எழுத்தாளர் உலகின் ஆசான் என்று போற்றப்படும் சுஜாதாவின் மீது தீராத காதல் கொண்ட ஒரு நண்பர் சொன்னதின் பெயரில் அவரின் "எதையும் ஒரு முறை" நாவலை ஒரு முறை படிக்கலாம் என்று முடிவெடுத்தேன். இதை வாங்கியபோது டாக்ஸியில் ஒரு இன்டெரெஸ்ட்டிங் சம்பவம் நடந்ததை வேறொரு பிளாகில் சொல்கிறேன். சுஜாதா தன் ஆரம்ப காலத்தில் எழுதியதாக சொல்லப்பட்ட இந்த கதையைப் பற்றி எனக்கு எதிர்பார்ப்பு ஏராளமாக இருந்தது.
சின்ன நாவல்தான் என்றாலும் சுமார் 40 பக்கம் வரை நான் எதிர்பார்த்த அல்லது (அந்த நண்பரிடம்) கேட்ட அந்தக் கதை வரவே இல்லை. ஆனால் இன்வெஸ்டிகேட்டிவாக இருப்பதால் கதையை தொடர்ந்து படித்தேன். கணேஷ் - வஸந்த் மற்றும் ஒரு சட்டக் கல்லூரி மாணவியைச் சுற்றி கதைக்களம் - கூவம் நதிக்கரையில் ஒதுங்கிய ஒரு பெண்ணின் மரணம் - அதன் பிண்ணனியை தேடும் இந்த மூவர். இந்தக் கதைக்கு இதுதான் தீர்வு என்று கூறாமல் வாசகனின் கற்பனைக்கு விட்டுவிடும் விதமும், கதையை முடிக்கும் விதமும் ஒரு முறையல்ல பலமுறை சபாஷ் போட வைக்கிறது எழுத்தாளருக்கு.
கணேஷ் வஸந்த் தோன்றும் மிகப் பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று. என்று அறிகிறேன். சிறுகதை / குறுநாவலுக்கான குறைந்த கதாபாத்திரங்கள்; ஒவ்வொருவருக்கும் தக்கதொரு அறிமுகம் என்று கனகச்சிதமாக கதை நகர்கிறது. ஆதித்ய குமாரைத் தேடி அலைந்த இந்த மூவர் எப்படி அவரை நெருங்குகின்றனர் என்று தெரிந்து கொண்டு அடுத்தது என்ன எப்படி என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே கதை முடிந்துவிடுகிறது. கடைசி வரை நான் எதிர்பார்த்த அல்லது கேட்ட (அல்லது புரிந்துகொண்ட) கதை வரவில்லை. அந்தளவில் சற்று ஏமாற்றம். ஆனால் கதையின் எதார்த்தத்தை வெகு இயல்பாக இரசிக்க வைக்கிறார் ஆசிரியர்.
வாழ்வில் தான் நினைப்பதெல்லாம் ஒரு முறை செய்யவேண்டும் என்று நினைக்கும் வில்லன். இல்லை இல்லை - வில்லன் என்று, நம்மையே இவன்தான் வில்லனாக இருப்பானோ என்று நினைக்கவைப்பது கதையின் பெரிய ப்ளஸ். எதையும் ஒரு முறை வாழ்க்கையில் செய்து பார்க்கும் எண்ணம் கொண்டவன் ஏன் கொலை செய்திருக்கக் கூடாது என்று தோன்ற வைத்தாலும் அதை அவன் செய்திருக்க மாட்டான் என்ற எண்ணத்தையும் “கேல்குலேடட் ரிஸ்க் தான் எடுப்பேன்“ என்று அவன் வாயிலாகவே சொல்ல வைப்பதும் ஸ்வாரஸ்யம்.
சென்னையின் சிறு சிறு வீதிகளில் தன் உடலை மூலதனமாக்கி வாழ்க்கையில் சம்பாதிக்கும் பெண்கள், தன் சுகத்துக்காக இவர்களை இரையாக்கும் மனிதர்கள், பெண்களை அனுபவிக்கும் ஒரு கதாபாத்திரத்தின் வீட்டில் இரண்டு நாள் முன்னர் பார்த்த அழகுப் பதுமை அடுத்தமுறை போகும்போது இல்லாமல் இருப்பது போன்ற விஷயங்களை காட்சிப்படுத்தும் விதம் ஒவ்வொன்றும் வலி தரும் அழகான காட்சிகள்.
இந்த கதைக்கான உயிரோட்டம் எதையும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்ற வித்தியாசமான எண்ணம் தான் என்று எனக்கு தோன்றுகிறது. அந்த எண்ணத்திற்காகவாது ஒரு முறை இந்த புத்தகத்தை அவசியம் படிக்கவேண்டும்.
சுஜாதாவின் கதையை விமர்சிக்கும் அளவுக்கு நீ பெரிய ஆள் ஆயிட்டியான்னு கேக்கறவங்களுக்கு என்னோட பதில் ஐயம் சாரி. யூ ஹவ் மிஸ்டேக்கன் மீ.
இந்த கதைக்கான உயிரோட்டம் எதையும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்ற வித்தியாசமான எண்ணம் தான் என்று எனக்கு தோன்றுகிறது. அந்த எண்ணத்திற்காகவாது ஒரு முறை இந்த புத்தகத்தை அவசியம் படிக்கவேண்டும்.
சுஜாதாவின் கதையை விமர்சிக்கும் அளவுக்கு நீ பெரிய ஆள் ஆயிட்டியான்னு கேக்கறவங்களுக்கு என்னோட பதில் ஐயம் சாரி. யூ ஹவ் மிஸ்டேக்கன் மீ.
வழக்கமாக இல்லாமல் இந்த பதிவில் இவ்வளவு இங்கிலிஷ் வர்ட்ஸ் வருவதற்கான காரணத்தை நீங்கள் இப்போது யோசித்தால் வெல்கம் டு தி வர்ல்டு ஆப் சுஜாதா.