Search This Blog

Thursday, November 16, 2017

உயர்ந்த  மனிதர்

அவசர அவசரமாகத் தான் MRT வந்தேன். வரும் போதே ஒரே கூட்டம். கூட்டத்திற்கான காரணத்தை channel news asia செயலியில் தேடியபடி கைத்தொலைப்பேசியில் என்னை தொலைத்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு பெட்டியின் நுழைவாயிலிலும் கூட்டம். எங்கு போய் நிற்கலாம் என்று யோசிப்பதற்குள் ஐந்தாறு பேர் கூடிக்கொண்டே போனார்கள். ஒரு வழியாக இராசியான எண் 6 என்று போட்டிருக்கும் வாயிலை தேர்ந்தெடுத்து இரயிலுக்காக காத்திருந்தேன்.

எனக்கு முன்னால் ஒரு 10 பேர் இருந்தார்கள். அத்தனை பேருக்கும் இரண்டு பொருத்தங்கள். ஒரு நிமிடத்திற்கு ஒரு வண்டியை பார்த்து பழிகிவிட்டதாலோ என்னவோ இன்று சுமார் அரை மணி நேரத்திற்கு ஒரு வண்டி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத மன இருக்கம் அனைவரின் முகத்தில் அவ்வப்போது நிமிரும் போது தெரிந்தது ஒன்று. இன்னொன்று அனைவரும் கைத்தொலைப்பேசியில் தன்னை தேடிக்கொண்டிருந்தார்கள்.
காலை வேளையில் பெரு விரைவு ரயில் வண்டியில் ஏற வேண்டும் என்றால் ஏரோபிக்ஸ் அல்லது ஜிம்னாஸ்டிக் தெரிந்து வைத்திருக்க வேண்டும் போல...
என்ற தோழியின் முக புத்தக postக்கு உண்மையான லைக் தெரிவிச்சிட்டு இருக்கும் போது ஒரு வழியாக முதல் வண்டி வந்தது. முன் இருந்த 10 பேரில் 2 3 பேர் ஏறினார்கள்.

எனக்கு முன் இருந்த ஆண் மகனைப் பற்றி சொல்ல வேண்டும். நல்ல உயரம். கட்டு மஸ்தான உடல். முகத்தில் பதட்டம் இல்லை - அதைவிட ஆச்சரியம் அவரின் கையில் கைத்தொலைப்பேசி இல்லை - காதில் headset இல்லை - கைக்குள் அடைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு பெரிய புத்தகமும் இல்லை. ஏதோ ஒரு வகையில் என்னுடைய கவணத்தை ஈர்த்தார்.

முதல் இரயில் போனவுடன் எனக்கு tension ஏறியது. அடுத்த வண்டி வருவதற்கு 20 நிமிடம் ஆகலாம் என்று அறிவிப்பு வந்தது. 20 நிமிடமும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனிக்காமல் கைத்தொலைப்பேசியில் மூழ்கினேன். ஆனால் அவ்வப்போது பக்கத்தில் நின்றிருந்த அவரின் அமைதி மட்டும் என்னை ஈர்த்துக் கொண்டிருந்தது. அடுத்த வண்டி வந்தது. 5 6 பேர் எற முயற்சித்தார்கள். இந்த உயர்ந்த  மனிதர் மட்டும் வரிசைப்படி சென்று கொண்டிருக்க எங்கேயோ பின்னாடியில் இருந்து ஓடி வந்து ஏற முற்பட்டார் ஒருவர். ஏறியும்விட்டார். அவரின் தேக அமைப்பு அப்படி. காற்றாய் கலக்கும் உருவம்.

அடுத்த வண்டி சற்று சீக்கிரமே வந்தது. முந்திக்கொண்டு ஏற முயற்சித்தேன். எனக்கு முன் நின்ற உயர்ந்த மனிதர் வரிசைப்படி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தார். கூட்ட நெரிசல், இரயிலின் தாமதம் என்று எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட (?) நான் முந்திக்கொண்டு இரயிலில் ஏறிவிட்டேன். சாதனை படைத்துவிட்டோம் என்று மனம் நினைத்தாலும் ஏறிய உடன் என்னையறியாமல் கூச்சமாக இருந்தது தளமேடையில் நின்ற அவரின் முகத்தை பார்க்க.

“ have to go for medical check up wif my son and now he not able to get into the mrt” என்று ஆங்கிலத்தில் தன்னுடன் வந்தவரிடம் ஒரு சீனப்பாட்டி கூறிகொண்டிருந்தார்.

கதவுகள் மூடுவதற்கு முன் தளமேடையில் நின்றிருந்த உயர்ந்த மனிதரை பார்க்க முயற்சித்தேன். கண்களில் அதே அமைதி. முகத்தோரம் சிரிப்பு. என்னை பார்த்து சிரிக்கிறார் ஏதோ சொல்ல வருகிறார் என்று நினைத்தால் அவர் என்னை பார்க்கவில்லை. என்னைத் தாண்டி என் பின்னால் பேசிக்கொண்டிருந்த சீனப் பாட்டியிடம் You go first will join later என்று அதே சிரிப்புடன் கூறியது அலுவலகம் வந்த பின்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Sunday, November 12, 2017

கம்பன் காவியத்தில் ஆசை அண்ணன் , அன்புத் தம்பி

திரு அத்தாழநல்லூர் கிருஷ்ணன் வரதராசன் (அ . கி. வரதராசன்) ஐயா எழுதிய கம்பன் காவியத்தில் ஆசை அண்ணன் அன்புத் தம்பி புத்தகம் படித்த உடன் அதை பற்றிய என்னுடைய பதிவினைப் போட வேண்டும் என்று தோன்றியது. இது எந்த வகையிலும் நூல் ஆய்வு அல்ல. கம்பனையும் அ கி ஐயா வையும் பற்றி பேசும் அளவிற்கு எனக்கு அறிவும் அனுபவமும் இல்லை. ஆகவே இதை நூல் ஆய்வாகப் பார்க்க வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் .


புத்தகம் பற்றி:
வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தில் மொத்தம் 216 பக்கங்கள். அட்டை படத்திலேயே மாயாபஜார் S V ரங்காராவ் போல ஒரு உருவம் - போர் ஆயுதமான கதையுடன்.. ஓரளவுக்கு யார் என்று ஊகிக்க முடிகிறது.. மற்றும் அண்ணன் தம்பி போன்ற இரு முகங்கள். அசுர குலத்தில் இருந்து யாரையோ பற்றி பேசப்போகிறார் என்பது இங்கேயே தெரிகிறது.

12.05.2017 அன்று புதுச்சேரி கம்பன் விழாவில், அக்கழகத்தாரால் வழங்கப்படும் கம்பவாணர் புலவர் அ . அருணகிரி அறக்கட்டளை கம்பன் ஆய்வு நூல் பரிசை பெற்ற நூல் இது.




மொத்தம் 10 கட்டுரைகள் கொண்ட இந்த புத்தகத்தில் முதல் 12 பக்கங்கள் முனைவர் சுப. திண்ணப்பன் ஐயாவின் முன்னுரை. இலக்கியத்தையும் இலக்கணத்தையும் கரைத்து குடித்த இவரின் எழுத்துக்கள் புத்தகத்தை படிக்க மேலும் ஆர்வத்தைக்  கூட்டுகிறது. கம்பன், திருவள்ளுவர், திருமூலர்  என்று அனைவரையும் மேற்கோள் காட்டி ஒரு கருத்து கலவையை கொடுத்திருக்கிறார். புத்தகத்தின் நோக்கத்தை தெளிவாக அவருக்கே உரிய பாணியில் மேற்கோளுடன் காட்டியிருக்கிறார். முற்பகுதி ஒப்பீடு நோக்கிலும், பிற்பகுதி விளக்க நிலை நோக்கிலும் "குணங்களால் உயர்ந்தான்" எனக் காட்டும் முயற்சியே இந்நூல் என்று தெளிவாகக்  குறிப்பிடுகிறார்.

இந்த நூலிற்கான  மதிப்புரையை  வழங்கியவர் நிறைய தமிழ் பண்களை கர்நாடக இசை வடிவம் கொடுத்து பாடக்கூடிய பாடகி, பேச்ச்சாளர், எழுத்தாளர், சென்னை கம்பன் கழகத்தின் இணைச் செயலாளர் என்ற பல பெருமைகளைக் கொண்ட கலைமாமணி முனைவர் திருமதி சாரதா நம்பி ஆரூரன் அவர்கள். நூல் ஆசிரியரை வாய் நிறைய அண்ணா என்று அழைக்கும் இந்த அன்புத்  தங்கை ஒன்றல்ல இரண்டல்ல 22 பக்கங்கள் இந்த நூலை அலசி ஆராய்ந்திருக்கிறார் என்பது இந்த நூலின் சிறப்பு. 

இராமாயணத்தின் அறத்தைப்  பற்றி பேசி விட்டு  ஒவ்வொரு தலைப்பையும் ஆய்வு கோணத்தில் அணுகியுள்ளார் என்பதே என் கருத்து அண்ணனுக்கு (நூலாசிரியருக்கு) எந்த விதத்திலும் தங்கை சளைத்தவர் அல்ல என்பதை 22 பக்கத்திலும் நிரூபித்திருக்கிறார். சுமார் 180 பக்கத்தின் கருத்தை  ஒரு 22 பக்கத்திற்குள் சுருக்குவதோடு மட்டுமல்லாமல்,  பல நூல்களில் இருந்து தகுந்த  மேற்கோள்களைக்  காட்டி, நூலாசிரியர் சொன்னதையெல்லாம்  சொல்லியும் விடாமல் சுவை கூட்டியிருக்கிறார். நூலாசிரியர் சொற்களை நுணுகி ஆராயும் திறனை இவர் ஆராய்ந்த விதம் அருமை. 

அடுத்த 6 பக்கத்திற்கு டாக்டர் ந. செல்லகிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை. இவரும் நூலிற்குத்  தேவையான அணிந்துரையை கச்சிதமாகக்  கொடுத்திருக்கிறார். 

இந்த 43 பக்கங்கள் வரை மூன்று ஜாம்பவான்கள் எழுதிய எழுத்தில் ஒன்று தெளிவாக தெரிகிறது. இவர்கள் மூவரும், கம்பனையும், தமிழையும், இந்த நூலையும் கரைத்துக்  குடித்தவர்கள் என்றாலும், நூலாசிரியருக்குத்  தகுந்த மரியாதையை கொடுத்து, தங்கள் எல்லைக்குள் நின்று தேவையானதை மட்டுமே எழுதியிருக்கிறார்கள். 

அடுத்து என்னுரை என்ற ஆசிரியரின் உரை. பல சொந்தங்கள் இருந்தாலும் அண்ணன் தம்பி என்கிற உறவினை எடுத்துக்கொண்ட நோக்கத்தில் தொடங்கி 
பறவை இனத்தவர்கள் 
குரக்கு இனத்தவர்கள் (குரங்கினத்தை இப்படித்தான் நூலாசிரியர் கூறுகிறார் - ஏன் என்று படித்து தெரிந்துகொள்ளுங்கள்)
அரக்கர்கள் 
மானுடர்கள் 
இந்த நால்வகைச் சகோதரர்கள் பற்றிச் சிறியதொரு பொது கண்ணோட்டத்தை முதலில் சொல்லிவிட்டு இறுதியாக கும்பகருணன் பாத்திரப் படைப்பைக் கம்பன் கவிதை நயம் மூலம் இரசித்து, தான் பெற்ற இன்பத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டு நன்றியுரையும் கூறுகிறார் நூலாசிரியர். 

பறவை அண்ணனின் பாசம்  என்ற முதல் கட்டுரையில் சடாயுவும் சம்பாதியும் பற்றி விவரிக்கிறார். சடாயு தம்பி; சம்பாதி அண்ணன் . இவர்கள் இருவரிடையே சிறு வயதில் ஏற்பட்ட போட்டியைப்  பற்றி எழுத ஆரம்பித்து அதில் எப்படி சம்பதியின் சிறகுகள் எரிந்து போயின என்று சுவாரஸ்யமாகக்  கூறியிருக்கிறார். பிறகு அனுமன் சம்பாதி சந்திப்பு ; இருவரின் உடல் வலிமையை கம்பன் வர்ணிப்பது தொடங்கி சடாயுவின் மரணத்தை அனுமன் மூலமாகத்  தெரிந்துகொண்ட சம்பாதி தன் தம்பியின் மேல் உள்ள பாசத்தில் அவன் கண்கள் குளமாகாமல் கடல் ஆகிவிட்டன என்று கம்பன் கூறுவதை அவரைப்  போலவே அழகாக கூறியுள்ளார் ஆசிரியர். பாசத்தின் வெளிப்பாட்டை

"வெங்கதம் வீசிய மனத்தன், விம்மலன், 

நன்கு படம் பிடித்துக் காட்டும் சொற்களை அழகாக விவரித்து உள்ளார். 

சடாயுவின் மரணத்திற்கு , யமனை வசை பாடும் போது. 
‘காலனே என் காலடியில் வாடா!
உன்னை என் காலால் எட்டி உதைக்கிறேன்.’

என்கிற பாரதியின் வரிகளை நினைவு படுத்துகிறான்  சம்பாதி.

பறவை இனத்தை கம்பன் கூறியதை நயம் கருதி அவர் பாடல் மூலமாகவே சொல்லி ஆங்காங்கே ஆசிரியர் அதை விட அழகாகச்  சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறார். 

இராமன் சீதையைப் பிரிந்ததால் எப்படி இருந்தான் என்று கம்பன் கூறும்போது
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம்
என்று பதிவு செய்கிறான்.
அதாவது உயிர் இல்லாமல் ஆனால் இயக்கம் மட்டும் கொண்ட ஓர் இயந்திரப் படிவம் போல் இருந்தான்
எனக் கூறுகிறான்.
ஆம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், கம்பன் கண்ட அறிவியல் தெளிவுதானே நவீனக் கண்டுபிடிப்பான ROBOT! அதாவது இன்னுயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம்

மெய்ஞானம் தரும் காப்பியத்தில் விஞ்ஞானம் கண்டிருக்கிறார் ஆசிரியர்.

அடுத்ததாக  குரக்கினத்து அண்ணன் கொண்ட பாசத்தை  விவரிக்கிறார். அண்ணன் வாலி தம்பி சுக்ரீவன். இவர்களுக்கு அப்பா வேறு அம்மா ஒருவர் என்ற அதிர்ச்சி தகவலுடன் இந்த கட்டுரை பயணிக்க தொடங்குகிறது. 

மோடு தெண் திரை முரி தரு கடல் என முழங்கி 



என்று துவங்கும் பாடலில் உள்ள உயர்வு நவிற்சி அணியை சுட்டி காட்டவும் தவறவில்லை நூலாசிரியர். சில பாடல்களுக்கு வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கூறும் இந்த கட்டுரையில் நூலாசிரியர் கம்பன் காட்டும் குரக்கினத்தின் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தார் என்று புலப்படுகிறது. வாலி இராமன் போர் முடிந்து வாக்குவாதம் முடிந்து இராமனிடம் வாலி கேட்ட முதல் வரமே தன் தம்பிக்காக என்ற சுவையான தகவலை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சரியான சிந்திக்காத  வாலியின், பெரிதினும் பெரிதான உள்ளத்தை கம்பன் படம் பிடித்து கட்டுவதை நல்ல திரைக்கதை மூலம் நூலாசிரியர் நமக்கு காட்டுகிறார். வாலி  தன் உயிர் பிரியும்  நேரத்தில் இராமனிடம் பேசிய  பேச்சு முழுக்க அவன் தம்பியைப்  பற்றி தான் இருந்தது என்று பார்க்கும் போது, குரங்கிலிருந்து வந்த நாம் மட்டும் ஏன் சொந்தங்களை பொதுவாக தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

மானிட சகோதரர்களிடையே நிலவிய அன்பின் வலிமையை அடுத்த கட்டுரையில் ஆசை அண்ணன் , அன்புத் தம்பி என்ற தலைப்பில் எழுதியுள்ளார் நூலாசிரியர்.  கடவுளின் அவதாரம் என்று போற்றப்படும் இராமனே கோபத்தின் வடிவாக சித்தரிக்கப்படுகிறான். இதுவுமே அவன் தம்பி லட்சுமணன் மீதுள்ள  பாசத்தினால்தான். இந்தரஜித்துடன் போர் புரிந்து லட்சுமணன் மூர்ச்சையாகி கிடைக்கும் நேரத்தில் கம்பன் தன் பாட்டின் மூலம் போர்க்களத்திற்கு அழைத்துச் சென்றார் என்றால் நூலாசிரியர் போர்க்களத்தை தன் எழுத்தின் மூலம் நம் கண் முன்னே கொண்டு வருகிறார். தான் படைத்த கதாநாயகனை கேடு இலாதான் என்று கம்பனே கூறுகிறான். தன் தம்பியின் மேல் உள்ள பாசத்தில் நடுநிலை தவறி இராமன் எப்படி அடைக்கலம் தர வேண்டியவர்களையே  கோபித்துக்கொள்கிறான் என்று ஓரிடத்தில் தீர்க்கமான கருத்துக்கள் மூலம் முன் வைக்கிறார் நூலாசிரியர். அதே  போல் இராமன், லட்சுமணன், பரதன் சத்ருகுணன் ஆகிய நால்வரிடையே இராமன் நிலை அண்ணன் என்பது மட்டுமே; பரதன் இலட்சுமணன் இருவர் நிலையும் தம்பியர் என்பது மட்டுமே. 

தகுந்த ஆதாரங்களோடு, பாடல்களோடு , விவரங்களோடு இக்காப்பியத்தில் காணப்படும் மானிட இடம், பறவை இனம், குரக்கு இனம் ஆகிய எந்த இனத்துச் சகோதரர்களை எடுத்துக்கொண்டாலும், எந்த ஒரு பாத்திரமும் "அண்ணன் -தம்பி" என்ற இரு நிலைகளிலும் ஒளி வீசிப் பிரகாசிப்பதாகக் காண முடியாது என்ற தீர்க்கமான முடிவோடு அடுத்த ஏழு  கட்டுரைகளில் இந்த நூலின் நாயகன் கும்பகருணனின் புகழைப் பாடுகிறார். 

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுநந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும் நுாற்றுப்பத்தொன்பது (119) படலங்களையும் உடையது.

இப்பேற்பட்ட காப்பியத்தில், மூன்றாவது காண்டத்தில் (ஆரண்ய காண்டம்) அறிமுகம் காணும் கும்பகருணனைப் பற்றி நூலாசிரியர் 4, 5, 6 என்று மூன்று கட்டுரைகளில் அறிமுப்படுத்துகிறார். சூர்ப்பனகை மூலம் முதன் முதலில் இவனின் பெயர் சொல்ல படுகிறது. அதுவும் சொல் பிசகியதால் எப்போதும் தூங்கும் வரத்தை பெற்ற கும்பகருணன் என்று அவ்வளவாக சிறப்பானதொரு அறிமுகம் இல்லை. ஆனால் மிக அதிகமான பாடல்களைக் கொண்ட படலம் இந்த கும்பகருணன் வதைப்படலம் தான். (மொத்தம் 360 பாடல்கள்) 

குன்றினும் உயர்ந்த தோளான் என்ற வரிகள் இடம்பெறும் நன்று இது கருமம் என்னா என்று துவங்கும் பாடலில், கூறாமல் கூறும் கருத்தினை விவரிக்கும் நூலாசிரியரின் எழுத்துத்திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. கும்பகருணனின் கிடந்த, அமர்ந்த, மற்றும் நின்ற கோலத்தை கம்பன் தன் பாட்டின் மூலம் விவரிக்கிறான் என்றால் நூலாசிரியர் அந்த பாடல்களுக்கு உயிர் கொடுக்கிறார். 

பிறகு பிற பாத்திரங்கள் வாயிலாகத் தரப்படும் கும்பகருணன் பற்றிய செய்திகளை ஒரு கட்டுரையில் சுவை குறையாமல் தருகிறார். மீண்டும் இங்கு உயர்வு நவிற்சி அணி தெரியும் 

தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின் 

என்ற பாடலைத்  தருகிறார்.. . 

தாள் உயர்த்தி தாமரைத் தளங்கள் தம்மொடும் 



என்று ஆரண்ய கண்டத்தில் உள்ள சூர்ப்பனகைப் படலத்துப் பாடலை இங்கே கொடுக்க மறக்கவில்லை நூலாசிரியர். இப்பேற்பட்ட தோள் கொண்ட இராமன் கும்பகருணன் தோளின் பரப்பைப் பார்த்து வியந்து நிற்கிறான். காப்பிய நாயகன் இராமனின் வாய் மொழியாக  நூலின் நாயகனான அசுரர் குலத்தின் கும்பகருணனை கம்பன் பாடியுள்ளார் என்ற நுட்பத்தையும் இராமனை விடவும் கும்பகருணனை எவ்வளவு நூலாசிரியர் வியக்கிறார் என்ற கருத்தையும்  ஒரு சேர இந்த கட்டுரையில் போகிற போக்கில் பதிவிடுகிறார்.  

அடுத்த  கட்டுரை அன்புத்  தம்பி  என்று 37 பக்கங்கள் ஒதுக்கி எழுதியிருக்கிறார். காரணம் கம்ப இராமாயணத்தில் கும்பகருணன் என்னும் உடன்பிறப்புப் பாத்திரம் மட்டும் தான், அண்ணன் , தம்பி என்ற இரு நிலைகளிலும் ஒப்பின்றி ஒளிர்கின்றது. அண்ணனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் அண்ணனின் உயிரைக் காக்க , தனக்கு இருக்கும் இறுதி ஆயுதம் தன்னுடைய உயிர் என்னும் நோக்கத்தில் தான் அவன் உயிரை விடுகிறான். இடிப்பாரை இல்லாத ஏமரா  என்ற நிலைக்கு அண்ணன் தள்ளப் பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட உயிர் தியாகம் தான் கும்பகருணனின் மரணம் என்று நூலின் நாயகனுக்காக வாதாடுகிறார் நூலாசிரியர். அண்ணன் செய்த தவறை சுட்டி காண்பிக்கும்போது கூட "உனக்கு நலமளிக்கும் சிலவற்றைச் சொல்ல அனுமதிப்பாய் " என்று அண்ணனை வேண்டிக்கொண்ட பின்னரே இந்த தம்பி பேச ஆரம்பிக்கிறான். 

முழுக்க முழுக்க கூர்மையான சொற்கள் கொண்டு கும்பகருணன் தன் அண்ணனுக்கு நல்லுரை கூறும்போது நடுவில்  பொருத்தமான  நாலடியார் பாடலையும் நினைவு கூறுவது நூலாசிரியரின் பரந்த விரிந்த தமிழறிவை சுட்டுகிறது.நூலின் சுவையை கூட்ட சுமார் 1,300 பாடல்களை   fast-forward  செய்து விவரித்த விதம் அருமை அருமை.  போருக்கு போக வேண்டிய காரணத்தை இராவணன் கும்பகருணனிடம் சொன்ன உடனே இந்த அன்புத்தம்பியிடமிருந்து புறப்பட்ட சொல்லம்புகளை  அழகாக எளிய விதத்தில் எடுத்துரைக்கிறார்.  நூலாசிரியரின் பார்வையில் அண்ணனும் உயிர் வாழ வேண்டும்; சீதையும் விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் கும்பகருணன், அண்ணன் என்ன செய்ய வேண்டும் என்பதை எந்த விதமான ஒளிவோ, மறைவோ இல்லாமல், நேரடியாக, வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொல்லிவிடுகிறான்.

ஆனால் கும்பகருணன் செஞ்சோற்றுக் கடனுக்காக தன் உயிரை விடவில்லை என்ற நிலைப்பாட்டை ஒரே கட்டுரையில் நூலாசிரியர் 3 4 இடங்களில் விவரித்த நோக்கம் தான் புரிந்துகொள்ள முடியவில்லை. 

அடுத்த கட்டுரையை கடைசியில் பார்ப்போம். இப்போது 41 பக்கம் இருக்கும் 9ஆவது கட்டுரை ஆசை அண்ணன்  என்ற தலைப்பில் கும்பகருணனை  அனைவரும் ஆசை படும் அண்ணனாக, தகுந்த ஆதாரங்களோடு (கம்பன் காட்டும் 9 பாடல்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டு) காட்டியிருக்கிறார் நூலாசிரியர் . கர்நாடக இசை கச்சேரியில் ஒன்றிரண்டு  ஸ்வரங்களை வைத்து வெகு நேரம் ஆலாபனை செய்வார்கள். அப்படி முந்தி வந்து இறைஞ்சினானை  என்ற பாடலில் வந்த உய்ந்தனை என்கிற வார்த்தையை வைத்து கச்சேரி நடத்தியிருக்கிறார். வீடணன் ஏன் இராமனை விட்டு வர கூடாது என்பதற்கு  பல காரணங்களை (அறிவுரைகளாக) சொல்லாமல் தன் வாதத்தை தம்பி வீடணன் ஏற்றுக்கொள்ளும்படியும் கூறும் இடத்தில் மனதில் அசையா சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துகொள்கிறான் இந்த ஆசை அண்ணன். குரக்கினத்து அண்ணனை போலவே இவனும் தம்பியின் உயிரைகாப்பாற்ற இராமனிடம் கடைசி நேரத்தில் வேண்டுகிறான். . . 

8 ஆவது  மற்றும் 10 ஆவது  கட்டுரைகள் அருமைத் தம்பிதானா  - உரைகல்  என்றும் மற்றும் ஆசை அண்ணன்தானா  ? - உரைகல்  என்ற தலைப்புகளில் நூலின் நாயகன் கும்பகருணன் உண்மையிலே ஆசை அண்ணனாகவும் அருமைத் தம்பியாகவும் இருக்கிறானா என்று மீண்டும் சோதனை செய்து பார்த்துவிடுகிறார் நூலாசிரியர். எவ்வழியோர்களும் இரங்கி ஏங்கினார் என்ற பாட்டின் மூலம் எல்லோரும் மதிக்கும் எல்லோரிடம் அன்பு செலுத்தும் கதாபாத்திரமாகவும் இருந்தான் நூலின் நாயகன் கும்பகருணன். அண்ணன் இராவணனுக்கு அன்புத் தம்பியாகத்தான் கும்பகருணன் இருந்தான் என்பதற்கு இந்தக் கண்ணீரே உரைகல்  . மனம், காயம்,  வாக்கு என்ற மூன்று வகையிலும் ஆசை அண்ணனாக கும்பகருணன் எப்படி ஒளிவீசி நிற்கிறான் என்பதை கண் முன்னே காட்டுகிறார்.


முடிவுரையில் கும்பகருணன் தொடர்பாக வால்மீக்கியின் மூலக்காப்பியதில் இருந்து கம்பன் எப்படி மாறுபடுத்தியிருக்கிறான் என்பதை நூலாசிரியர் அழகாகவும் ஆழமாகவும்  பட்டியலிடுகிறார். அதோடு நில்லாமல் கம்பன் மூலக் கதையிலிருந்து பல மாற்றங்களை செய்த போதிலும் அவற்றிற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார். 

நம் கற்பனையை வளர்த்துக் கொண்டு,  இந்த நூலின் நாயகன் கும்பகருணனை, எவ்வளவு பெரியவன் என்று எண்ணினாலும் நாம் கொண்ட அந்த எண்ணத்தை விட அதிக மடங்கு பெரியவன் ஆக்கி நிற்க வைக்கிறார் நூலாசிரியர். (எண்ணினும் பெரியன் ஆன)

வேறொரு புத்தகத்தோடு சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன்.