கார்ப்பரேட் உலகத்துல பாக்காத மன அழுத்தமா? . இந்த காலத்துல எங்கே பாத்தாலும் நம்ம மனம் நோகும்படி நடக்கற விஷங்கள் மட்டுமே நமக்குத் தெரிகின்றன. நம்மைச்சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நம்மைக் காயப்படுத்தும் நோக்கோடு இருக்கிறார்கள் என்று எப்போதும் ஒரு எண்ணம். அந்த காலப் திரைப்படப் பாடலில் இருந்த பொருள் இந்தக் காலப் பாடலில் இல்லை. வீட்டில் , நண்பர்களுடன், அலுவலகம் என்று யாருடன் எங்கு இருந்தாலும் நாம் பார்ப்பது அனைத்தும் மனஅழுத்தம் தரும் செய்திகளாகப் பார்த்தால் நமக்கு மிஞ்சுவது எல்லாம் மன அழுத்தம் தான். இப்படி எதுவும் வருத்தம், எல்லாவற்றிலும் வருத்தம், என்று இருபவர்களாகி விட்டோம் நம்மில் சிலர்.
அப்படி மனவருத்தம் அதிகம் இருக்கும் நேரத்தில் நிறைய பேருக்கு மன ஆறுதலாக அமைவது திரையிசைப் பாடல்கள்தான். அதிலும் 70களில் , 80களில் வந்த பாடல் என்றால் யாருக்குத்தான் மன அமைதி கிடைக்காது. MS விஸ்வநாதன், இளையராஜா, AR ரஹ்மான், வித்யாசாகர் என்று அனைத்து இசையமைப்பாளர்களின் பாடல்கள் தொடங்கி, நாம் அன்றாடம் கேட்கும் பாடல்களில் கூட மனதிற்கு இதமான நகைச்சுவை கிடைக்கும் என சான்று காட்டிய நிகழ்ச்சி. மன அழுத்தம் இல்லாமல் மனதார சிரிச்சு ரசித்த நிகழ்ச்சி.
40 வயதில் இருப்பவர்க்ளில் 99 சதவீதம் பேர் சுமார் 1000 முறை கேட்டிருக்க கூடிய 30 , 40 திரைப்பட பாடல்களைப் பாடி, அதனுள் இவ்வளவு நகைச்சுவை இருக்கா என்று வியக்க வைத்த நிகழ்ச்சி. அந்த அளவிற்கு நகைச்சுவைகளை அள்ளித்தந்து, சுருதி விலகாமல் பாடி, இனி வாழ்வில் இந்த பாடல்களை, பாதி தூக்கத்தில் கேட்டாலும் இவர் அந்தப் பாடலைப் பற்றி சொன்ன நகைச்சுவை தான் நம் நினைவில் இருக்கும்.
கர்ணன் திரைப்படத்தில் வரக்கூடிய, உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற உணர்வுப்பூர்வமான பாடலை கூட இவ்வளவு நகைச்சுவையாக பார்க்க முடியுமா என்ற அளவிற்கு 10 நிமிடம் இடைவிடா நகைச்சுவை... இதில் முக்கியமான விஷயம் — நடித்த சிவாஜி, பாடிய சீர்காழி கோவிந்தராசன், அதில் மறைந்துள்ள இறைமை எதையுமே கிண்டல், நக்கல், நையாண்டி செய்யாமல் நகைச்சுவை கூறியது — இவர், தான் கற்றுக்கொண்ட இசையின் மீது வைத்திருந்த மரியாதையைத் தான் காட்டுகிறது.
இவரின் இந்த நகைச்சுவையைக் கேட்ட பிறகு இந்தப் பாடலைக் கேட்டால் பாட்டை ரசிப்பதா, இவரின் நகைச்சுவையை நினைத்து சிரிப்பதா என்ற பட்டிமன்றம் தான் இனி என் மனதில் ஓடும். பேச்சில் தரமுள்ள நகைச்சுவையின் தேவை, யார் மனமும் நோகாமல் ஒரு நகைச்சுவைப் பேச்சினை எப்படி தயார் செய்வது என்று இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து கற்றுகொள்ளலாம்.
இவரின் ஆரம்ப கால நகைச்சுவை சிலவற்றை கேட்டிருக்கிறேன். நேற்றைய நகைச்சுவையைக் கேட்ட பிறகு திறமை மட்டும் ஒருவரை முன்னேற்றிவிடாது. உழைப்பும் அவசியம் என்பது தெள்ளத் தெளிவு. வெறும் stand-up comedy என்று 4-5 நகைச்சுவை துணுக்குகளைச் சொல்லாமல், சாலையில் தக்க பாதுகாப்போடு வண்டி ஓட்டுவதன் அவசியம், போட்டி மனப்பான்மை எவ்வாறு வாழ்வை புரட்டிப் போடுகிறது, உண்மை ஒன்றே - கடவுள் ஒன்றே என்ற சிந்தனையெல்லாம் அவ்வப்போது சொல்லி, 105 நிமிடம் பார்வையாளர்களை பாடி, ஆடி, பல்வேறு இசைக்கருவிகளை வாசித்து கட்டுப்படுத்தினார் பாட்டும், கருத்தும், நகைச்சுவையும் மாறி மாறி அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தது. எதுவும் வலிந்து திணிக்கப்படவில்லை.
இவர் சொன்ன நகைச்சுவை சிலவற்றை இங்கு நான் சொல்லாமல் போவதற்கு மூன்று காரணங்கள்.
1. எனக்கு அவரைப்போல் நகைச்சுவை சொல்ல வராது.
2. இது போன்ற நிகழ்ச்சிகளை அனைவரும் போய், பார்த்து, ரசித்து அனுபவித்தால்தான் கலை வளரும். கலைஞர்கள் வளருவார்கள்.
3. இதுபோல் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயத்தில் நகைச்சுவையைக் கண்டெடுத்து என் சொந்த நகைச்சுவையோடு எப்போதாவது சந்திப்போம்.
No comments:
Post a Comment