Search This Blog

Thursday, November 16, 2017

உயர்ந்த  மனிதர்

அவசர அவசரமாகத் தான் MRT வந்தேன். வரும் போதே ஒரே கூட்டம். கூட்டத்திற்கான காரணத்தை channel news asia செயலியில் தேடியபடி கைத்தொலைப்பேசியில் என்னை தொலைத்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு பெட்டியின் நுழைவாயிலிலும் கூட்டம். எங்கு போய் நிற்கலாம் என்று யோசிப்பதற்குள் ஐந்தாறு பேர் கூடிக்கொண்டே போனார்கள். ஒரு வழியாக இராசியான எண் 6 என்று போட்டிருக்கும் வாயிலை தேர்ந்தெடுத்து இரயிலுக்காக காத்திருந்தேன்.

எனக்கு முன்னால் ஒரு 10 பேர் இருந்தார்கள். அத்தனை பேருக்கும் இரண்டு பொருத்தங்கள். ஒரு நிமிடத்திற்கு ஒரு வண்டியை பார்த்து பழிகிவிட்டதாலோ என்னவோ இன்று சுமார் அரை மணி நேரத்திற்கு ஒரு வண்டி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத மன இருக்கம் அனைவரின் முகத்தில் அவ்வப்போது நிமிரும் போது தெரிந்தது ஒன்று. இன்னொன்று அனைவரும் கைத்தொலைப்பேசியில் தன்னை தேடிக்கொண்டிருந்தார்கள்.
காலை வேளையில் பெரு விரைவு ரயில் வண்டியில் ஏற வேண்டும் என்றால் ஏரோபிக்ஸ் அல்லது ஜிம்னாஸ்டிக் தெரிந்து வைத்திருக்க வேண்டும் போல...
என்ற தோழியின் முக புத்தக postக்கு உண்மையான லைக் தெரிவிச்சிட்டு இருக்கும் போது ஒரு வழியாக முதல் வண்டி வந்தது. முன் இருந்த 10 பேரில் 2 3 பேர் ஏறினார்கள்.

எனக்கு முன் இருந்த ஆண் மகனைப் பற்றி சொல்ல வேண்டும். நல்ல உயரம். கட்டு மஸ்தான உடல். முகத்தில் பதட்டம் இல்லை - அதைவிட ஆச்சரியம் அவரின் கையில் கைத்தொலைப்பேசி இல்லை - காதில் headset இல்லை - கைக்குள் அடைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு பெரிய புத்தகமும் இல்லை. ஏதோ ஒரு வகையில் என்னுடைய கவணத்தை ஈர்த்தார்.

முதல் இரயில் போனவுடன் எனக்கு tension ஏறியது. அடுத்த வண்டி வருவதற்கு 20 நிமிடம் ஆகலாம் என்று அறிவிப்பு வந்தது. 20 நிமிடமும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனிக்காமல் கைத்தொலைப்பேசியில் மூழ்கினேன். ஆனால் அவ்வப்போது பக்கத்தில் நின்றிருந்த அவரின் அமைதி மட்டும் என்னை ஈர்த்துக் கொண்டிருந்தது. அடுத்த வண்டி வந்தது. 5 6 பேர் எற முயற்சித்தார்கள். இந்த உயர்ந்த  மனிதர் மட்டும் வரிசைப்படி சென்று கொண்டிருக்க எங்கேயோ பின்னாடியில் இருந்து ஓடி வந்து ஏற முற்பட்டார் ஒருவர். ஏறியும்விட்டார். அவரின் தேக அமைப்பு அப்படி. காற்றாய் கலக்கும் உருவம்.

அடுத்த வண்டி சற்று சீக்கிரமே வந்தது. முந்திக்கொண்டு ஏற முயற்சித்தேன். எனக்கு முன் நின்ற உயர்ந்த மனிதர் வரிசைப்படி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தார். கூட்ட நெரிசல், இரயிலின் தாமதம் என்று எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட (?) நான் முந்திக்கொண்டு இரயிலில் ஏறிவிட்டேன். சாதனை படைத்துவிட்டோம் என்று மனம் நினைத்தாலும் ஏறிய உடன் என்னையறியாமல் கூச்சமாக இருந்தது தளமேடையில் நின்ற அவரின் முகத்தை பார்க்க.

“ have to go for medical check up wif my son and now he not able to get into the mrt” என்று ஆங்கிலத்தில் தன்னுடன் வந்தவரிடம் ஒரு சீனப்பாட்டி கூறிகொண்டிருந்தார்.

கதவுகள் மூடுவதற்கு முன் தளமேடையில் நின்றிருந்த உயர்ந்த மனிதரை பார்க்க முயற்சித்தேன். கண்களில் அதே அமைதி. முகத்தோரம் சிரிப்பு. என்னை பார்த்து சிரிக்கிறார் ஏதோ சொல்ல வருகிறார் என்று நினைத்தால் அவர் என்னை பார்க்கவில்லை. என்னைத் தாண்டி என் பின்னால் பேசிக்கொண்டிருந்த சீனப் பாட்டியிடம் You go first will join later என்று அதே சிரிப்புடன் கூறியது அலுவலகம் வந்த பின்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment