Search This Blog

Saturday, December 23, 2017

இரண்டாம் உலகப் போர்

ஹிட்லர் முஸோலினி என்ற பெயரை எடுத்தாலே, எனக்கு பாடம் எடுத்த வரலாறு ஆசிரியரை, ஹிட்லர் மற்றும் முஸோலினியைப்  போல பார்த்து பழகிய நான், இந்தப் புத்தகம் கைக்கு கிடைத்து ஒரே வாரத்திற்குள் படித்து முடித்த வரலாற்று அனுபவம் தான் இந்தப்பதிவு.  மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை, குரூரங்களை அனாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப் போர் என்ற உண்மையை அனாயாசமாக எழுதியப்  புத்தகம். 


அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசி ஆராயப்பட்ட மருதனின் நூல் "இரண்டாம் உலகப் போர்". 310 பக்க புத்தகம் முழுவதும் பல்வேறு செய்திகள், கதைகள், தனிமனித வழிபாட்டு முறைகள், அக்கிரமங்கள், அராஜகங்கள் என்று இருந்தாலும்,  புத்தகத்தை கீழே வைக்கமுடியாதபடி ஒரு விறுவிறுப்பு. மூன்று முக்கியமான விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் பார்க்கலாம். ஒன்று - யூபர் (ஜெர்மானிய இராணுவத்தினர் அவரை இப்படித்தான் அழைத்தனர்) ஹிட்லர், இரண்டு - ஒப்பந்தங்கள், மூன்று - வரலாற்று புள்ளிவிவரங்கள்.

ஹிட்லர்  - முதல் உலகப் போருக்கு பிறகு ஜெர்மனி வீழ்கிறது - எழுகிறார்   ஹிட்லர்.  சிந்தனைவாதி, நாட்டு பற்று அதிகம் கொண்டவர், ஒழுக்கமானவர்; கலையில் ஆர்வமிக்கவர்; இப்படி அறிந்திராத பல தகவல்கள். ஹிட்லர் தான் ஜெர்மனி - ஜெர்மனி தான் ஹிட்லர் என்ற அளவிற்கு யாரின் ஆதரவும் இல்லாமல் தன் கனவினை நோக்கி பயணித்த அனுபவம் வாய்ந்த வாழ்க்கை. சான்சிலர் பதவி கிடைத்தும் தான் இருக்கும் இடத்தை தக்க வைக்க ஓயாத உழைப்பு, மக்களை தன் பக்கம் ஈர்க்கும் வசீகர பேச்சாற்றல், இராஜதந்திரி, பத்திரிக்கையாளர் அடுக்கிக்கொண்டே போகலாம்... பல இடங்களில் ஒரு சூப்பர் ஹீரோவாகத் தான் காட்சியளிக்கிறார். இந்தப் புத்தகம் படித்து முடித்தவுடன், ஹிட்லர் பற்றிய செய்திகளை ஒரு மாதத்திற்காவது வாசகர்கள் தேடித்தேடி படிப்பார்கள் என்று சொல்லலாம். 

இவ்வளவு நல்லவரா என்று நினைக்கும்போது தான் அத்தனை அத்துமீறல்களும் அரங்கேறுகின்றன. திட்டமிட்டு செயல்பட்டு ஒவ்வொரு நாட்டையும் நாட்டு மக்களையும் சிறைபிடித்து சித்திரவதை செய்து அவர்களுக்கு மரணபயத்தை கண்ணில் காட்டிய யமன் என்று தான் சொல்ல வேண்டும்.  இதற்கெல்லாம் பெரும் காரணம் மண்ணாசை தான் என்று வரலாறு நமக்கு சொல்லிக்கொடுத்தாலும், அவருக்கு யூதர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி, அவரைச் சுற்றி இருந்த  துரோகிகள், நயவஞ்சகர்களும் காரணம் என்றால் மறுக்கமுடியாது. (காலகாலமாக தலைமையில் இருப்பவர்களுக்கு, அடுத்தத் தலைமுறைக்கு தலைமையைத் தர தயக்கம் / வெறுப்பு இருந்து வருகிறது போல).  பெரும்பாலான நேரம் தன்னுடைய அராஜக அதிகாரத்தின் மூலம் இந்த உலகத்தை கட்டுக்குள் வைத்திருந்த யூபர் ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற செய்தியைப் படித்தவுடன் நெஞ்சம் கனப்பதை தவிர்க்கமுடியவில்லை.


ஒப்பந்தங்கள் - சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய நாடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டன. அத்தனைக்கும் இரண்டு ஒற்றுமைகள் - ஒன்று இவையனைத்தும் சடலங்கள் மீது போடப்பட்ட சமாதான ஒப்பந்தங்கள் - இன்னொன்று எவையுமே பின்பற்றபடவில்லை. அப்பறம் எதற்கு ஒப்பந்தம் என்பது தான் இந்தப் புத்தகத்தில் அடுத்து அதிகம் சொல்லப்பட்ட சுவாரஸ்யமான செய்திகள்.  தன்னோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்ட எந்த நாடும் முன்னேறிவிடக்கூடாது, என்பதில் வல்லரசு என்று தன்னைத்தானே பிரகடனம் செய்துகொண்ட நாடுகள்  அத்தனையும் அதிக அக்கறை செலுத்தியது.  அவ்வளவு வன்மம் - அவ்வளவு அநீதி.   வாழ்க்கை என்பது வெறும் துயரங்களின் அணிவகுப்பு என்று இந்தக்காலத்தில் நினைப்பவர்கள், அன்று இந்த நயவஞ்சகர்களிடம் சிக்கி தவித்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொண்டால்,  வாழ்க்கைப் பற்றியப்  பார்வை மாறிவிடும் என்பது உறுதி. 

புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு நாடும் இராணுவத்திற்கு எப்படி, எத்தனை ஆட்கள் சேர்த்தன, ஆள் சேர்ப்பதில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவந்தன, போருக்கு என்னென்ன யுக்திகள் (strategies) பயன்படுத்தப்பட்டன, எத்தனை நாடுகள் பங்கேற்றன, எத்தனை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன, ஒவ்வொரு போரிலும் எத்தனை பேர் மாண்டார்கள்,  எத்தனை டேங்கர்கள் பயன்படுத்தப்பட்டன, வெற்றிபெற்ற நாடு அதன் இராணுவத்தினருக்கு என்னென்ன பதக்கங்கள் வழங்கின,  என்பதைப் பற்றியெல்லாம் பிரித்து மேய்ந்திருக்கிறார் ஆசிரியர்.

முதல் உலகப்போரில் தொடங்கி, இரண்டாம் உலகப் போர் முடிந்து சில காலம் வரை நடந்த அத்தனை முக்கியமான நிகழ்வுகளையும் ஒரு ஐந்து பக்கத்திற்குள், தேதி வாரியாக அடுக்கியிருப்பது நிறைய பேச்சாளர்களுக்கு / எழுத்தாளர்களுக்கு ஒரு quick reference guide என்று சொல்லலாம். தான் சொன்ன வரலாற்று தகவலுக்கான ஆதாரங்களையும் அடுக்க மறக்கவில்லை ஆசிரியர். மொத்தத்தில் கண் இமைப்பதற்குள் சேதங்கள் நிகழ்ந்துவிட்டன என்று சொல்ல முடியாதபடி, வடிவேலு சொல்வதைப் போல் அத்தனையும் plan பண்ணி செய்யனும்னு வெச்சிசெஞ்ச போர் தான், இரண்டாம் உலகப் போர் என்பதை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் ஆசிரியர். 

No comments:

Post a Comment