Search This Blog

Wednesday, December 5, 2018

மறைக்கபட்ட இந்தியா

பொதுவாக மேடைப் பேச்சை,  தகவல் தெரிவித்தல், மகிழ்வூட்டல், கதை  சொல்லுதல் என்றெல்லாம் வகைப்படுத்தலாம்.  இதில் தகவல் தெரிவித்தல் என்பது கேட்கப்  பயனுள்ளதாகவும், பல அரியத்  தகவலைக்  கொண்டுள்ளதாகவும்  இருக்க வேண்டும்.  அதைச்சுவை  குன்றாமலும் சொல்லுதல் அவசியம்.  இந்தக் கருத்து, எழுத்துக்கும் அவசியம் என்று சமீபத்தில் படித்த "மறைக்கபட்ட இந்தியா" புத்தகம் நிலைநாட்டியது. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்நூலை நமக்கு எழுதியவர் நாடறிந்த நல்ல எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணன். 

சுமார் 350 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் உள்ள 52 கட்டுரையிலும்  தகவல்  தகவல் தகவல் என்று இருக்கிறது.  ஆனால்  எங்கேயுமே தகவல் சொல்லும்  சுவை குறையவில்லை. நடையில் தெளிவு, சொல்ல வந்த செய்தியின் உண்மைத் தன்மை  அதற்கான ஆதாரங்கள் என்று பக்கத்திற்கு பக்கம் வியக்க வைத்திருக்கிறார் ஆசிரியர். நாமும்தான் அப்பப்போஊர் ஊராப்   போகிறோம் ஆனால் இவரளவுக்கு ஈடுபாட்டோடு போகிற இடத்தைப் பற்றித்  தெரிந்து வைத்திருக்கிறோமா  என்பது கேள்விக்குறிதான்.  



இந்திய தேசியக் கொடியின் வடிவமைப்பு எத்தனை முறை மாற்றப்பட்டது ? இதில்   வே சா பங்கு என்ன ? டாக்கா மஸ்லின் துணி நெய்தலின் வளர்ச்சி எப்படி தடுக்கப்பட்டது? இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கண மண என்று நாம் மனப்பாடம்   செய்துப் பாடும் பாடல் உண்மையில்  கூறுவது என்ன? ஆங்கிலேயர் தான் நமக்கு ரயில்பாதை போட்டுக்கொடுத்தார்கள் என்று பெருமைக்  கொள்கிறோம். போட்டது என்னவோ அவர்கள் தான். ஆனால்  அதை அவர்கள் சுயநலத்திற்காக போட்டார்கள் என்ற கண்ணோட்டம் யோசிக்கவைத்த  இடத்தில்  ஒன்று.  வெறும் வணிகத்திற்காக வந்த மேற்கிந்திய மக்கள் தாவர வளர்ச்சியையும் தனது லாபத்திற்கு பயன்படுத்திக்கொண்டார்கள்  என்று நினைக்கும் போது "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏத்த வேண்டும் வெளிநாட்டில்" என்ற மருதகாசியின் வைர வரிகள்ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது . ஆனால் அப்படி இருந்த ஆங்கிலேயர்களுக்குள் நல்லவர்களும் இருந்தார்கள் அவர்கள் எவ்விதம் உதவினார்கள் என்று சொன்ன இடங்கள் சபாஷ் போட வைக்கிறது ஆசிரியருக்கும் சேர்த்து.  

சுதந்திர போராட்ட காலத்தில் ரகசிய ரேடியோ (ஆசாத் இந்தியா ரேடியோ) மூலம் சுதந்திரத்  தாகம் ஊட்டிய திருவாட்டி உஷா மேத்தா, நேதாஜி அவர்களின் உழைப்பு, அகில உலகில் அவருக்கு இருந்த மரியாதை, காந்தியும் தாகூரும் கருத்து வேற்றுமையோடு இருந்தாலும் நல்ல நண்பர்களாக ஒருங்கே நாட்டிற்கு உழைத்தது, இண்டிகோ புரட்சி (இண்டிகோ விமானத்திற்கு இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை), திருடர்கள் ஜாக்கிரதை என்று ஏன் / எப்படி வந்தது; அதற்கு காரணம் யார், பங்களாதேஷ் வளர்ந்த / வீழ்ந்த கதை என இவர் பட்டியலிட்டு இருக்கும் கட்டுரைகளில் நெஞ்சைத் தொட்டவை. இது போன்ற கட்டுரைகள், எந்த விதமான புரட்சி வளர்ச்சிக்கு பாதை வகுக்கும் எந்த விதமான புரட்சி அழிவுக்கு பாதை வகுக்கும் என்று எதிர்காலத்திற்கு படம் பிடித்து காட்டும் காலக்கண்ணாடி என்றே தோன்றுகிறது.  யவனர்கள் மற்றும்  ரஷியர்களோடு வெவ்வேறு  காலக்கட்டத்தில் இந்தியாவுடன் கொண்ட பல்வேறு விதமான உறவுப் பாலங்களின்  கதைகள்  மிகவும் சுவாரஸ்யம். 

மொகலாய ஓவியங்கள் மற்றும் நுண்ணோவியங்கள் பற்றிய இரு கட்டுரைகளில்,  இவரின் வார்த்தைகள் மூலம் அந்த ஓவியத்திற்கு வேறு வகையான  வண்ணம் தீட்டி இருக்கிறார். ஒரு புத்தகம் படிக்கும் போது அது சம்பந்தமான இன்னொரு புத்தகத்தை வாசிக்கவோ அல்லது அதைப் பற்றிய தகவலை இன்னும் தேடவோத் தூண்டவேண்டும். அந்த வேலையைச்  சிறப்பாக செய்கிறது இந்தப் புத்தகம்.  

இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது. ஏற்கனவே சமூகத் தளங்களில் பலராலும் பார்க்கப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளையம், தகவலையும், செய்தியையும் கூச்சமே இல்லாமல்  திரும்ப ஒன்று அல்லது இரண்டு  மணி நேரம் பேசிவிட்டு போகின்றப்  பேச்சாளர்கள் இது போன்ற புத்தகத்தைப் படித்து வந்து புதிய தகவலை  அரங்கில் உள்ள மக்களுக்கு சொல்லலாம். சொன்னால் பேச்சாளர்களும் மதிக்கப்படுவார்கள். பார்வையாளர்களும் பயன்படுவார்கள். 

மறைக்கப்பட்ட இந்தியா என்னும் இந்த  நூல் பல அறியத் தகவலை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. "சஞ்சாரம்" என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு எஸ் ரா விற்கு வாழ்த்துக்கள். 

Tuesday, November 6, 2018

தொல்லியல் ஆய்வுகள்

புடிக்காத விஷயத்தைக் கூட பிடித்த விஷயமாக மாற்றும் வல்லமை சிலரின் எழுத்துக்களுக்கு உண்டு. அந்த விதத்தில் வரலாற்றுப் பாடத்தில்  வெகுவாக அக்கறை இல்லாத ஒருவனை  இன்று வரலாற்றுப் புத்தக  வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வைத்திருக்கிறது ஒரு புத்தகம். அப்படி  சமீபத்தில் வாசித்த புத்தகம் 'தனிச்சிறப்புமிக்க புகழ்மிகு  தொல்லியலாளர்' என்ற  பட்டம் பெற்ற பேராசிரியர் முனைவர் கே.வி இராமன் எழுதிய தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை). நூலாசிரியர் பணிபுரிந்த காலத்தில்  சிறப்புமிக்க நகரங்களில் அகழ்வாய்வு செய்த அனுபவத்தை கட்டுரை வடிவமாக்கி  அந்த காலத்திற்கே நம்மை அழைத்துச்  சென்றிருக்கிறார்.




கிமு 300 முதல் கிபி  300 வரை தமிழ்நாட்டில் நிகழ்ந்த சில முக்கியமான கைத்தொழில்கள் அல்லது கிராமப்புறத் தொழில்கள் பற்றிச் சொல்லித்   துவங்கும் கட்டுரையிலேயே மட்பாண்டத் தொழில், வண்ணப்புனைவு, சுடுமண் பொருட்கள், நெசவு மற்றும் உலோகம் சம்பந்தப்பட்ட தொழில்கள் இருந்திருக்கின்றன என்றும் அதனை எவ்வளவு சிறப்பாகச் செய்தார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இரும்பைக்   காய்ச்சி உருக்கிடுவீரே என்று பாரதி சொன்னதை அன்றே செய்திருக்கிறான் மனிதன்.
வரலாற்றில் நாம் கரிகால் சோழனுடைய ஆட்சியையைப் பற்றியும் அவனுடைய தலைநகரமான காவிரிப்பூம்பட்டினத்தையும் பல்வேறு முறை படித்திருப்போம் ஆனால் அப்படிப்பட்ட நகரின் வரலாற்றை பின்னணியைப்  படம்பிடித்து காட்டியிருக்கிறார் இந்த தொகுப்பில். சமயங்களும் சமய சிந்தனைகள் வளர்ந்த விதத்தையும் ,   அந்த  ஊரில் நடந்த பல அழகிய விஷயங்களை  அருமையாக  படம் பிடித்திருக்கிறார். வெறும் அனுபவப் பதிவுகளாக இல்லாமல், எழுதிய எழுத்தின் மூலம் நம்மை அந்த காலகட்டத்திற்கு கூட்டி செல்லும் திறன் அபாரம். தான் எழுதிய எழுத்திற்கு தகுந்த காட்சியமைப்பை வாசகனின் கண்முன்னே கொண்டுவந்துள்ளார். நாம் எப்படி ஓர் இடத்தின்  வரலாற்றை வகைப்படுத்த வேண்டும் என்பதைப்    பற்றியும் விவரித்திருப்பது என்னைப் போன்ற  வாசகனுக்கு பயனுள்ளத்   தகவலாக இருக்கிறது.

பழைய மனிதர்கள் என்று நாம் ஒதுக்குபவர்கள் தான் நிறைய கண்டுபிடிப்புகளுக்கு விதை போட்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. கற்கருவிகளை பயன்படுத்தியது தொடங்கி விலங்குகளைப் பழக்குவதிலும் பெரும் திறமை கொண்டிருந்தனர் என்று படிக்கும்போது அவர்களின் திறமையையும் அவர்களின் அறிவுக்கூர்மையையும் வியக்காமல் இருக்கமுடியவில்லை.

தொல்லியல் ஆய்வுகள் இல்லையெனில் மனிதனின் கடந்துவந்த பாதையும் அவனுடைய வரலாற்றையும் அறிய இயலாது. நாம் செய்ய வேண்டிய நீண்ட வாசிப்புக்கு இந்நூல் ஒரு சிறந்த துவக்கமாக இருக்கும்.  கொஞ்ச காலம் வேலை  பார்க்க போகும் அலுவலகம் பற்றியே நிறைய தெரிந்து வைத்திருக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம் அப்படி இருக்கையில் வாழும் காலம் வரை இருக்க போகும் இந்த மண்ணின் வரலாறை தெரிந்துகொள்வது நம் கடமை என்றே தோன்றுகிறது.


Friday, March 16, 2018

எதையும் ஒரு முறை

எழுத்தாளர்  உலகின் ஆசான் என்று போற்றப்படும் சுஜாதாவின் மீது தீராத காதல் கொண்ட ஒரு நண்பர் சொன்னதின் பெயரில் அவரின் "எதையும் ஒரு முறை" நாவலை  ஒரு முறை படிக்கலாம் என்று முடிவெடுத்தேன். இதை வாங்கியபோது டாக்ஸியில் ஒரு இன்டெரெஸ்ட்டிங் சம்பவம் நடந்ததை வேறொரு பிளாகில் சொல்கிறேன். சுஜாதா தன் ஆரம்ப காலத்தில் எழுதியதாக சொல்லப்பட்ட இந்த கதையைப் பற்றி எனக்கு எதிர்பார்ப்பு ஏராளமாக இருந்தது.





சின்ன நாவல்தான் என்றாலும் சுமார் 40 பக்கம் வரை நான் எதிர்பார்த்த அல்லது (அந்த நண்பரிடம்) கேட்ட அந்தக் கதை வரவே இல்லை. ஆனால் இன்வெஸ்டிகேட்டிவாக இருப்பதால் கதையை தொடர்ந்து படித்தேன். கணேஷ் - வஸந்த் மற்றும் ஒரு சட்டக் கல்லூரி மாணவியைச் சுற்றி கதைக்களம் - கூவம் நதிக்கரையில்  ஒதுங்கிய ஒரு பெண்ணின் மரணம் - அதன் பிண்ணனியை தேடும் இந்த மூவர். இந்தக் கதைக்கு இதுதான் தீர்வு என்று கூறாமல் வாசகனின் கற்பனைக்கு விட்டுவிடும் விதமும், கதையை முடிக்கும் விதமும் ஒரு  முறையல்ல பலமுறை சபாஷ் போட வைக்கிறது எழுத்தாளருக்கு.

கணேஷ் வஸந்த் தோன்றும் மிகப் பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று. என்று அறிகிறேன். சிறுகதை / குறுநாவலுக்கான குறைந்த கதாபாத்திரங்கள்; ஒவ்வொருவருக்கும் தக்கதொரு அறிமுகம் என்று கனகச்சிதமாக கதை நகர்கிறது. ஆதித்ய குமாரைத்  தேடி அலைந்த இந்த மூவர் எப்படி அவரை நெருங்குகின்றனர் என்று தெரிந்து கொண்டு அடுத்தது என்ன எப்படி என்று  யோசித்துக்கொண்டிருக்கும்போதே கதை முடிந்துவிடுகிறது.  கடைசி வரை நான் எதிர்பார்த்த அல்லது கேட்ட (அல்லது புரிந்துகொண்ட) கதை வரவில்லை. அந்தளவில் சற்று ஏமாற்றம். ஆனால்  கதையின் எதார்த்தத்தை வெகு இயல்பாக இரசிக்க  வைக்கிறார் ஆசிரியர்.

வாழ்வில் தான் நினைப்பதெல்லாம்  ஒரு முறை செய்யவேண்டும் என்று நினைக்கும் வில்லன். இல்லை இல்லை - வில்லன் என்று, நம்மையே  இவன்தான் வில்லனாக இருப்பானோ  என்று நினைக்கவைப்பது கதையின் பெரிய ப்ளஸ். எதையும் ஒரு முறை வாழ்க்கையில் செய்து பார்க்கும் எண்ணம் கொண்டவன் ஏன் கொலை செய்திருக்கக் கூடாது என்று தோன்ற வைத்தாலும் அதை அவன் செய்திருக்க மாட்டான் என்ற எண்ணத்தையும் “கேல்குலேடட் ரிஸ்க் தான் எடுப்பேன்“ என்று  அவன் வாயிலாகவே சொல்ல வைப்பதும் ஸ்வாரஸ்யம்.

சென்னையின் சிறு சிறு வீதிகளில் தன் உடலை மூலதனமாக்கி வாழ்க்கையில் சம்பாதிக்கும் பெண்கள், தன் சுகத்துக்காக இவர்களை இரையாக்கும் மனிதர்கள், பெண்களை அனுபவிக்கும் ஒரு கதாபாத்திரத்தின் வீட்டில் இரண்டு நாள் முன்னர் பார்த்த அழகுப் பதுமை அடுத்தமுறை போகும்போது இல்லாமல் இருப்பது போன்ற விஷயங்களை காட்சிப்படுத்தும் விதம் ஒவ்வொன்றும் வலி தரும் அழகான காட்சிகள்.

இந்த கதைக்கான உயிரோட்டம் எதையும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்ற வித்தியாசமான எண்ணம் தான் என்று எனக்கு தோன்றுகிறது. அந்த எண்ணத்திற்காகவாது ஒரு முறை இந்த புத்தகத்தை அவசியம் படிக்கவேண்டும்.

சுஜாதாவின் கதையை விமர்சிக்கும் அளவுக்கு நீ பெரிய ஆள் ஆயிட்டியான்னு கேக்கறவங்களுக்கு என்னோட பதில் ஐயம் சாரி. யூ ஹவ் மிஸ்டேக்கன் மீ. 

வழக்கமாக இல்லாமல் இந்த பதிவில் இவ்வளவு இங்கிலிஷ் வர்ட்ஸ் வருவதற்கான காரணத்தை நீங்கள் இப்போது யோசித்தால் வெல்கம் டு தி வர்ல்டு ஆப்  சுஜாதா.

Sunday, March 11, 2018

சந்திப்புகள் பல விதம்

சுமார் 50 60  வயது இருக்கும்... MRT யில் ஏறியவுடன், என்னிடம் வந்தவர் கோவிலுக்கு தானே போறீங்க நானும் கூட வரவா என்று கேட்டார்.. எனக்கும் சரியாக வழி தெரியாது ஆனால் போகலாம் என்று சொல்லிவிட்டு சுஜாதாவின் எதையும் ஒரு முறையை முதன்முறையாகப்  படித்துக்கொண்டிருந்தேன். இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் அவரே என்னை அழைத்து போகலாமா என்று கேட்க நாங்கள் இருவரும் நடக்க ஆரம்பித்தோம். வயது தெரியாத உடை; அமைதியான பேச்சு; கைப்பேசியை அவ்வப்போது பார்த்துக்கொண்டு நடந்து வந்தார். வந்தவர் என்னிடம் எத்தனை ஆண்டுகளாக இங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் பதில் சொன்ன உடன் என் குடும்பத்தை பற்றியும் விசாரித்தார். என்னைப் பற்றி அறிமுகம் இல்லாத ஒருவர் ஏன் விசாரிக்க வேண்டும் என்றே தோன்றாத அளவிற்கு அக்கறையாகக்  கேட்டார்.

பிறகு எங்கே வந்தாலும் எங்கே போய் வேலை பாத்தாலும் கடைசி காலத்திற்குக்  கொஞ்சம் பணம் வேணும். சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.  குழந்தைகள் வளர்ந்தவுடன் நமக்கு  ஏதாச்சும் ஒன்னுன்னா தேவை படற  அளவுக்கு வச்சிருக்கணும். இல்லைனா வாழ்க்கையில யாரைப் போய் கேட்பது என்றே தெரியாது என்று அவர் கூறியபோது  ஏனோ அவரின் முகத்தைப்  பார்க்க எனக்கு தைரியம் வரவில்லை. Spending pattern இந்தக் காலத்து மக்களுக்கு தெரியவில்லை because of their needs என்று அவர் சொல்லும்போது பணத்தின் அருமை தெரிந்து வளர்க்கவும் வளரவும் தயாராக இருந்த தலைமுறையினர் அவர் என்பதை சொல்லாமல் எனக்கு சொன்னது போல் இருந்தது.  இந்தக்காலத்து இளைஞர்களுக்கு நாங்கள் சொல்லத் தயாராக இருக்கிறோம் - அவர்கள் கேட்கத் தயாராக இல்லை ... நாங்கள் கேட்கத் தயாராக இருந்தோம் சொல்ல ஆள் இல்லை என்ற உணர்வினை அவ்வப்போது கூறிவந்தார்.  ஆனால் எந்த இடத்திலும் யாரையும் விட்டுக்கொடுக்காமல் பேசியது அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு கலைதான்.


கோவில் அருகே வந்துகொண்டிருக்கும் போது கூட்டத்தை சமாளிக்க தொண்டூழியர்கள் எங்களை வரிசையில் இணையச் செய்தனர். எங்களின் உரையாடலில் மீண்டும் எங்களை நாங்களே இணைத்துக் கொண்டோம்.   புக்கிட் மேரா மற்றும் ஜலான்காயு போன்ற இடங்களில் இருந்தார்கள். வேறே வேறே இடத்தில இருந்தவர்களை ரதத்தில் கடத்திக் கொண்டு வந்தோம். அவர்களை ஒவ்வொரு இடத்திலும் பாத்திருக்கேன் நான். எங்கு எங்கு இருந்தோ நாங்கள் இந்த முருகரையும் மற்றவர்களையும் கொண்டு வந்து இப்போது இங்கே சேர்த்திருக்கிறோம் என்று ஸ்தல வரலாறை இவ்வளவு மரியாதையாக கச்சிதமாக கேட்டதே கிடையாது. "கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது" என்று  தன்னை கடவுள் மறுப்பாளர் என்று மய்யமாக சொல்லாமல் மேடைபோட்டு சொல்லும் ஆண்டவர் படத்தில் பார்த்த பாடல்வரிகள் நினைவிற்கு வந்தன.

வரிசை மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றியும் சொல்லத் துவங்கினார். . 48 ஆண்டுக்கால வேலை அனுபவம் அதுவும் ஒரே அலுவலகத்தில். பல்வேறு இடையூறுகள். அதெல்லாம் தாண்டித்தான் இப்போது இங்கு வந்திருக்கிறேன். வேலை நாட்களில் என்னோட boss "நீ ரொம்ப protective" என்று என்னைப் பார்த்து சொல்லுவார்.. நான் அதற்கு you can get the job done out of me and my team only if I take good care of them என்று சொல்லுவேன். இந்த வரிகளைச் சொல்லும்போது அவர் குரலில்  ஒரு கர்வத்திற்கு பதில் சோகம் ஒலித்தது. என் ஐயத்திற்கு அவரே விடையும் அளித்தார். 48 ஆண்டுக் காலம் என்பதால் பல தலைமுறைகள் என்னிடம் வேலை பார்த்திருக்கிறார்கள். வேலை வாங்குவதிலும் வேலை செய்வதிலும் சமுதாயத்தில் இப்போது நிறைய மாற்றங்கள் என்று திடீரென்று spiritual philosophy யில் இருந்து corporate philosophyக்கு மாறினார். 

அந்த ஒரு மணிநேரத்தில் எவ்வளவோ செய்திகளை அவர் பகிர்ந்துகொண்டாலும், பெருமையுடன் அவர் பகிர்ந்துகொண்ட ஒரு செய்தி- தன்னுடைய Pioneer Generation அட்டையை காண்பித்த போது என்று சொல்லலாம். இந்த அரசாங்கம் அவர் வயது ஒத்தவரை எப்படி எல்லாம்  பார்த்துக்கொள்கிறது என்று  நெகிழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் நாங்கள் எங்களுக்கு கொடுத்த சலுகையை எந்த விதத்திலும் துஷ்ப்ரயோகம் செய்ய மாட்டோம் என்று சிறிதும் கர்வம் கலக்காமல் சொல்லிக்கொண்டே,  தன் வயது ஒத்த முதியவர்களை தனக்கு முன்னே வரிசையில் அனுப்பிக்கொண்டே இருந்தார். இருந்த ஒரு சாப்பாடு பொட்டலத்தை அங்கே இருந்த ஒரு குழந்தைக்குக் கொடுத்துவிட்டு குழந்தைப் போல் சிரித்து  பார்வையில் இருந்து அவர்  மறைந்தபோது,  வந்த "இந்த  சந்திப்பு ஏன் இப்போது முடிவுக்கு வந்தது" என்ற கேள்வி  2 வாரம் கழித்தும் இன்னும் என் மனதில் இருக்கிறது.. ஆம் சந்திப்புகள் பல விதம்..