Search This Blog

Friday, March 25, 2016

தனிமை - நேரம்

சிறிய இடைவேளை விட்டு மீண்டும் என்னை சந்தித்தேன்.. மனம் திறந்து பேசத்தோன்றிய உடன் பேச ஆரம்பித்தோம்.. இன்று தனிமை எனக்கு உணர்த்திய விஷயம் ரொம்ப ஆச்சரியமான விஷயம். இது நினைப்பைப் பற்றியது.. யாரைப் பற்றிய நினைப்பு என்பது இல்லை இது.. ஒருவகை எதிர்பார்ப்பு என்று கூட சொல்ல முடியும்..  ஆனால் இது அதையும் தாண்டிய செய்தி..

நாம் ஒருவரைப் பற்றி என்ன எண்ணுகிறோம் எப்படி நினைக்கிறோம் என்பதை விட அடுத்தவர்கள் நம்மை எப்படி நினைக்கிறார்கள் என்று தான் அதிகம் கவலைப் படுகிறோம்... என்னால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் சிந்திக்க ஆரம்பிக்கும்போது சில உண்மைகள் புலப்பட்டன.

நாம் ஒருவரைப் பற்றி எவ்வளவு நேரம் என்னவெல்லாம் சிந்திக்கிறோம் என்று நமக்குத் தெரியும். அதை அவர்களிடமும் சில நேரங்களில் சொல்லியும்  விடுகிறோம். அப்படி சொல்லியும் சில நேரங்களில் அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறோம். இப்படி நினைப்பதற்கு காரணம் அவர்கள் நம்மை ஒதுக்குகிறார்கள் இல்லை நம்மை மதிக்கவில்லை என்ற எண்ணம் மேலோங்கும் போது தான். நாம் அவர்களைப் பார்ப்பது போல் அவர்கள் நம்மைப் பார்க்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நாம் அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவர்கள் நமக்கு கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  நாம் ஒருவரை ஒரு விதமாக பார்ப்பது போலவே அவர்களும் அப்படியே நம்மைப் பார்க்க வேண்டும் என்ற  தேவையும் இல்லை.

இயற்கை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக படைத்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தன்னையும் தன் குணாதிசயங்களையும் வெளிப்படுத்துவர். இதில் தன் அன்பு, கோபம், அனுதாபம் மற்றும் பல்வேறு உணர்வுகளையும்  உணர்ச்சிகளையும்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவர் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை உண்மை. நமக்கு வேண்டிய நேரத்தில் நமக்கு பிடித்தது போல் நமக்கு அன்போ பாசமோ கோபமோ காண்பிக்க வேண்டும் என்றால் அவர்கள் நம்மால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரமாக மட்டுமே இருக்க முடியும்....

அவர் அவர்களுக்கு நேரம் இருக்கும்போது தான் அடுத்தவர்களைப் பற்றி கவலைப் படுவார்கள் என்ற அடிப்படை உண்மையை புரிந்துகொண்டால் இந்த எண்ணம் நமக்குத் தோன்றாது. இன்னொன்றும் உண்மை இருக்கிறது.  ஒருவர் நமக்கு நேரம் ஒதுக்கும்போது  நிறைவாகவும் அவர்கள் நம்மை ஒதுக்கும் போது துன்பப் படுவதாலும் தான் இத்தனை குழப்பங்கள். நமக்காக நேரம் ஒதுக்கினாலும் சரி, இல்லை, நம்மையே ஒதுக்கினாலும் சரி,  நமக்கு நாம் நேரம் ஒதுக்குவது தான் முக்கியம் என்று நினைக்கும் போது இந்த வாழ்க்கை அழகாக மாறுகிறது. அப்படி மாறும்போது தனிமையை மேலும் ரசிக்க முடிகிறது..

அன்பையும் ஆறுதலையும் வெளியேத் தேடுவதானால் வருவது அதிக அன்போ ஆறுதலோ இல்லை என்பதை புரிய வைத்த தனிமைக்கு நேரம் அதிகம் ஒதுக்கினால் மேலும் பல உண்மைகள் நமக்குப் புரியத் தொடங்கும் என்று ஒப்புக் கொண்டு விடைப் பெற்றோம்.

Sunday, March 13, 2016

தனிமை - எதிர்பார்ப்பு


மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு .. ஆம் தனிமையை  ஆராதிக்க.

நம் வாழ்வில்  எதிர்பார்ப்பு என்பது இன்றியமையாததாகி  விட்டது.  அவரவரின் தேவைகளுக்கு ஏற்ப எதிர்பார்ப்புகள் மாறலாம். அனால்,  இந்த எதிர்பார்ப்பு என்பது பொதுவாக என்னவாக இருக்கிறது என்பதை ஆராய இந்தத் தனிமை  தேவைப்பட்டது. 

எதிர்பார்ப்பில் என் பார்வையில், 
1. மற்றவர்கள் நம்மை பாராட்ட வேண்டும்
2. மற்றவர்களின் முன்னுரிமை பட்டியலில் நாம் இருக்க வேண்டும்
3. நாம் சொல்வதுபடி மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும்

போன்ற முக்கிய  விஷயங்கள் தான் அடிக்கடி வருவன. எதிர்பார்ப்பதே தப்பு என்ற எண்ணம் பரவலாக இருப்பது ஒரு  புறம். எதிர்பார்க்காமல் இருக்க முடியாது என்ற யதார்த்தம் இன்னொரு புறம்.

ஆனால் இது போன்ற "நம்முடைய"  எதிர்பார்ப்புகளில் மிக அதிக பங்கு வகிப்பது "அடுத்தவர்கள்" தான்.  

யாராவது நம்மை பாராட்டவில்லை என்றால் நாம் சோர்ந்து விடுகிறோம். அதுவும் அவர்களுக்காக நம் உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் கொடுத்துவிட்டும் பாராட்டவில்லை என்றால் நம்மை நாமே வருத்திக்கொள்ளும் அளவிற்கு துக்கப்படுகிறோம். துன்பப்படுகிறோம்.. துயரப்படுகிறோம். நம்மை எதற்காக ஒருவர் பாராட்ட வேண்டும் என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொண்டால் எல்லாருக்கும் வரும் ஒரு கருத்து "இவ்வளவு  செஞ்சிருக்கோம் இவனுக்காக. பாராட்டினால் என்னவாம்" . இரண்டு கோணங்களில் பார்க்கலாம். பாராட்டில் நீங்கள் விருப்பம் உள்ளவராக இருப்பது தெரிந்திருந்து, ஒருவர் உங்களைப் பாராட்டினால் உங்களிடமிருந்து அதிக வேலை வாங்கப் போகிறார் என்று இருக்கலாம். இல்லை பாராட்டை மட்டும் எதிர்ப்பார்த்து செய்தால் நாம் செய்த செயல் சரியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. வேலை செய்யும்போது இந்த வேலையை மேலும் சிறப்பாக செய்வது எப்படி என்ற எதிர்பார்ப்பு தான் நியாயமானதாக தோன்றுகிறது. அப்படி எதிர்பார்த்தால், மற்றவர்கள் பாராட்டாமல் போனாலும் மனதிற்கு பெரிதாக வலி இருக்காது.


அடுத்து மற்றவர்களின் முன்னுரிமை பட்டியலில் நாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. மனிதர்களின் தேவைகள் மாறுபடுவது போல் அந்தத் தேவைகளுக்கு துணை புரிபவர்களையும் தேடுவது இயல்பு. உப்மாவிற்கு சேமியாவை பயன்படுத்துவதனால் பொங்கலுக்கும் சேமியா போட முடியாது. அவரவர்களுக்கு தேவை இருக்கும்போதுதான் நம்மை அவர்களின் முன்னுரிமை பட்டியலில் வைத்திருப்பார்கள். அப்படி இருப்பது ஒரு வகையில் நியாமும் கூட. பொதுவாக இப்படி அடுத்தவர்களின் பட்டியலில் இல்லை என்று யோசிப்பதை விட நம்மால் அவர்களுக்கு உதவ முடிந்ததே என்று எண்ணி வேறு எப்படி யாருக்கு உதவலாம் என்று பட்டியலிடலாமே?

அடுத்த பொதுவான எதிர்பார்ப்பு நாம் சொல்வதுபடி மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது. எதற்காக அவர்கள் அப்படி நடந்துகொள்ள வேண்டும். நாம் சொல்வதுபடி நம்முடன் பிறந்த மனமே கேட்கவில்லை என்றால் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த ஒருவன் எதற்காக கேட்டு நடக்க வேண்டும் என்று கூட நம்மால் யோசிக்க முடியவில்லை. ஒரு வயதிற்கு மேல் அனுபவ அறிவு வந்துவிடுகிறது சிலருக்கு. அப்படி வந்ததின் அடையாளம், அடுத்தவர்கள் எதாவது செயல் செய்யும்போது நீங்கள் சொல்வது படி செய்யாமல் புதிதாகவோ அல்லது மாற்றி செய்தாலோ பாராட்டுவது தான். (தன் வயதின் அடைப்படையில்) அனுபவசாலிகள் என்று தன்னை சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் அடுத்தவர்களின் புதிய சிந்தனைகளை எதிர்ப்பார்க்கலாமே ?

இவ்வளவு சொல்லிக் கொடுத்த இந்தத் தனிமை மிகவும் அழகானது தான். அனால்  இது உண்மை என்று புரிந்து இதுபடி வாழவும் இந்தத் தனிமை துணைபுரியும் போது,  இந்தத் தனிமையை நிச்சயம் பாராட்ட முடியும்.


Sunday, March 6, 2016

தனிமை - மிகவும் அழகானது

தனிமையைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்த உடன் நான் என்னவோ விரக்தியின் உச்ச நிலையில் இருக்கிறேன் என்று எண்ண வேண்டாம். ரொம்ப நாள் கழித்து - இல்லை இல்லை ரொம்ப வருடங்கள் கழித்து இன்று எனக்கு தனிமையாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் வெளிப்பாடு தான் இந்த பதிவு.

தனிமை என்று சொன்னாலே அது ஒரு வியாதி என்றே முடிவு செய்து விடுகின்றனர் பலர். சிலரோ அதிலே உழன்று தங்கள் வாழ்கையை இழந்து விடுகின்றனர். சிலரோ அதிலிருக்கும் அழகை ரசித்து வாழ்கையை செதுக்கிக்  கொள்கின்றனர்.  தனிமை என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு வரம். சின்ன வயதிலிருந்தே எனக்கு தனிமை புடிக்கும் அனால் அதன் அர்த்தம் வெகு நாட்களாக புரிந்ததில்லை. ஓஷோவின் "From Loneliness to Aloneness" புத்தகத்தில் சில பக்கங்கள் படிக்கும் போது புரிந்தது போல் இருந்தது கொஞ்சம்.

வெறுமையான தனிமை என்பது வேறு. அது மிகவும் ஆபத்தானது.. அது நம்மை யோசிக்கவும் விடாது.. முன்னேறவும் விடாது. அனால் சொல்வேந்தர் சுகி சிவம் சொல்வதைப் போல, பூரணத்துவத் தனிமை என்பதைத் தேடி நாம் போனால் அதிலிருக்கும் ஆனந்தத்தின் எல்லையே வேறு. இன்று நான் அப்படி ஒரு நிலையை அடைந்த உணர்வு எனக்குள் கிடைத்தது. (நாளையே இல்லை இல்லை இன்றே என் மனம் மாறினாலும் மாறும் - மனம் ஒரு குரங்கு தானே)

எனக்கு நானே அறிமுகம் செய்து கொண்டு என் தனிமைப் பயணம் துவங்கியது.. எது நிம்மதியைத் தருகிறது என்று எனக்கு நானே நிம்மதியாக இருந்த தருணங்களை நினைத்துப் பார்த்தேன். வந்த விடை அதிர்ச்சியானதாக இருந்ததினால், அதை இங்கு வெளியிட விரும்பவில்லை. ஆனால், ஒன்று தெளிவாகத் தெரிந்தது. என் நிம்மதியின் அளவுகோல் மாறியிருந்தது. மகிழ்ச்சியின் எல்லைகள் மாறியிருந்தது. வாழ்க்கையைப் பார்க்கும் விதம் மாறியிருந்தது. இதெல்லாம் எனக்கு தெரியாமல் போயிருக்க வாய்ப்பகள் மிக இக அதிகமாக இருந்திருக்கும் இன்று அந்த தனிமையை வெறுத்திருந்தால். அல்லது ஒரு நோய் என்று நினைத்திருந்தால்.

மேதகு அப்துல் கலாம் சொன்னது :  கனவு என்பது உறக்கத்தில் வருவது அல்ல, உறங்கவிடாமல் செய்வது .. தனிமையும் அவ்வாறு தான் என்று எனக்கு தோன்றுகிறது - தனிமை என்பது உங்களை வெறுமையில் அழுத்துவது அல்ல. உங்களை (உங்களுக்கு) வேறுபடுத்திக் காட்டுவது...

இதெல்லாம் தெரிந்துகொண்டு என்ன செய்தாய் என்று கேட்டால் பதில் இல்லை...இன்னும்  அதிக தனிமை வேண்டும் என்று மட்டும் புரிந்தது.... இந்தத் தனிமையில் அளவுகோல்களை ஆராய வேண்டியத் தேவை இருக்கிறது என்று புரிந்தது... சில அளவுகோல்கள் தேவையில்லை என்றும் புரிந்தது... இவ்வளவு புரியவைத்த தனிமை மிகவும் அழகானது என்றும் புரிந்தது....