"எனக்கு சாப்பிடனும் போல இருக்கு" என்று ஒருவர் சொன்னதை
அவருக்கு ரொம்பப் பசிக்குதாம்
இந்த நேரத்துல தான் அவரு சாப்பிடுவாராம்
சாப்பிட்டு ரொம்ப நாளோ நேரமோ ஆச்சாம்
இங்கே சாப்பாடு கிடைக்கலையாம்
அவருக்கு வயிறு சரி இல்லையாம்
என்று அவரவர்கள் புரிதலுக்கேற்ப (அல்லது வசதிக்கேற்ப) சொல்வது மனித இயல்பு ...
மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள், கி மு கி பி , முகில் எழுதிய முகலாயர்கள் , மருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர், எஸ் ரா எழுதிய மறைக்கப்பட்ட இந்தியா போன்றப் புத்தகங்களை வாசிக்கும்போது இந்த அனுபவம்தான் ஏற்பட்டது.
வரலாற்றுச் சம்பவங்களை சொல்லும்போது / எழுதும்போது அதை எழுதியவர்களின் புரிதலுக்கேற்ப (அல்லது வசதிக்கேற்ப)அந்தச் செய்தி வேறுபடும். இந்த அனுபவம் ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தைப் படிக்கும்போதும் வந்தது. (தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர்: திரு N ஸ்ரீதரன் ) .
பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் வெவ்வேறு காலகட்டங்களில் (கி மு 6000 முதல் 20ஆம் நூற்றாண்டு வரை) வாழ்ந்த வளர்ந்த சமுதாயத்தைப் பற்றிக் கதை வடிவில் கதை மாந்தர்களின் வாயிலாக கூற முயற்சிக்கிறது. அலங்கார வார்த்தைகள் இல்லாமல் படிக்கச் சுவாரஸ்யமாக இருந்த காரணத்தினாலோ என்னவோ சில தினங்களுக்குள் முழு புத்தகத்தையும் படித்து முடிக்க முடிந்தது.
காலம் காலமாக பேச்சாளர்கள் பயன்படுத்திய அல்லது நாம் படித்த அக்பர் பீர்பால் கதைகள் எல்லாமே கட்டுக்கதை என்று சொன்னால் நம்ப முடிகிறதா ?
சிப்பாய் கலகமும் அதன் பின்னணியும் ஒரு ஏமாற்றுத் தந்திரம் என்று ஊகிக்க முடிகிறதா ?
ஜமீன்தாரி முறை, உடன்கட்டை ஏறுதல், இரண்டாம் உலகப் போர் பற்றிய இவரின் விமர்சனங்கள் மற்றும் காந்திய சிந்தனைகளைப் பற்றிய இவரின் பார்வை போன்ற விஷயங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கும் இடங்கள். மதமாற்றத்தைப் பற்றி இவர் கூறும் செய்தியை செய்தியாய் மட்டுமே பார்த்தால் (அனைத்து மதத்தின்) முன்னோர்களும் எப்படி இருந்திருக்கிறார்கள் என்ற வியப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
வரலாற்றுச் செய்திகளை வரலாறாக மட்டும் பார்க்க விரும்பும் வாசகர்களுக்கு நல்லதொரு புத்தகம்.
Super Ramkumar
ReplyDelete