முதல் திரைப்படம் என்று சொல்வதை விட முத்திரை பதித்த திரைப்படம் இவர்களுக்கு என்று இயக்குனர் திரு அருண் பிரபு புருஷோத்தமன் அவர்களுக்கும், படத்தின் நாயகி அதித்தி பாலனுக்கும் ஒரு சபாஷ் போட வேண்டிய படம் "அருவி".
சர்வதேச பனோரமா பிரிவு விருது, ஷாங்காய் அனைத்துலக திரைப்பட விழாவின் விருது என்று பல விருதுகளை, வெளியாவதற்கு முன்பே பெற்றுள்ள திரைப்படம். பிரதான கதாபாத்திரமான அருவிக்கு மட்டுமில்லாமல் திரைப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. (Rolling Sir என்ற வசனத்தை கடைசி 1 மணி நேரத்தில் பார்வையாளர்களையும் ஒவ்வொரு இடத்திலும் கதாபாத்திரத்தோடு சேர்த்து சொல்ல வைத்தது இயக்குனரின் வெற்றி). கதாபாத்திரத்துக்கு பொருந்தும் திருநங்கை உள்பட எளிய மனிதர்களையே திரைப்படம் முழுக்க பார்க்க முடிகின்றது.
கதையும் கதை சொல்லவந்த விதமும் ஒருவித எதிர்பார்ப்பை கண்டிப்பாக உண்டாக்குகிறது. அடுத்து என்ன நடக்கும் என்று ஓரிடத்திலும் சொல்ல முடியாத ஒரு விறுவிறுப்பு. அழவைத்துவிடுவார் என்று நினைக்கும் இடத்தில் வயறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைத்து, சிரிப்பு வர வேண்டிய இடம் என்று நினைத்தால் அழவைத்துவிடுகிறார்கள் கதாப்பாத்திரங்கள். முக்கியமாக, அருவி, தன்னை படம் முழுவதும் மிகவும் வருத்திக்கொண்டு வெகு இயல்பாக வெறும் முகபாவத்தை வைத்தே கடைசி வரை நம்மை மிரட்டுகிறார். இவரைப் போன்ற திறமைசாலிகளை, நமக்கு பார்க்க மட்டும் இல்லை - பார்க்கப் பார்க்கவும் பிடிக்கும்.
படத்தின் கதாநாயகி அருவி பேசக்கூடிய விஷயம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு வசனமும் கைதட்டலை பெறுகிறது. "போலீஸ் கிட்டே புடிச்சி குடுத்துடுவியா ? அங்கே கூட எய்ட்ஸ் பேஷண்ட்க்கு இடம் கிடையாது", "தப்பு செஞ்சவங்களை மன்னிப்பு கேக்க சொல்லாம, பாதிக்கப்பட்ட என்னை கேள்விகேட்டு உங்க TRP ரேட்டிங்க ஏத்திக்கறீங்களே", "இந்த நோய் வந்துட்டா கண்டிப்பா, தகாத உடலுறவு தான் காரணம்னு சொல்லி பெத்த அம்மா அப்பாவே வெறுத்துடுவாங்க" போன்ற வசனங்கள் மூலம் இயக்குனரின் சமுதாய அக்கறை தெரிகிறது.
இதில் வரும் பாடல்கள் கேட்கும்போது நன்றாக இருக்கிறது. பிறகு மனதில் ஏனோ நிற்கவில்லை. சமுதாயத்தை பழி வாங்குகிறாள் அருவி என்று தெரிந்தாலும் அதுதான் அவளின் நோக்கமா என்று இன்னும் ஆணித்தரமாக சொல்லியிருக்கலாம். சின்ன படத்தை நீட்டியிருக்கிறார்கள் என்று ஆங்காங்கே (முக்கியமாக கடைசி காட்சிகளில்) தோன்றினாலும் படத்தின் பல நல்ல விஷயங்கள் அதை சொல்ல விடாமல் செய்கிறது என்பதே நிதர்சனம்.
புதிய முயற்சியை ஊக்குவிக்கவும், புதிய முகங்களை வரவேற்கவும் இந்தப் படம் திரையரங்கில் போய் பார்க்கவேண்டிய படம்.
No comments:
Post a Comment