காவியத் தாயின் செல்ல மகன். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத வெள்ளித் திரையின் நிரந்தர நாயகன்.. காதலில் தத்துவத்தையும், தத்துவத்தின் மீது தீராக்காதலும் கொண்டவர்..வரும் சம்பளத்தையும் போகும் செலவையும் கணக்கு வைக்கத் தெரியாதச் செட்டி மகன் எழுதிய வனவாசத்தில், மடைதிறந்த வெள்ளம் போல் மனம் திறந்த எழுத்துக்கள்.
சிறு வயதிலிருந்தே தனக்கு இருந்த கற்பனை சக்தி; தன் மீது தனக்கு இருந்த நம்பிக்கை; எதையும் ரசிக்கக் கூடியத் தன்மை; நகைச்சுவை உணர்வு; திரைப் பயணத்தின் துவக்கம்; தலைமைத்துவப் பண்புகள்; 'காதல்' மன்னனாகவும் நல்லதொரு 'குடி'மகனாகவும் ஆன கதை; என்று வரிக்கு வரி அனுபவமாகத் தொடர்கிறது.
சொந்த வாழ்க்கையைப் பற்றி 30 சதவீதமும்; மிகப் பெரிய கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் (அப்போதே கொள்கை ரீதியான அதன் வீழ்ச்சியைக் கண்டவர்) 70 சதவீதமும் கொண்ட இந்தப் புத்தகத்தில்; தன்னுடைய உழைப்பு; வஞ்சிக்கப்பட்ட உண்மை; அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் ; அதை கையாண்ட விதம் என்று இவர் எழுதியிருக்குப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒரே நேரத்தில் தருகிறது.
பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தவர்; பாரதி சொல்வது போல் எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம் என்ற நெறிபடி அனைத்து கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். திரு மா போ சி அவர்களின் கருத்துகளுக்கு எதிர்கருத்தை மேலோட்டமாக எழுதாமல் ஆராய்ச்சியின் அடிப்படையில் படித்து பதில் எழுதியிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது மதிப்பு கூடுகிறது. இக்கால ஊடகப் பதிவாளர்கள் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment