Search This Blog

Sunday, March 11, 2018

சந்திப்புகள் பல விதம்

சுமார் 50 60  வயது இருக்கும்... MRT யில் ஏறியவுடன், என்னிடம் வந்தவர் கோவிலுக்கு தானே போறீங்க நானும் கூட வரவா என்று கேட்டார்.. எனக்கும் சரியாக வழி தெரியாது ஆனால் போகலாம் என்று சொல்லிவிட்டு சுஜாதாவின் எதையும் ஒரு முறையை முதன்முறையாகப்  படித்துக்கொண்டிருந்தேன். இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் அவரே என்னை அழைத்து போகலாமா என்று கேட்க நாங்கள் இருவரும் நடக்க ஆரம்பித்தோம். வயது தெரியாத உடை; அமைதியான பேச்சு; கைப்பேசியை அவ்வப்போது பார்த்துக்கொண்டு நடந்து வந்தார். வந்தவர் என்னிடம் எத்தனை ஆண்டுகளாக இங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் பதில் சொன்ன உடன் என் குடும்பத்தை பற்றியும் விசாரித்தார். என்னைப் பற்றி அறிமுகம் இல்லாத ஒருவர் ஏன் விசாரிக்க வேண்டும் என்றே தோன்றாத அளவிற்கு அக்கறையாகக்  கேட்டார்.

பிறகு எங்கே வந்தாலும் எங்கே போய் வேலை பாத்தாலும் கடைசி காலத்திற்குக்  கொஞ்சம் பணம் வேணும். சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.  குழந்தைகள் வளர்ந்தவுடன் நமக்கு  ஏதாச்சும் ஒன்னுன்னா தேவை படற  அளவுக்கு வச்சிருக்கணும். இல்லைனா வாழ்க்கையில யாரைப் போய் கேட்பது என்றே தெரியாது என்று அவர் கூறியபோது  ஏனோ அவரின் முகத்தைப்  பார்க்க எனக்கு தைரியம் வரவில்லை. Spending pattern இந்தக் காலத்து மக்களுக்கு தெரியவில்லை because of their needs என்று அவர் சொல்லும்போது பணத்தின் அருமை தெரிந்து வளர்க்கவும் வளரவும் தயாராக இருந்த தலைமுறையினர் அவர் என்பதை சொல்லாமல் எனக்கு சொன்னது போல் இருந்தது.  இந்தக்காலத்து இளைஞர்களுக்கு நாங்கள் சொல்லத் தயாராக இருக்கிறோம் - அவர்கள் கேட்கத் தயாராக இல்லை ... நாங்கள் கேட்கத் தயாராக இருந்தோம் சொல்ல ஆள் இல்லை என்ற உணர்வினை அவ்வப்போது கூறிவந்தார்.  ஆனால் எந்த இடத்திலும் யாரையும் விட்டுக்கொடுக்காமல் பேசியது அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு கலைதான்.


கோவில் அருகே வந்துகொண்டிருக்கும் போது கூட்டத்தை சமாளிக்க தொண்டூழியர்கள் எங்களை வரிசையில் இணையச் செய்தனர். எங்களின் உரையாடலில் மீண்டும் எங்களை நாங்களே இணைத்துக் கொண்டோம்.   புக்கிட் மேரா மற்றும் ஜலான்காயு போன்ற இடங்களில் இருந்தார்கள். வேறே வேறே இடத்தில இருந்தவர்களை ரதத்தில் கடத்திக் கொண்டு வந்தோம். அவர்களை ஒவ்வொரு இடத்திலும் பாத்திருக்கேன் நான். எங்கு எங்கு இருந்தோ நாங்கள் இந்த முருகரையும் மற்றவர்களையும் கொண்டு வந்து இப்போது இங்கே சேர்த்திருக்கிறோம் என்று ஸ்தல வரலாறை இவ்வளவு மரியாதையாக கச்சிதமாக கேட்டதே கிடையாது. "கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது" என்று  தன்னை கடவுள் மறுப்பாளர் என்று மய்யமாக சொல்லாமல் மேடைபோட்டு சொல்லும் ஆண்டவர் படத்தில் பார்த்த பாடல்வரிகள் நினைவிற்கு வந்தன.

வரிசை மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றியும் சொல்லத் துவங்கினார். . 48 ஆண்டுக்கால வேலை அனுபவம் அதுவும் ஒரே அலுவலகத்தில். பல்வேறு இடையூறுகள். அதெல்லாம் தாண்டித்தான் இப்போது இங்கு வந்திருக்கிறேன். வேலை நாட்களில் என்னோட boss "நீ ரொம்ப protective" என்று என்னைப் பார்த்து சொல்லுவார்.. நான் அதற்கு you can get the job done out of me and my team only if I take good care of them என்று சொல்லுவேன். இந்த வரிகளைச் சொல்லும்போது அவர் குரலில்  ஒரு கர்வத்திற்கு பதில் சோகம் ஒலித்தது. என் ஐயத்திற்கு அவரே விடையும் அளித்தார். 48 ஆண்டுக் காலம் என்பதால் பல தலைமுறைகள் என்னிடம் வேலை பார்த்திருக்கிறார்கள். வேலை வாங்குவதிலும் வேலை செய்வதிலும் சமுதாயத்தில் இப்போது நிறைய மாற்றங்கள் என்று திடீரென்று spiritual philosophy யில் இருந்து corporate philosophyக்கு மாறினார். 

அந்த ஒரு மணிநேரத்தில் எவ்வளவோ செய்திகளை அவர் பகிர்ந்துகொண்டாலும், பெருமையுடன் அவர் பகிர்ந்துகொண்ட ஒரு செய்தி- தன்னுடைய Pioneer Generation அட்டையை காண்பித்த போது என்று சொல்லலாம். இந்த அரசாங்கம் அவர் வயது ஒத்தவரை எப்படி எல்லாம்  பார்த்துக்கொள்கிறது என்று  நெகிழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் நாங்கள் எங்களுக்கு கொடுத்த சலுகையை எந்த விதத்திலும் துஷ்ப்ரயோகம் செய்ய மாட்டோம் என்று சிறிதும் கர்வம் கலக்காமல் சொல்லிக்கொண்டே,  தன் வயது ஒத்த முதியவர்களை தனக்கு முன்னே வரிசையில் அனுப்பிக்கொண்டே இருந்தார். இருந்த ஒரு சாப்பாடு பொட்டலத்தை அங்கே இருந்த ஒரு குழந்தைக்குக் கொடுத்துவிட்டு குழந்தைப் போல் சிரித்து  பார்வையில் இருந்து அவர்  மறைந்தபோது,  வந்த "இந்த  சந்திப்பு ஏன் இப்போது முடிவுக்கு வந்தது" என்ற கேள்வி  2 வாரம் கழித்தும் இன்னும் என் மனதில் இருக்கிறது.. ஆம் சந்திப்புகள் பல விதம்..  


No comments:

Post a Comment