புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை அப்படியே எடுத்து எழுதி 'இதைக் குறிப்பிடுகிறார், அதைச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார் என்று சொல்லாமல், நம் வாசிப்பு அனுபவத்தையும் கலந்து, நம்முடைய எண்ணங்களையும் சேர்த்து பதிவிடுதல் முக்கியம் என்று ஒருவர் எனக்கு ஒரு கருத்தைத் தெரிவித்தார். புத்தகத்தில் உள்ளதை மட்டும் எழுதுவதை விட புத்தகம் உங்கள் வாழ்வில் எப்படி இருக்கிறது என்ன பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று எனக்கும் தோன்றியது.
ஒவ்வொருவரும் தன் வாழ்ந்த / வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனுபவத்தையும், வாழ நினைக்கிற எண்ணத்தையும் பொறுத்துதான் எந்த புத்தகத்தையம் அணுகுவார்கள்.
இந்த இரண்டு எண்ணங்களின் அடிப்படையில் தான் தோழி ரமா சுரேஷ் எழுதி, எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின் ‘மோக்லி’ பதிப்பகம் வெளியிட்ட உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 என்ற 13 சிறுகதைகள் கொண்ட புத்தகத்தைப் பற்றிய எனது பார்வை இருக்க போகிறது..
இந்த இரண்டு எண்ணங்களின் அடிப்படையில் தான் தோழி ரமா சுரேஷ் எழுதி, எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின் ‘மோக்லி’ பதிப்பகம் வெளியிட்ட உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 என்ற 13 சிறுகதைகள் கொண்ட புத்தகத்தைப் பற்றிய எனது பார்வை இருக்க போகிறது..
நம் வாழ்வில் சிலரைப் பார்த்தவுடன் மறந்துவிடுவோம். சிலரை மறக்கவே முடியாது ஆனால் மீண்டும் சந்திக்க (நினைக்க) மாட்டோம். சிலரை அடிக்கடி பார்த்தாலும் அவரோடு பேசவோ பழகவோ மாட்டோம். இப்படி அன்றாடம் வாழ்வில் பார்க்கும் பலரை சில வரையறையில் கொண்டுவந்து விடலாம். அப்படி நாம் வாழ்வில், MRTயில், பூங்காவில், Food Court ல் மற்றும் பல இடங்களில் பார்த்த வெவ்வேறு கதாபாத்திரங்களை மீண்டும் நம் கண் முன்னே கொண்டு வந்து நடமாட விட்டிருப்பது நூலாசிரியரின் வெற்றி.
அடுத்த வெற்றியாக நான் பார்ப்பது, பெரும்பாலான கதைகளின் நாயகன், நாயகி, கதாபாத்திரங்கள் அனைத்தும் "அவன்" "அவள்" என்றே பெயரிடப்பட்டிருப்பது. இந்த 13 கதைகளில் வந்த பெரும்பாலான அவனும் அவளும் நமக்கு ரொம்ப பழக்கப்பட்டவர்கள் என்ற உணர்வை கண்டிப்பாக ஏற்படுத்த்தும். குறிப்பாக, "டிஷ்யூ சூ ப்வூ", பூனைக்கிழவி, சாப்பாட்டு கடையில் இருக்கும் "அவள்", ஆகியோரை நாம் நிச்சயம் பாத்திருப்போம். இந்த புத்தகம் படித்த மறுநாள் நான் EXPO MRT யில் எப்போதும் பார்க்கும் டிஷ்யூ விற்பவர் டிஷ்யூ சூ ப்வூ வாகத் தான் தெரிந்தார். ஏன்.. வண்டியில் ஐஸ்கிரீம் விற்பவரிடம் "அண்டே" வைப் பார்க்க முடிந்தது என்னால்.
பல இடங்களில் நூலாசிரியரின் சமூக அக்கறையை அவனும் அவளும் பேசி இருக்கிறார்கள். "இங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரச்சனை இருக்கு. அதைப் பத்தி பேசினா வேலைய யார் பாக்கறது?" என்று முதலாளி சொல்வதுபோல் இருந்தாலும் அதை கேட்காத தொழிலாளிகள் இருக்க மாட்டார்கள். "நீ பயப்படற மாதிரி வாழ்க்கை ஒன்னும் குழப்பமானதில்லடா இயல்பா இரு. சந்தோசமா இரு." இது ஒரு கதையில் மாறனுக்கு அவன் அண்ணன் சொல்ல நினைத்தது போல இருந்தாலும் நமக்கு பலர் சொல்லிய / நாம் சிலருக்கு சொல்ல நினைத்த வரிகள். பணிப்பெண்ணை மிகுந்த மரியாதையோடு நடத்தவேண்டிய அவசியத்தை கதையில் சொன்னாலும், தான் வளர்க்கும் செல்லப்பிராணிக்காக ஒரு பணிப்பெண்ணையே அமர்த்தும் சமுதாயம் இருக்கிறது - அதில் வரும் அந்த செல்லப்பிராணி முதலாளியை விட இந்த பணிப்பெண்ணின் மீது அதிக அக்கறை வைத்திருக்கிறது என்பது போல் சித்தரித்து இருப்பது நச்!
கொடிது கொடிது தனிமை கொடிது அதைவிட கொடிது இளமையில் தனிமை (ஆம் சற்று மாற்றியிருக்கிறேன்) என்பதை பல கதை வழி தெரிவித்து இருக்கிறார் கதாசிரியர். பல நேரங்களில் நமக்கு தெரிந்தவர்கள் மாயாவாக மாறிய சூழ்நிலையும், நாமே கூட எல்லா கஷ்டங்களையும் பார்த்து மரத்துப்போன மாயாவாக மாறிய சூழ்நிலையையும் பார்த்திருப்போம். சமுதாயத்தில் தனக்காக வாழாமல் தன் குறைகளை மறைத்து யாருக்காகவோ தன் வாழ்க்கையை வாழ நினைப்பவர்களைச் சாரல் கதையில் நல்ல படம் பிடித்திருக்கிறார். வுட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81ல் வாழ்க்கைப் பயணம் நடத்தி அந்த சாலையில் இருந்து தன் உலகத்தை பிரிக்கமுடியாமல் இருக்கும் அவனைப் போலவே சில வீதிகளில் நிச்சயம் நாம் நம் தனிமையோடு நடந்திருப்போம் அப்படி நடந்தவர்களுக்கு இந்தக் கதை ஒரு மலரும் நினைவுகள்.
மயிலி கதையில் எதிர்பாராத திருப்பம் தான். 'கொஞ்சமா குடி மாமா..முதல் முதல்லா குடிக்கும்போது வாந்தி மயக்கம் வரும் பாத்துக்குடி’ என்று சொல்வதை சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் குடும்பத்துக்காக உழைத்த மாமாவை கல்யாணம் செய்துகொள்ளும் சராசரி மயிலாகத் தான் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர் என்று தோன்றுகிறது. "தகவமை" கதை சற்று புரியவில்லை. இரண்டு மூன்று கதைகள் படிக்க மிகவும் நன்றாக இருக்கிறது. படிக்கும்போது நிகழ்வுகள் கண் முன்னே வருகின்றன. ஆனால் இளையராஜா பாடல்களில் வரும் BGM போல மனதை தைக்கவில்லை.
மொத்தத்தில் துணிச்சலான, யதார்த்தமான, நாம் அன்றாடம் பார்ப்பவர்களை வேறு கோணத்தில் பார்க்க போகவேண்டிய இடம் இந்த வுட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81.
No comments:
Post a Comment