Search This Blog

Sunday, November 24, 2013

ஒரு மட மாதும் (பட்டினத்தார்)

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து...
ஊறு சுரோணித மீது கலந்து
பனியில் ஓர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து
மகளிர்கள் சேனை தராணை ஆடை
மண்பட உந்தி உடைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை அமுதம் அருந்தி
ஓர் அறிவு ஈர் அறிவாகி வளர்ந்து
ஒளிந்கை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழழை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப
உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு
தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரொடு ஓடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே
உயர் தரு ஞான குரு உபதேச
முந்தமிழின் கலையும் கரை கண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ் பதினாறு பிராயமும் வந்து
மயிர் முடி கோதி அறுபத நீல
வண்டு இமிர் தண்தொடை கொண்ட புனைந்து
மணிபொன் இலக்கு பணிகள் அணிந்து
மாகதர் போகதர் கூடிவணங்க
மதனசொரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு கழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவது கண்டு
மனது பொறாமல் அவர் பிறகு ஓடி
மங்கல செங்கல சந்திகழ் கொங்கை
மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடிய மாமுதல் சேர வழங்கி
ஒருமுதல் ஆகி முதுபொருளாய்
இருந்த தனங்களும் வம்பில் இழந்து
மதன சுகந்த வதனம் இது என்று
வாலிப கோலமும் வேறு பிரிந்து
வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியுமாகியே
வருவது போவது ஒருமுதுகூனு
மந்தி எனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து
துயில் வரும் நேரம் இருமல் பொறாது
தொண்டையும் நெஞ்சும் உலர்ந்து வறண்டு
துகிலும் இழந்து கணையும் அழிந்து
தோகையர் பாலகர்கள் ஓரணி கொண்டு
கலியுகம் மீதில் இவர் மரியாதை
கண்டிடும் என்பவர் சஞ்சலம் மிஞ்ச
கலகல என்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து
தெளிவும் இராமல் உரைதடுமாறி
சிந்தையும் நெஞ்சும் உலைந்து மருண்டு
திடமும் அழிந்து மிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏது என நொந்து
மறையவன் வேதன் எழுதியவாறு
வந்தது கண்டமும் என்று தெளிந்து
இனியென கண்டம் இனி என தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற
கடன்முறை பேசும் என உரைநாவு
தங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிடவந்து
பூதமுநாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே
வளர்பிறை போல எயிரும் உரோமம்
உச்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்சு
மகதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவ காலம் அறிந்து
பழையவர் காணும் எனும் அயலார்கள்
பஞ்சு பறந்திட என்றவர் பந்தர்
இடும் எனவந்து பறையிடமுந்தவே
பிணம்வேக விசாரியும் என்று
பலரையும் ஏவி முதியவர்தாம்
இருந்த சவம்கழு வுஞ்சிலர் என்று
பணிதுகில் தொஞ்கல் களபம் அணிந்து
பாவமே செய்து நாறும் உடம்பை
வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்து இள மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென நொந்து
விறகுஇடை மூடி அழள் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே
REFERENCE:
You Tube Link 


Sunday, July 21, 2013

யாதும் ஊரே யாவரும் கேளிர்

"யாதும் ஊரே யாவரும் கேளிர் ..அன்பே எங்கள் உலக தத்துவம் " - இப்படி ஆரம்பிக்கும் ஒரு தமிழ் திரைபட பாடல் உண்டு

"தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன்மொழியே நம் பொன் மொழியாம் " - கருணாநிதி எழுதி ரஹ்மான் இசை அமைத்த செம்மொழி பாடலில் இப்படி ஒரு வரி வரும் ..

இந்த இரண்டு வரிகளுமே தெய்வத்திரு.கனியன் பூங்குன்றனார் எழுதிய புறநானூறு பாடலின் முதல் இரண்டு வரிகள் ....
அநேகம் தமிழருக்கு இது தெரிந்திருக்கும் ..சிலருக்கு முதல் இரண்டு வரி மட்டும் தெரிந்திருக்கும் ... தெரியாதவர் க்கு நமக்கு தெரிந்ததை சொல்லலாம் என்று எண்ணி இந்த பதிவு ....
ராஜகோபாலனுக்கு என்னாயிற்று ? முதலில் குறுந்தொகை , இப்பொழுது புறநானூறு ...தமிழ் வெள்ளம் பெருக்கெடுக்கிரதா என்கிற கேள்வி எழும் ... வெள்ளம் எடுக்க ஊற்று வேண்டும் ..இங்கு இருப்பதோ சிறு துளிகளே - அதையும் பங்கு போடலாம் என்கிற எண்ணமே ...
என் தந்தை வேலை நிமித்தம் காரணமாக நான் பள்ளியில் தமிழ் படித்ததே இல்லை (இன்று வரை வருந்தும் விடயம் அது ஒன்று ) - ஒரு உந்துதலில் தமிழ் படிக்க பயில ஆரம்பித்தேன் ..அதனாலகூட படித்தவர்களுக்கு மறந்தது , எனக்கு மறக்காமல் இருக்கலாம் ... கடந்த பதிவில் சொன்னது போல , எனக்கு பிடித்த/ தெரிந்த சங்க கால பாடல்களை பற்றி வரும் பதிவுகளில் இயன்ற அளவு பகிர்கிறேன் ..

முதலில் புறநானூறு என்றால் என்ன ? புறநானூறு சங்க காலத்தை சேர்ந்த ஒரு தொகை நூல் ..அதாவது பல பாடல்கள் கொண்ட ஒரு தொகுப்பு ...குறுந்தொகை , புறநானூறு இவ்விரண்டையும் சேர்த்து மொத்தம் எட்டு தொகுப்புகள் உள்ளன , இவைகளை எட்டுத்தொகை என்பர். இதல்லாமல் பத்து நீண்ட பாடல்கள் உள்ளன - அவைகளை பத்துபாடல் என்பர் . இவை இரண்டையும் சேர்த்து மொத்தம் 2381 பாடல்கள் உள்ளன ( 3 வரியிலிருந்து 782 வரி வரை நீளமுள்ளவை ) ..உலகில் எந்த இலக்கியத்திலும் இம்மாதிரியான தொகுப்புகள் இல்லை என்பது நம் பெருமை கணக்கில் இன்னொன்று.
எப்படி பிரித்தார்கள் , ஒவ்வொன்றிலும் இருப்பது என்ன என்பதே பெரிய வரலாறு !

எடுத்து கொண்ட புறநானூறு பற்றி சொன்னால் -- இது பல புலவர்கள் பாடின நானூறு பாடல்களின் தொகுப்பு ..
புறம் -> அதாவது காதல் தவிர்த்து ,வெளி உலகம் சார்ந்த விடயங்கள் பற்றி ...உதாரணத்துக்கு வீரம் , போர் , நற்குணங்கள் இப்படி போகும் பாடல்கள் ...

இப்பொழுது நம் எடுத்து கொண்ட பாடலுக்கு வருவோம் .... நாம் எப்படி வாழ்ந்தோம் ..எப்படி வாழ வேண்டும் ..என்று சொல்வதில் பாரதியாரின் வேடிக்கை மனிதர்கள் , மனதில் உறுதி வேண்டும் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது .... ஒரு அற்புதமான பாடல் .... இதோ உங்கள் பார்வைக்கு பொருளுடன் ... ஒவ்வொரு வரி முடிய ஒரு குறியீடு கொடுத்துள்ளேன் - அதை வைத்தே அந்த வரிக்கான பொருளை தெரிந்து கொள்ளலாம்

பாடியவர் ---- தெய்வத்திரு . கணியன் பூங்குன்றனார்

பாடல்
~~~~~~~

யாதும் ஊரே ; யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ;
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே ;
முனிவின் இன்னாது என்றலும் இலமே ;
மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று நீர் வழிப்படூ ஊம் புணை போல் ஆர் உயிர் முறை வழிப்படூஉம் என்பது திறவோர் - காட்சியின் தெளிந்தனம் ஆகலின் , மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே ;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ;

பொருள்
~~~~~~~~~
எல்லா ஊரும் எங்கள் ஊர் ; எல்லோரும் உறவினர் ;
நல்லதும் கெட்டதும் பிறர் கொடுத்து வருவதில்லை ;
அதுபோலதான் வருத்தமும் சாந்தமும் ;
மரணம் புதியதல்ல ;
வாழ்க்கை இனிது என்று அதிகம் சந்தோஷப்படுவதில்லை ;
கோபத்தினால் வெறுப்புமில்லை ;
மின்னல் மின்னி மழை பெய்து கற்களில் உருண்டு செல்லும் ஆற்றுவெள்ளம் போல வாழக்கை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டோம் அதனால் பெரியவர்களை பார்த்து வியப்படைய மாட்டோம் ;
அதைவிட சிறியவர்களை இகழ்வாய் பேச மாட்டோம் .



...... தமிழாக்கம் தெய்வத்திரு. சுஜாதா ரங்கராஜன் ( புறநானூறு ஒரு எளிய அறிமுகம்)..
பள்ளியில் தமிழ் படிக்காத எனக்கு நிறைய ஆசான்கள் -கண்ணதாசன் , வாலி , வைரமுத்து , சுஜாதா , பால குமாரன் , கல்கி .....இப்படி ..
அந்த வரிசையில் தெய்வத்திரு.சுஜாதா அவர்களின் பங்கு பெரியது ... நடைமுறை தமிழையும் சொல்லி கொடுத்த அதே சமயத்தில் சங்க காலத்துடனும் என்னை அறிமுகம் செய்து வைத்தார் ... விருப்பமுள்ளவர்கள் அவரின் சங்க கால மொழி பெயர்ப்புகளை வாங்கி படியுங்கள்.

இறுதியாக ஒரு சொல் -- இப்படி கடினமான பாடல்களை படித்து என்னா ஆக போகிறது என்கிற கேள்வி எழுபவர்களுக்கு என்னுடைய பதில் இரண்டு (1) உங்களை மனப்பாடம் செய்ய -சொல்லவில்லை .. பொருளை உணர்ந்தாலே மெய் சிலிர்க்கும் (2) பொருளை உணர்ந்தால் நாம் முன்பு எப்படி இருந்தோம் இப்பொழுது எப்படி இருக்கிறோம் என்று தெரியும் - அது உரைத்து விட்டால் புது புத்துணர்ச்சி பிறக்கும்.

வாழ்க தமிழ் .