Search This Blog

Monday, November 16, 2020

சிலை பிறந்த கதை

 கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் - பம்மல் மற்றும் லிஷா இலக்கிய மன்றம் - சிங்கப்பூர் இணைந்து படைத்த பன்னாட்டு கண்ணதாசன் விழாவில் நடந்தப் பட்டிமன்றத்தில் பேசுவதாக இருந்தேன். அந்த வாய்ப்பு கடைசி நேரத்தில் நடந்த சில சம்பவங்களால் (இந்தியா செல்லவேண்டி இருந்து), பட்டிமன்றத்தில் பேச முடியாமல் போனது. ஆனால் அந்த நிகழ்ச்சியின் மூலமாக சில ஆளுமைகளோடு பேச மற்றும் பழக வாய்ப்பு கிடைத்தது. அப்படிக் கிடைத்த ஒரு ஆளுமை தான் நண்பர் திரு காவிரிமைந்தன். ஓரிரு முறைதான் அவரோடு பேசியிருந்தேன் அப்போது.

இந்தப் பட்டிமன்றத்திற்காக பேச்சினைத் தயாரிக்கும்போது கண்ணதாசன் மீது எனக்கிருந்த காதல் இன்னும் அதிகமானது (யாருக்குத்தான் அதிகமாகாது). அவரைப் பற்றிய சில புத்தகங்களைத் தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன். பின் ஒரு நாள் நண்பர் காவிரிமைந்தனோடு பேசும்போது "சிலை பிறந்த கதை" என்ற புத்தகத்தைப் பற்றி க் கூறி அதன் pdf fileஐ அனுப்பினார். அவர் பிறந்தநாள் அன்று எனக்குக் கிடைத்தப் பரிசு. ஒரே மூச்சாக படிக்க முயன்று ஓரளவுக்கு வெற்றிகண்டேன் என்றே சொல்லலாம். கருவிற்கு ஏற்ற தலைப்பு. ஏன் என்றால் மெல்லிசை மன்னரின் கனவில் வந்ததன் அடிப்படையில் உண்மையிலேயே தன்னுடைய உழைப்பால் இச்சிலையை பிரசவித்திருக்கிறார் காவிரிமைந்தன்.


நாமெல்லாம் "ஒரு ஊரில் ஒரு ராஜா" என்று கதை கேட்டு வளர்ந்த பரம்பரையில் வந்தவர்கள் . எந்த ஒரு செய்தியினையும் கதைவடிவில் அல்லது சம்பவங்களின் தொகுப்பாகச் சொல்லும்போது மக்களிடம் எளிதாகச் சென்றடையும் என்பதைப் பேச்சாளனாகப் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். அப்படி ஒரு புத்தகம் படித்ததில் மிக்க மகிழ்ச்சி. சென்னை தியாகராயநகரில் உள்ள கண்ணதாசனின் சிலையை நிறுவுவதற்கு பின்னால் இருந்து செயல்பட்ட மெல்லிசை மன்னர் மற்றும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம், மற்றும் எண்ணற்ற கண்ணதாசனின் ரசிகர்கள் ஆகியோரைப் பற்றி இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் பேசியிருக்கின்றன.
நிறைய சந்திப்புகள், சம்பவங்கள், நினைவலைகள் என்று பக்கத்திற்கு பக்கம் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் எழுதியிருக்கிறார். திரு சாலமன் பாப்பையா அவர்கள் கொடுத்த நன்கொடை, முனைவர் சரஸ்வதி ராமநாதன் அவர்களின் சந்திப்பு, சங்கத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு விழாக்களைக் கொண்டாடிய விதம், அதற்கு வந்த ஆதரவு மற்றும் மிரட்டல், சேலத்திலும் கோவையிலும் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நடந்த திருட்டு என்று பல்வேறு விஷயங்களைக் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார். நடுநடுவே இவரின் கவிதைகளையும் சில கவிதாஞ்சலிகளையும் கொடுத்திருக்கிறார்.
சின்ன விண்ணப்பம் : சில நிகழ்வின் புகைப்படங்களுக்கு கீழே அந்நிகழ்வைப் பற்றியத் தகவலை அடுத்த பதிப்பில் கொடுத்தால் கொஞ்சம் சுவை கூடும். அதே போல் சில படங்கள் ஒருமுறைக்கு மேல் சில இடங்களில் வந்திருக்கிறது. அதற்கு பதில் மேலும் புதிய தகவலையோ அல்லது வேறு புகைப்படமோ இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் யாரும் சென்னையில் கண்ணதாசனின் சிலையை இனி ஒரு நொடிப் பொழுதில் கடப்பது என்பது இயலாத காரியம்

Friday, November 6, 2020

வனவாசம்

காவியத் தாயின் செல்ல மகன். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத வெள்ளித் திரையின் நிரந்தர நாயகன்.. காதலில் தத்துவத்தையும், தத்துவத்தின் மீது தீராக்காதலும் கொண்டவர்..வரும் சம்பளத்தையும் போகும் செலவையும் கணக்கு வைக்கத் தெரியாதச் செட்டி மகன் எழுதிய வனவாசத்தில், மடைதிறந்த வெள்ளம் போல் மனம் திறந்த எழுத்துக்கள்.

சிறு வயதிலிருந்தே தனக்கு இருந்த கற்பனை சக்தி; தன் மீது தனக்கு இருந்த நம்பிக்கை; எதையும் ரசிக்கக் கூடியத் தன்மை; நகைச்சுவை உணர்வு; திரைப் பயணத்தின் துவக்கம்; தலைமைத்துவப் பண்புகள்; 'காதல்' மன்னனாகவும் நல்லதொரு 'குடி'மகனாகவும் ஆன கதை; என்று வரிக்கு வரி அனுபவமாகத் தொடர்கிறது. 

சொந்த வாழ்க்கையைப் பற்றி 30 சதவீதமும்; மிகப் பெரிய கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் (அப்போதே கொள்கை ரீதியான அதன் வீழ்ச்சியைக் கண்டவர்) 70 சதவீதமும் கொண்ட இந்தப் புத்தகத்தில்; தன்னுடைய உழைப்பு; வஞ்சிக்கப்பட்ட உண்மை; அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் ; அதை கையாண்ட விதம் என்று இவர் எழுதியிருக்குப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒரே நேரத்தில் தருகிறது. 

பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தவர்; பாரதி சொல்வது போல் எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம் என்ற நெறிபடி அனைத்து கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். திரு மா போ சி அவர்களின் கருத்துகளுக்கு எதிர்கருத்தை மேலோட்டமாக எழுதாமல் ஆராய்ச்சியின் அடிப்படையில் படித்து பதில் எழுதியிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது மதிப்பு கூடுகிறது. இக்கால ஊடகப் பதிவாளர்கள் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று என்று தோன்றுகிறது.