் எல்லைக்கு ஓர் எல்லை என்பது கிடையாது. குழந்தை தவழ ஆரமிக்கும் போது வீட்டின் நான்கு சுவர் தான் அதன் எல்லை. அனால் வளர்ந்தபின் வானமே எல்லை.

வெறும் பேப்பர் போடுவதோடு நிறுத்தியிருந்தால் அந்த தெரு மட்டுமே அந்த சிறுவனுக்கு எல்லையாகிப் போயிருக்கும், அல்லது இராமேஸ்வரம்
இரயில் நிலையம் எல்லையாகிப் போயிருக்கும்.  அனால் வாழ்க்கையில் இன்று பல பேர் மதிக்க கூடிய, உயர் பதவியில், ஏன் அனைவரும் போற்றும் நல்ல மனிதராக நம்மிடையே திரு. அப்துல் கலாம் இருக்கிறார். அவர் தன் மனதையும் அறிவையும் திறந்து வைத்திருந்தார், இன்று நாடு போற்றும் நல்லவராக வாழ்ந்து வருகிறார். தனி மனித வாழ்கை மட்டுமில்லாமல் இந்தியாவின் வளர்ச்சிக்கே எல்லையில்லை என்று மக்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்.

வெறும் செருப்பு தைக்கும் கடையின் கல்லாப் பெட்டி தான் வாழ்கையின் எல்லை என்று எண்ணியிருந்தால் நாம் லிங்கனை இழந்திருப்போம் அல்லவா ?

உதாரணம் என்றால் அப்துல் கலாம், லிங்கன் தானா என்று நீங்கள் யோசிகிறீர்களா? நாட்டில் எல்லாருமே ஜனாதிபதி ஆக முடியாதே என்று உங்கள் மனம் யோசிப்பதை என்னால் உணர முடிகிறது.

என்னுடைய அடுத்த உதாரணம் ஆச்சரியமான மனிதர். பொறுமைசாலி. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடிப்புடையவர். அடுத்தவருக்கு இவரை பிடிக்கிறதோ இல்லையோ, உங்களுக்கு மிகவும் பிடித்தவர். யாரென்று யோசிக்காதீர்கள். வேறு யாரும் இல்லை. நீங்கள் நீங்களே தான். சில வினாடிகள் உங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை (யாருக்கும் தெரியாமல்) சற்றே திரும்பிப் பாருங்கள். எதாவது ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு நிலையில் உங்களின் எல்லை, வளர்ச்சி எப்படி இருந்துது? இப்போது எப்படியிருக்கிறது? வளர்ச்சி உங்களுக்கே புரியும். புடிக்கும். அடைந்த வளர்ச்சி வெளிச்சமிடப்படும். சாதனைகள் சத்தம் போட்டுச் சிரிக்கும். வாழ்க்கையின் வீர்யம் அதிகரிக்கும். தடைக்கற்களாக இருந்த இடத்தில் உங்களின் வெற்றிக் கோடி பறக்கிறதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

வாழ்வில் சாதனைகள் செய்யவும், போதனைகள் பெறவும் இது தான் எல்லை என்று எப்போதும் கிடையாது. அடைய வேண்டிய சாதனைகள் கணக்கிலடங்கா.  அறிவுக் கண்ணால் மனதை திறந்து வைத்துக் கொண்டு இந்த உலகத்தைப் பார்க்க கற்று கொண்டால் எராளமான வாய்ப்புகள் வாசற்படி வந்து நிற்கும் என்பது உறுதி. அப்படி உள்ளோர்க்கு வானம் தான் எல்லை.

அடைய வேண்டியவை ஆயிரமிருந்தாலும்
நமக்குள் நாமே அகப்பட்டுக் கொண்டால்
அடைவது என்னவோ அர்த்தமில்லாத
ஆதி மனித வாழ்க்கை தான்.

(2006 ஆம் ஆண்டு தட்ஸ்தமிழ் இணையத்தளத்தில் பிரசுரமான என்னுடைய கட்டுரை இது).

No comments:

Post a Comment