Search This Blog

Saturday, December 23, 2017

இரண்டாம் உலகப் போர்

ஹிட்லர் முஸோலினி என்ற பெயரை எடுத்தாலே, எனக்கு பாடம் எடுத்த வரலாறு ஆசிரியரை, ஹிட்லர் மற்றும் முஸோலினியைப்  போல பார்த்து பழகிய நான், இந்தப் புத்தகம் கைக்கு கிடைத்து ஒரே வாரத்திற்குள் படித்து முடித்த வரலாற்று அனுபவம் தான் இந்தப்பதிவு.  மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை, குரூரங்களை அனாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப் போர் என்ற உண்மையை அனாயாசமாக எழுதியப்  புத்தகம். 


அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசி ஆராயப்பட்ட மருதனின் நூல் "இரண்டாம் உலகப் போர்". 310 பக்க புத்தகம் முழுவதும் பல்வேறு செய்திகள், கதைகள், தனிமனித வழிபாட்டு முறைகள், அக்கிரமங்கள், அராஜகங்கள் என்று இருந்தாலும்,  புத்தகத்தை கீழே வைக்கமுடியாதபடி ஒரு விறுவிறுப்பு. மூன்று முக்கியமான விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் பார்க்கலாம். ஒன்று - யூபர் (ஜெர்மானிய இராணுவத்தினர் அவரை இப்படித்தான் அழைத்தனர்) ஹிட்லர், இரண்டு - ஒப்பந்தங்கள், மூன்று - வரலாற்று புள்ளிவிவரங்கள்.

ஹிட்லர்  - முதல் உலகப் போருக்கு பிறகு ஜெர்மனி வீழ்கிறது - எழுகிறார்   ஹிட்லர்.  சிந்தனைவாதி, நாட்டு பற்று அதிகம் கொண்டவர், ஒழுக்கமானவர்; கலையில் ஆர்வமிக்கவர்; இப்படி அறிந்திராத பல தகவல்கள். ஹிட்லர் தான் ஜெர்மனி - ஜெர்மனி தான் ஹிட்லர் என்ற அளவிற்கு யாரின் ஆதரவும் இல்லாமல் தன் கனவினை நோக்கி பயணித்த அனுபவம் வாய்ந்த வாழ்க்கை. சான்சிலர் பதவி கிடைத்தும் தான் இருக்கும் இடத்தை தக்க வைக்க ஓயாத உழைப்பு, மக்களை தன் பக்கம் ஈர்க்கும் வசீகர பேச்சாற்றல், இராஜதந்திரி, பத்திரிக்கையாளர் அடுக்கிக்கொண்டே போகலாம்... பல இடங்களில் ஒரு சூப்பர் ஹீரோவாகத் தான் காட்சியளிக்கிறார். இந்தப் புத்தகம் படித்து முடித்தவுடன், ஹிட்லர் பற்றிய செய்திகளை ஒரு மாதத்திற்காவது வாசகர்கள் தேடித்தேடி படிப்பார்கள் என்று சொல்லலாம். 

இவ்வளவு நல்லவரா என்று நினைக்கும்போது தான் அத்தனை அத்துமீறல்களும் அரங்கேறுகின்றன. திட்டமிட்டு செயல்பட்டு ஒவ்வொரு நாட்டையும் நாட்டு மக்களையும் சிறைபிடித்து சித்திரவதை செய்து அவர்களுக்கு மரணபயத்தை கண்ணில் காட்டிய யமன் என்று தான் சொல்ல வேண்டும்.  இதற்கெல்லாம் பெரும் காரணம் மண்ணாசை தான் என்று வரலாறு நமக்கு சொல்லிக்கொடுத்தாலும், அவருக்கு யூதர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி, அவரைச் சுற்றி இருந்த  துரோகிகள், நயவஞ்சகர்களும் காரணம் என்றால் மறுக்கமுடியாது. (காலகாலமாக தலைமையில் இருப்பவர்களுக்கு, அடுத்தத் தலைமுறைக்கு தலைமையைத் தர தயக்கம் / வெறுப்பு இருந்து வருகிறது போல).  பெரும்பாலான நேரம் தன்னுடைய அராஜக அதிகாரத்தின் மூலம் இந்த உலகத்தை கட்டுக்குள் வைத்திருந்த யூபர் ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற செய்தியைப் படித்தவுடன் நெஞ்சம் கனப்பதை தவிர்க்கமுடியவில்லை.


ஒப்பந்தங்கள் - சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய நாடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டன. அத்தனைக்கும் இரண்டு ஒற்றுமைகள் - ஒன்று இவையனைத்தும் சடலங்கள் மீது போடப்பட்ட சமாதான ஒப்பந்தங்கள் - இன்னொன்று எவையுமே பின்பற்றபடவில்லை. அப்பறம் எதற்கு ஒப்பந்தம் என்பது தான் இந்தப் புத்தகத்தில் அடுத்து அதிகம் சொல்லப்பட்ட சுவாரஸ்யமான செய்திகள்.  தன்னோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்ட எந்த நாடும் முன்னேறிவிடக்கூடாது, என்பதில் வல்லரசு என்று தன்னைத்தானே பிரகடனம் செய்துகொண்ட நாடுகள்  அத்தனையும் அதிக அக்கறை செலுத்தியது.  அவ்வளவு வன்மம் - அவ்வளவு அநீதி.   வாழ்க்கை என்பது வெறும் துயரங்களின் அணிவகுப்பு என்று இந்தக்காலத்தில் நினைப்பவர்கள், அன்று இந்த நயவஞ்சகர்களிடம் சிக்கி தவித்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொண்டால்,  வாழ்க்கைப் பற்றியப்  பார்வை மாறிவிடும் என்பது உறுதி. 

புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு நாடும் இராணுவத்திற்கு எப்படி, எத்தனை ஆட்கள் சேர்த்தன, ஆள் சேர்ப்பதில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவந்தன, போருக்கு என்னென்ன யுக்திகள் (strategies) பயன்படுத்தப்பட்டன, எத்தனை நாடுகள் பங்கேற்றன, எத்தனை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன, ஒவ்வொரு போரிலும் எத்தனை பேர் மாண்டார்கள்,  எத்தனை டேங்கர்கள் பயன்படுத்தப்பட்டன, வெற்றிபெற்ற நாடு அதன் இராணுவத்தினருக்கு என்னென்ன பதக்கங்கள் வழங்கின,  என்பதைப் பற்றியெல்லாம் பிரித்து மேய்ந்திருக்கிறார் ஆசிரியர்.

முதல் உலகப்போரில் தொடங்கி, இரண்டாம் உலகப் போர் முடிந்து சில காலம் வரை நடந்த அத்தனை முக்கியமான நிகழ்வுகளையும் ஒரு ஐந்து பக்கத்திற்குள், தேதி வாரியாக அடுக்கியிருப்பது நிறைய பேச்சாளர்களுக்கு / எழுத்தாளர்களுக்கு ஒரு quick reference guide என்று சொல்லலாம். தான் சொன்ன வரலாற்று தகவலுக்கான ஆதாரங்களையும் அடுக்க மறக்கவில்லை ஆசிரியர். மொத்தத்தில் கண் இமைப்பதற்குள் சேதங்கள் நிகழ்ந்துவிட்டன என்று சொல்ல முடியாதபடி, வடிவேலு சொல்வதைப் போல் அத்தனையும் plan பண்ணி செய்யனும்னு வெச்சிசெஞ்ச போர் தான், இரண்டாம் உலகப் போர் என்பதை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் ஆசிரியர். 

Friday, December 15, 2017

அருவி

முதல் திரைப்படம் என்று சொல்வதை விட முத்திரை பதித்த திரைப்படம் இவர்களுக்கு என்று இயக்குனர் திரு அருண் பிரபு புருஷோத்தமன் அவர்களுக்கும்,  படத்தின் நாயகி அதித்தி பாலனுக்கும் ஒரு சபாஷ் போட வேண்டிய படம் "அருவி"
Image result for aruvi movie poster



சர்வதேச பனோரமா பிரிவு விருது, ஷாங்காய் அனைத்துலக திரைப்பட விழாவின் விருது என்று  பல விருதுகளை, வெளியாவதற்கு முன்பே பெற்றுள்ள திரைப்படம்பிரதான கதாபாத்திரமான அருவிக்கு மட்டுமில்லாமல் திரைப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. (Rolling  Sir என்ற வசனத்தை கடைசி 1 மணி நேரத்தில் பார்வையாளர்களையும் ஒவ்வொரு இடத்திலும் கதாபாத்திரத்தோடு சேர்த்து சொல்ல வைத்தது இயக்குனரின் வெற்றி). கதாபாத்திரத்துக்கு பொருந்தும்  திருநங்கை உள்பட  எளிய மனிதர்களையே திரைப்படம் முழுக்க பார்க்க முடிகின்றது. 

கதையும் கதை சொல்லவந்த விதமும் ஒருவித எதிர்பார்ப்பை கண்டிப்பாக உண்டாக்குகிறது. அடுத்து என்ன நடக்கும் என்று ஓரிடத்திலும் சொல்ல முடியாத ஒரு விறுவிறுப்பு. அழவைத்துவிடுவார் என்று நினைக்கும் இடத்தில்  வயறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைத்து, சிரிப்பு வர வேண்டிய இடம் என்று நினைத்தால் அழவைத்துவிடுகிறார்கள் கதாப்பாத்திரங்கள்.  முக்கியமாக, அருவி, தன்னை படம் முழுவதும் மிகவும் வருத்திக்கொண்டு  வெகு இயல்பாக வெறும் முகபாவத்தை வைத்தே கடைசி வரை நம்மை மிரட்டுகிறார். இவரைப் போன்ற திறமைசாலிகளை, நமக்கு பார்க்க மட்டும் இல்லை  - பார்க்கப்  பார்க்கவும் பிடிக்கும். 

படத்தின் கதாநாயகி அருவி பேசக்கூடிய விஷயம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு வசனமும்  கைதட்டலை பெறுகிறது.  "போலீஸ் கிட்டே புடிச்சி குடுத்துடுவியா ? அங்கே கூட எய்ட்ஸ் பேஷண்ட்க்கு இடம் கிடையாது", "தப்பு செஞ்சவங்களை மன்னிப்பு கேக்க சொல்லாம, பாதிக்கப்பட்ட என்னை கேள்விகேட்டு உங்க TRP ரேட்டிங்க ஏத்திக்கறீங்களே", "இந்த நோய் வந்துட்டா கண்டிப்பா, தகாத உடலுறவு தான் காரணம்னு சொல்லி பெத்த அம்மா அப்பாவே வெறுத்துடுவாங்க" போன்ற வசனங்கள் மூலம் இயக்குனரின் சமுதாய அக்கறை தெரிகிறது.

இதில் வரும் பாடல்கள் கேட்கும்போது நன்றாக இருக்கிறது. பிறகு மனதில் ஏனோ நிற்கவில்லை. சமுதாயத்தை பழி வாங்குகிறாள் அருவி என்று தெரிந்தாலும் அதுதான் அவளின் நோக்கமா என்று இன்னும் ஆணித்தரமாக சொல்லியிருக்கலாம். சின்ன படத்தை நீட்டியிருக்கிறார்கள்  என்று ஆங்காங்கே (முக்கியமாக கடைசி காட்சிகளில்)  தோன்றினாலும் படத்தின் பல நல்ல விஷயங்கள் அதை சொல்ல விடாமல் செய்கிறது என்பதே நிதர்சனம்.  


புதிய முயற்சியை ஊக்குவிக்கவும், புதிய முகங்களை வரவேற்கவும் இந்தப் படம் திரையரங்கில் போய் பார்க்கவேண்டிய படம். 

Thursday, December 7, 2017

உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81

புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை அப்படியே எடுத்து எழுதி 'இதைக் குறிப்பிடுகிறார், அதைச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார் என்று சொல்லாமல், நம் வாசிப்பு அனுபவத்தையும் கலந்து, நம்முடைய எண்ணங்களையும் சேர்த்து பதிவிடுதல் முக்கியம் என்று ஒருவர் எனக்கு ஒரு கருத்தைத்  தெரிவித்தார். புத்தகத்தில் உள்ளதை மட்டும் எழுதுவதை விட புத்தகம் உங்கள் வாழ்வில் எப்படி இருக்கிறது என்ன பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும்  எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று எனக்கும் தோன்றியது.  

ஒவ்வொருவரும் தன் வாழ்ந்த / வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனுபவத்தையும், வாழ நினைக்கிற எண்ணத்தையும் பொறுத்துதான் எந்த புத்தகத்தையம்  அணுகுவார்கள்.

இந்த இரண்டு எண்ணங்களின்  அடிப்படையில் தான் தோழி ரமா சுரேஷ் எழுதி, எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின் ‘மோக்லி’ பதிப்பகம் வெளியிட்ட உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81  என்ற 13 சிறுகதைகள் கொண்ட புத்தகத்தைப் பற்றிய எனது பார்வை இருக்க போகிறது..



நம் வாழ்வில் சிலரைப் பார்த்தவுடன் மறந்துவிடுவோம். சிலரை மறக்கவே முடியாது ஆனால் மீண்டும் சந்திக்க (நினைக்க) மாட்டோம். சிலரை அடிக்கடி பார்த்தாலும் அவரோடு பேசவோ பழகவோ மாட்டோம். இப்படி அன்றாடம் வாழ்வில் பார்க்கும் பலரை சில வரையறையில் கொண்டுவந்து விடலாம். அப்படி நாம் வாழ்வில், MRTயில், பூங்காவில், Food Court ல் மற்றும் பல இடங்களில் பார்த்த வெவ்வேறு கதாபாத்திரங்களை மீண்டும் நம் கண் முன்னே கொண்டு வந்து நடமாட விட்டிருப்பது நூலாசிரியரின் வெற்றி. 

அடுத்த வெற்றியாக நான் பார்ப்பது, பெரும்பாலான கதைகளின் நாயகன், நாயகி, கதாபாத்திரங்கள் அனைத்தும்  "அவன்" "அவள்" என்றே பெயரிடப்பட்டிருப்பது. இந்த 13 கதைகளில்  வந்த பெரும்பாலான அவனும் அவளும் நமக்கு ரொம்ப பழக்கப்பட்டவர்கள் என்ற உணர்வை கண்டிப்பாக ஏற்படுத்த்தும்.  குறிப்பாக, "டிஷ்யூ சூ ப்வூ", பூனைக்கிழவி,  சாப்பாட்டு கடையில் இருக்கும் "அவள்", ஆகியோரை நாம் நிச்சயம் பாத்திருப்போம். இந்த புத்தகம் படித்த மறுநாள் நான் EXPO MRT யில் எப்போதும் பார்க்கும் டிஷ்யூ விற்பவர் டிஷ்யூ சூ ப்வூ வாகத் தான் தெரிந்தார். ஏன்.. வண்டியில் ஐஸ்கிரீம் விற்பவரிடம் "அண்டே" வைப் பார்க்க முடிந்தது என்னால்.

பல இடங்களில் நூலாசிரியரின் சமூக அக்கறையை அவனும் அவளும் பேசி இருக்கிறார்கள். "இங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரச்சனை இருக்கு. அதைப் பத்தி பேசினா வேலைய யார் பாக்கறது?" என்று முதலாளி சொல்வதுபோல் இருந்தாலும் அதை கேட்காத தொழிலாளிகள் இருக்க மாட்டார்கள். "நீ பயப்படற மாதிரி வாழ்க்கை ஒன்னும் குழப்பமானதில்லடா இயல்பா இரு. சந்தோசமா இரு."  இது  ஒரு கதையில் மாறனுக்கு அவன் அண்ணன் சொல்ல நினைத்தது போல இருந்தாலும் நமக்கு பலர் சொல்லிய /  நாம் சிலருக்கு சொல்ல நினைத்த வரிகள். பணிப்பெண்ணை மிகுந்த மரியாதையோடு நடத்தவேண்டிய அவசியத்தை கதையில் சொன்னாலும், தான் வளர்க்கும் செல்லப்பிராணிக்காக ஒரு பணிப்பெண்ணையே  அமர்த்தும் சமுதாயம் இருக்கிறது - அதில் வரும் அந்த செல்லப்பிராணி முதலாளியை விட இந்த பணிப்பெண்ணின் மீது அதிக அக்கறை வைத்திருக்கிறது என்பது போல் சித்தரித்து இருப்பது நச்! 


கொடிது கொடிது தனிமை கொடிது அதைவிட கொடிது இளமையில் தனிமை (ஆம் சற்று மாற்றியிருக்கிறேன்) என்பதை பல கதை வழி தெரிவித்து இருக்கிறார் கதாசிரியர்.  பல நேரங்களில் நமக்கு தெரிந்தவர்கள் மாயாவாக மாறிய  சூழ்நிலையும், நாமே கூட எல்லா கஷ்டங்களையும் பார்த்து மரத்துப்போன மாயாவாக மாறிய சூழ்நிலையையும் பார்த்திருப்போம். சமுதாயத்தில் தனக்காக வாழாமல் தன் குறைகளை மறைத்து யாருக்காகவோ தன் வாழ்க்கையை வாழ நினைப்பவர்களைச் சாரல் கதையில் நல்ல படம் பிடித்திருக்கிறார். வுட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81ல் வாழ்க்கைப் பயணம் நடத்தி அந்த சாலையில் இருந்து தன் உலகத்தை பிரிக்கமுடியாமல் இருக்கும் அவனைப் போலவே சில வீதிகளில் நிச்சயம் நாம் நம் தனிமையோடு நடந்திருப்போம் அப்படி நடந்தவர்களுக்கு இந்தக் கதை ஒரு மலரும் நினைவுகள். 

மயிலி கதையில் எதிர்பாராத திருப்பம் தான். 'கொஞ்சமா குடி மாமா..முதல் முதல்லா குடிக்கும்போது வாந்தி மயக்கம் வரும் பாத்துக்குடி’  என்று சொல்வதை சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் குடும்பத்துக்காக உழைத்த மாமாவை கல்யாணம் செய்துகொள்ளும் சராசரி மயிலாகத் தான் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர் என்று தோன்றுகிறது. "தகவமை" கதை சற்று புரியவில்லை. இரண்டு மூன்று கதைகள் படிக்க மிகவும் நன்றாக இருக்கிறது. படிக்கும்போது நிகழ்வுகள் கண் முன்னே வருகின்றன. ஆனால் இளையராஜா பாடல்களில் வரும் BGM  போல மனதை தைக்கவில்லை. 


மொத்தத்தில் துணிச்சலான, யதார்த்தமான, நாம் அன்றாடம் பார்ப்பவர்களை வேறு கோணத்தில் பார்க்க போகவேண்டிய இடம்  இந்த வுட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81.




Alex Stand up comedy

கார்ப்பரேட் உலகத்துல பாக்காத மன அழுத்தமா? . இந்த காலத்துல எங்கே பாத்தாலும் நம்ம மனம் நோகும்படி நடக்கற விஷங்கள் மட்டுமே நமக்குத் தெரிகின்றன. நம்மைச்சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நம்மைக் காயப்படுத்தும் நோக்கோடு இருக்கிறார்கள் என்று எப்போதும் ஒரு எண்ணம். அந்த காலப் திரைப்படப் பாடலில் இருந்த பொருள் இந்தக் காலப் பாடலில் இல்லை. வீட்டில் , நண்பர்களுடன், அலுவலகம் என்று யாருடன் எங்கு இருந்தாலும் நாம் பார்ப்பது அனைத்தும் மனஅழுத்தம் தரும் செய்திகளாகப் பார்த்தால் நமக்கு மிஞ்சுவது எல்லாம் மன அழுத்தம் தான். இப்படி எதுவும் வருத்தம், எல்லாவற்றிலும் வருத்தம், என்று இருபவர்களாகி விட்டோம் நம்மில் சிலர். 

அப்படி மனவருத்தம் அதிகம் இருக்கும் நேரத்தில் நிறைய பேருக்கு மன ஆறுதலாக அமைவது திரையிசைப் பாடல்கள்தான். அதிலும் 70களில் , 80களில் வந்த பாடல் என்றால் யாருக்குத்தான் மன அமைதி கிடைக்காது. MS விஸ்வநாதன், இளையராஜா, AR ரஹ்மான், வித்யாசாகர் என்று அனைத்து இசையமைப்பாளர்களின் பாடல்கள் தொடங்கி, நாம் அன்றாடம் கேட்கும் பாடல்களில் கூட மனதிற்கு இதமான நகைச்சுவை கிடைக்கும் என சான்று காட்டிய நிகழ்ச்சி. மன அழுத்தம் இல்லாமல் மனதார சிரிச்சு ரசித்த நிகழ்ச்சி.



40 வயதில் இருப்பவர்க்ளில் 99 சதவீதம் பேர் சுமார் 1000 முறை கேட்டிருக்க கூடிய 30 , 40 திரைப்பட பாடல்களைப் பாடி, அதனுள் இவ்வளவு நகைச்சுவை இருக்கா என்று வியக்க வைத்த நிகழ்ச்சி. அந்த அளவிற்கு நகைச்சுவைகளை அள்ளித்தந்து, சுருதி விலகாமல் பாடி, இனி வாழ்வில் இந்த பாடல்களை, பாதி தூக்கத்தில் கேட்டாலும் இவர் அந்தப் பாடலைப் பற்றி சொன்ன நகைச்சுவை தான் நம் நினைவில் இருக்கும்.

கர்ணன் திரைப்படத்தில் வரக்கூடிய, உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற உணர்வுப்பூர்வமான பாடலை கூட இவ்வளவு நகைச்சுவையாக பார்க்க முடியுமா என்ற அளவிற்கு 10 நிமிடம் இடைவிடா நகைச்சுவை... இதில் முக்கியமான விஷயம் — நடித்த சிவாஜி, பாடிய சீர்காழி கோவிந்தராசன், அதில் மறைந்துள்ள இறைமை எதையுமே கிண்டல், நக்கல், நையாண்டி செய்யாமல் நகைச்சுவை கூறியது — இவர், தான் கற்றுக்கொண்ட இசையின் மீது வைத்திருந்த மரியாதையைத் தான் காட்டுகிறது.

இவரின் இந்த நகைச்சுவையைக் கேட்ட பிறகு இந்தப் பாடலைக் கேட்டால் பாட்டை ரசிப்பதா, இவரின் நகைச்சுவையை நினைத்து சிரிப்பதா என்ற பட்டிமன்றம் தான் இனி என் மனதில் ஓடும். பேச்சில் தரமுள்ள நகைச்சுவையின் தேவை, யார் மனமும் நோகாமல் ஒரு நகைச்சுவைப் பேச்சினை எப்படி தயார் செய்வது என்று இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து கற்றுகொள்ளலாம்.
இவரின் ஆரம்ப கால நகைச்சுவை சிலவற்றை கேட்டிருக்கிறேன். நேற்றைய நகைச்சுவையைக் கேட்ட பிறகு திறமை மட்டும் ஒருவரை முன்னேற்றிவிடாது. உழைப்பும் அவசியம் என்பது தெள்ளத் தெளிவு.  வெறும் stand-up comedy என்று 4-5 நகைச்சுவை துணுக்குகளைச் சொல்லாமல், சாலையில் தக்க பாதுகாப்போடு வண்டி ஓட்டுவதன் அவசியம், போட்டி மனப்பான்மை எவ்வாறு வாழ்வை புரட்டிப் போடுகிறது, உண்மை ஒன்றே - கடவுள் ஒன்றே என்ற சிந்தனையெல்லாம் அவ்வப்போது சொல்லி, 105 நிமிடம் பார்வையாளர்களை பாடி, ஆடி, பல்வேறு இசைக்கருவிகளை வாசித்து கட்டுப்படுத்தினார் பாட்டும், கருத்தும், நகைச்சுவையும் மாறி மாறி அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தது. எதுவும் வலிந்து திணிக்கப்படவில்லை.

இவர் சொன்ன நகைச்சுவை சிலவற்றை இங்கு நான் சொல்லாமல் போவதற்கு மூன்று காரணங்கள்.
1. எனக்கு அவரைப்போல் நகைச்சுவை சொல்ல வராது.
2. இது போன்ற நிகழ்ச்சிகளை அனைவரும் போய், பார்த்து, ரசித்து அனுபவித்தால்தான் கலை வளரும். கலைஞர்கள் வளருவார்கள்.
3. இதுபோல் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயத்தில் நகைச்சுவையைக் கண்டெடுத்து என் சொந்த நகைச்சுவையோடு எப்போதாவது சந்திப்போம்.