Search This Blog

Sunday, March 6, 2016

தனிமை - மிகவும் அழகானது

தனிமையைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்த உடன் நான் என்னவோ விரக்தியின் உச்ச நிலையில் இருக்கிறேன் என்று எண்ண வேண்டாம். ரொம்ப நாள் கழித்து - இல்லை இல்லை ரொம்ப வருடங்கள் கழித்து இன்று எனக்கு தனிமையாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் வெளிப்பாடு தான் இந்த பதிவு.

தனிமை என்று சொன்னாலே அது ஒரு வியாதி என்றே முடிவு செய்து விடுகின்றனர் பலர். சிலரோ அதிலே உழன்று தங்கள் வாழ்கையை இழந்து விடுகின்றனர். சிலரோ அதிலிருக்கும் அழகை ரசித்து வாழ்கையை செதுக்கிக்  கொள்கின்றனர்.  தனிமை என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு வரம். சின்ன வயதிலிருந்தே எனக்கு தனிமை புடிக்கும் அனால் அதன் அர்த்தம் வெகு நாட்களாக புரிந்ததில்லை. ஓஷோவின் "From Loneliness to Aloneness" புத்தகத்தில் சில பக்கங்கள் படிக்கும் போது புரிந்தது போல் இருந்தது கொஞ்சம்.

வெறுமையான தனிமை என்பது வேறு. அது மிகவும் ஆபத்தானது.. அது நம்மை யோசிக்கவும் விடாது.. முன்னேறவும் விடாது. அனால் சொல்வேந்தர் சுகி சிவம் சொல்வதைப் போல, பூரணத்துவத் தனிமை என்பதைத் தேடி நாம் போனால் அதிலிருக்கும் ஆனந்தத்தின் எல்லையே வேறு. இன்று நான் அப்படி ஒரு நிலையை அடைந்த உணர்வு எனக்குள் கிடைத்தது. (நாளையே இல்லை இல்லை இன்றே என் மனம் மாறினாலும் மாறும் - மனம் ஒரு குரங்கு தானே)

எனக்கு நானே அறிமுகம் செய்து கொண்டு என் தனிமைப் பயணம் துவங்கியது.. எது நிம்மதியைத் தருகிறது என்று எனக்கு நானே நிம்மதியாக இருந்த தருணங்களை நினைத்துப் பார்த்தேன். வந்த விடை அதிர்ச்சியானதாக இருந்ததினால், அதை இங்கு வெளியிட விரும்பவில்லை. ஆனால், ஒன்று தெளிவாகத் தெரிந்தது. என் நிம்மதியின் அளவுகோல் மாறியிருந்தது. மகிழ்ச்சியின் எல்லைகள் மாறியிருந்தது. வாழ்க்கையைப் பார்க்கும் விதம் மாறியிருந்தது. இதெல்லாம் எனக்கு தெரியாமல் போயிருக்க வாய்ப்பகள் மிக இக அதிகமாக இருந்திருக்கும் இன்று அந்த தனிமையை வெறுத்திருந்தால். அல்லது ஒரு நோய் என்று நினைத்திருந்தால்.

மேதகு அப்துல் கலாம் சொன்னது :  கனவு என்பது உறக்கத்தில் வருவது அல்ல, உறங்கவிடாமல் செய்வது .. தனிமையும் அவ்வாறு தான் என்று எனக்கு தோன்றுகிறது - தனிமை என்பது உங்களை வெறுமையில் அழுத்துவது அல்ல. உங்களை (உங்களுக்கு) வேறுபடுத்திக் காட்டுவது...

இதெல்லாம் தெரிந்துகொண்டு என்ன செய்தாய் என்று கேட்டால் பதில் இல்லை...இன்னும்  அதிக தனிமை வேண்டும் என்று மட்டும் புரிந்தது.... இந்தத் தனிமையில் அளவுகோல்களை ஆராய வேண்டியத் தேவை இருக்கிறது என்று புரிந்தது... சில அளவுகோல்கள் தேவையில்லை என்றும் புரிந்தது... இவ்வளவு புரியவைத்த தனிமை மிகவும் அழகானது என்றும் புரிந்தது....

No comments:

Post a Comment