மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு .. ஆம் தனிமையை ஆராதிக்க.
நம் வாழ்வில் எதிர்பார்ப்பு என்பது இன்றியமையாததாகி விட்டது. அவரவரின் தேவைகளுக்கு ஏற்ப எதிர்பார்ப்புகள் மாறலாம். அனால், இந்த எதிர்பார்ப்பு என்பது பொதுவாக என்னவாக இருக்கிறது என்பதை ஆராய இந்தத் தனிமை தேவைப்பட்டது.
எதிர்பார்ப்பில் என் பார்வையில்,
1. மற்றவர்கள் நம்மை பாராட்ட வேண்டும்
2. மற்றவர்களின் முன்னுரிமை பட்டியலில் நாம் இருக்க வேண்டும்
3. நாம் சொல்வதுபடி மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும்
போன்ற முக்கிய விஷயங்கள் தான் அடிக்கடி வருவன. எதிர்பார்ப்பதே தப்பு என்ற எண்ணம் பரவலாக இருப்பது ஒரு புறம். எதிர்பார்க்காமல் இருக்க முடியாது என்ற யதார்த்தம் இன்னொரு புறம்.
ஆனால் இது போன்ற "நம்முடைய" எதிர்பார்ப்புகளில் மிக அதிக பங்கு வகிப்பது "அடுத்தவர்கள்" தான்.
யாராவது நம்மை பாராட்டவில்லை என்றால் நாம் சோர்ந்து விடுகிறோம். அதுவும் அவர்களுக்காக நம் உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் கொடுத்துவிட்டும் பாராட்டவில்லை என்றால் நம்மை நாமே வருத்திக்கொள்ளும் அளவிற்கு துக்கப்படுகிறோம். துன்பப்படுகிறோம்.. துயரப்படுகிறோம். நம்மை எதற்காக ஒருவர் பாராட்ட வேண்டும் என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொண்டால் எல்லாருக்கும் வரும் ஒரு கருத்து "இவ்வளவு செஞ்சிருக்கோம் இவனுக்காக. பாராட்டினால் என்னவாம்" . இரண்டு கோணங்களில் பார்க்கலாம். பாராட்டில் நீங்கள் விருப்பம் உள்ளவராக இருப்பது தெரிந்திருந்து, ஒருவர் உங்களைப் பாராட்டினால் உங்களிடமிருந்து அதிக வேலை வாங்கப் போகிறார் என்று இருக்கலாம். இல்லை பாராட்டை மட்டும் எதிர்ப்பார்த்து செய்தால் நாம் செய்த செயல் சரியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. வேலை செய்யும்போது இந்த வேலையை மேலும் சிறப்பாக செய்வது எப்படி என்ற எதிர்பார்ப்பு தான் நியாயமானதாக தோன்றுகிறது. அப்படி எதிர்பார்த்தால், மற்றவர்கள் பாராட்டாமல் போனாலும் மனதிற்கு பெரிதாக வலி இருக்காது.
அடுத்து மற்றவர்களின் முன்னுரிமை பட்டியலில் நாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. மனிதர்களின் தேவைகள் மாறுபடுவது போல் அந்தத் தேவைகளுக்கு துணை புரிபவர்களையும் தேடுவது இயல்பு. உப்மாவிற்கு சேமியாவை பயன்படுத்துவதனால் பொங்கலுக்கும் சேமியா போட முடியாது. அவரவர்களுக்கு தேவை இருக்கும்போதுதான் நம்மை அவர்களின் முன்னுரிமை பட்டியலில் வைத்திருப்பார்கள். அப்படி இருப்பது ஒரு வகையில் நியாமும் கூட. பொதுவாக இப்படி அடுத்தவர்களின் பட்டியலில் இல்லை என்று யோசிப்பதை விட நம்மால் அவர்களுக்கு உதவ முடிந்ததே என்று எண்ணி வேறு எப்படி யாருக்கு உதவலாம் என்று பட்டியலிடலாமே?
அடுத்த பொதுவான எதிர்பார்ப்பு நாம் சொல்வதுபடி மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது. எதற்காக அவர்கள் அப்படி நடந்துகொள்ள வேண்டும். நாம் சொல்வதுபடி நம்முடன் பிறந்த மனமே கேட்கவில்லை என்றால் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த ஒருவன் எதற்காக கேட்டு நடக்க வேண்டும் என்று கூட நம்மால் யோசிக்க முடியவில்லை. ஒரு வயதிற்கு மேல் அனுபவ அறிவு வந்துவிடுகிறது சிலருக்கு. அப்படி வந்ததின் அடையாளம், அடுத்தவர்கள் எதாவது செயல் செய்யும்போது நீங்கள் சொல்வது படி செய்யாமல் புதிதாகவோ அல்லது மாற்றி செய்தாலோ பாராட்டுவது தான். (தன் வயதின் அடைப்படையில்) அனுபவசாலிகள் என்று தன்னை சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் அடுத்தவர்களின் புதிய சிந்தனைகளை எதிர்ப்பார்க்கலாமே ?
இவ்வளவு சொல்லிக் கொடுத்த இந்தத் தனிமை மிகவும் அழகானது தான். அனால் இது உண்மை என்று புரிந்து இதுபடி வாழவும் இந்தத் தனிமை துணைபுரியும் போது, இந்தத் தனிமையை நிச்சயம் பாராட்ட முடியும்.
No comments:
Post a Comment